புதியவை

தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவது.--ஷைலஜாநாராயணன்




பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.
அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும்,
தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.
ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .
அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.
மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
வாய் - சுவை மந்திரி
கண்-காட்சி மந்திரி
மூக்கு- நுகர்ச்சி மந்திரி
செவி- கேள்வி மந்திரி
அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!
அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ' சல்சல் ' என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!
இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.
இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.
யார் அந்தப்புலவர்?
அவர்தான் புகழேந்தி!
யார் அந்த மகாராணி?
நளனின் மனைவி தமயந்தி!
'இக்காட்சி’ தரப்படுவது நளவெண்பாவில்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு!'
(மகளிர்தினம் மார்ச்8)

Shylaja Narayan

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.