புதியவை

இடை வெளிகளின் தூரம்.ரோஷான் ஏ.ஜிப்ரி.பிரிவின் கணங்கள்
புரட்டி விடுகிறது படுக்கையை
விலகிய போர்வையை சரிசெய்தபடி
ஆளமாய் மூழ்குகிறேன்
தென்கிழக்கு கடற்கரை
தென்படும் திசை
விரிகிறது என் விழித்திரையில்..

பனிப் பாறைகளை
உருக்கித் தணிக்கும்
கதிர் கூட்டங்கள் ஏந்திய பகலோன்
மாலையின் மேற்கு மலையில்
மயங்கி விழ
வித்துக்குள்ளிருக்கும் பெருங் காட்டை
பச்சை வெளியை
பூமிக்கு பரீட்சையமாக்க முனைந்து
சிறு தூறல் சிணுங்குகிறது
மண்ணிடம் மடிப்பால் கேட்டு

குளிர்
காயாத கைக் குட்டையால்
முகம் வருட
சில்லறை நாணயங்களை
சிதறி விடும் சிரிப்பின் முன்
கொலுசணிந்த உன் பாதங்கள்
தோற்றுத் திரும்பும் மாலையில்
நாம் கை கொர்த்தபடி
நடை பயணியாகிறோம்

இரவுக் கரிச்சட்டியில்
நிலாப் பால் பிழிந்து
பௌர்ணமி ஆணங்காய்ச்ச
புன்னகை இலைக் கறியை
பிய்த்துப் போட்டாய்
கடற்கரை மணலெங்கும்-மன
கறி வாசம்

அலையின் ஸ்பரிச
காதல் லீலைகளை சமீபித்தபடி
உன் மனதில் நான் நண்டு பிடிக்க
இது கனவென்று
புலனாகிறபோது
மனசு கனக்கிறது
பெரும் பாறையை சுமந்தபடி!

ரோஷான் ஏ.ஜிப்ரி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.