புதியவை

இன்றைய வீட்டுத் தோட்டம்! (எழுசீர் ஆசிரிய விருத்தம்) --ரமணி,


(கருவிளம் விளம் மா விளம் . விளம் மா காய்)

செடிகொடி மலருடன் நெகிழிப் பைகளில்
. திண்ணையில் அமர்ந்தே உரையாடும்
மடிவரும் வண்டுகள் வண்ண மலருடன்
. மாலையின் ஓய்வில் உறவாடும்
அடிவரும் மண்ணுடன் தேங்காய் நாரென
. அமைந்திட விளையும் நிறைவோடு
கடிமலர் வகைபல கண்ணும் கருத்தெனக்
. காதலில் இறைவன் முறையோடும்! 



(தேமா மா விளம் மா . மா விளம் காய்)

ஓட்டு வண்ணத் தொட்டிகள் பலவும்
. ஒண்டுக் குடித்தனம் திண்ணையிலே
நாட்டு மண்போய்த் தொட்டிகள் இன்று
. நாடும் நெகிழியின் வண்ணமென!
வாட்டும் வெயிலில் காய்கறிச் செடிகள்
. வளரும் பலவிதத் தளதளப்பில் 
காட்டுச் செடிகள் தொட்டியில் நிறைந்தே
. காலம் முழுவதும் பளபளப்பே! 


(கருவிளம் மா விளம் மா . விளம் மா காய்)

கிடைநிலைப் பந்தல் போனது இன்று
. கிடுகிடு வென்றே சுவரேறும்
நெடுநிலைப் பந்தல் ஆனது யாவும்
. நெகிழியின் பின்னல் கயிறாக
உடைகசங் காமல் உறைகொளும் கையால்
. உழுதிடத் தேங்காய் நார்புரளும்
கடைகளில் வாங்கும் உரத்துடன் பையில்
. காசுகள் செலவில் சீர்வளரும்! .



(கருவிளம் விளம் மா மா . மா மா காய்)

விதைகளில் மரபணு மாற்றம் செய்தே
. விளைச்சல் இரண்டு பங்காக
விதைவரும் செடிகொடி பூத்துக் காய்த்தால்
. மீண்டும் விதைகள் தங்காது
விதைகளை மறுபடி வாங்கப் பலவாய்
. விளையும் இணைய வளர்ப்பகமே
விதைகளைப் புதைப்பதில் சிலவே முளைத்து
. மீண்டும் வாங்கிடத் தளர்வுறுமே. 

(கூவிளம் மா விளம் மா . மா மா காய்)

இத்தகு இன்னல் மோசடி யென்றே
. இருந்தும் வீட்டுத் தோட்டத்தில்
மெத்தனம் இன்றி உழைத்திடில் வாழ்வில்
. விளையும் பலன்கள் ஊட்டத்தில்
சத்துண வாகி உடலுடன் மனமும்
. திண்ணம் என்னும் பயில்வருமே
அத்துடன் இயற்கை அழகினில் ஒன்றும்
. அமைதி தங்கும் துயில்வருமே! ... 





No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.