புதியவை

தாயின் பூபாளம் -கிருஷ்.ராமதாஸ், துபாய் [ பெரம்பலூர் ]
நெஞ்சு குழி மஞ்சத்திலே, பஞ்சு பூ போல
பொத்தி பொத்தி வளர்த்தேனே என் செல்ல மகளே
சேலையிலே தலை துருத்தி செந்தமிழில் வாய் திறந்த
என் செல்வ மகளே, என் செல்ல மகளே
                    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ.

தாத்தா தூக்கவில்லை, பாட்டியும் பார்க்கவில்லை,
அத்தை அண்டவில்லை, அண்ணன்களும் உனக்கு இல்லை
சின்னசாமி தாத்தா சீரான பாட்டு பாட – தாலாட்டு பாட்டு பாட
ஓயாத அழுகையையும் ஒத்தி வைத்தாய் 
என் செல்ல மகளே, என் செல்வ மகளே
                     ஆராரோ ஆரிராரோ

பாவப்பட்ட பூமியிலே, பணத்தாசை மனிதர்களால்
காயப்பட்ட இதயத்துடன் களம் தேடி பறந்தோமே செல்லகிளியே
புதிய இடம் தேடி பறந்தோமே 
என் செல்லகிளியே, என் செல்வகிளியே
                     ஆராரோ ஆரிராரோ 

அன்பான அப்பா அயல் நாட்டில் இருந்தாலும், அலை பாயும் மனசோடு 
அன்றாடம் உனை நினைத்து, அலை பேசி உதவியுடன் 
இதயத்தை [நம்மோடு] இணைத்து, அன்பை, பண்பை,பாசத்தை,ஆசையை, 
வார்த்தைகளால் வர்ணித்து உனை வாரி அணைத்தாரே 
என் செல்ல மகளே, செல்வ மகளே
                      ஆராரோ ஆரிராரோ


வஞ்சிக்கும் இதயங்கள் வாழ்த்தும் நாள் வந்திடும்
சின்ன குயிலாய் நீ சிறகடித்து பாட்டிசைக்க
வானத்து பூக்களெல்லாம் வாழ்க என உனை வாழ்த்தும்
அன்பான அப்பா உன்னை அள்ளி முத்தமிடும் நாளும் வந்துவிடும்
சிங்காரமே, சின்னக்கிளியே, செல்லமே,
சிரித்த முகத்துடன் சின்னதாய் தூக்கம் போடு என் செல்லக்கிளியே
                       ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
-

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.