புதியவை

மருதூரின் பீச் பார்க்*** டாக்டர் ஆரிப் ***


இயற்கை அவனின் அருட்கொடை சூரியன் உதிக்கும் கிழக்கிலே நீலவர்ண வங்கக் கடல் சூரியன் மறையும் மேற்கிலே பச்சைப் பசேலென வயல்வெளி.
சுற்றி வர சில சதுர கிலோமீட்டர்கள் பொங்கி வழிந்திடும் சனத்தொகை தள்ளிப் போக மனமில்லாமல் கூடவே ஒன்றாய் வாழ்ந்திடவே மனசெல்லாம் அன்பு வெள்ளம்.
நிலவில் முற்றத்திலுறங்கிய காலம் போய் முற்றமா அப்படியென்றால் என்னென்று கேட்கும் காலத்தில் இன்றைய சந்ததிகள் கதவைத் திறந்தால் முட்டிடும் வாகனம் சென்ரிமீற்றரிலுமில்லையே முற்றம்.
மூச்சு விடக்கூட இடமில்லை இங்கே காற்று வாங்கப் போகலாமென்றால் பீச் பார்க்காம் இலட்சங்கள் செலவாம் இருந்த கடற்கரையும் இல்லை இப்போ யார் தான் உள்ளனர் கேட்க இப்போ.
இலட்சங்கள் மண்ணோடு மண்ணாய் உட்கார இடமில்லாமல் போனதே மிச்சம் இனி எத்தனை தடவைகள் திருத்துவார் அதில் எத்தனை பேர் குளிர் காய்வார் இதுவுமொரு மருதூரின் தொடர்கதை.
காற்று வாங்க உட்கார மனமகிழ மிஞ்சிப்போனால் நூற்றைம்பது மீட்டர் கடற்கரை தான் இருப்பதோ அதைக் கூட அழகாய் வைத்திட நாதியற்றவர்களாய் நம்மவர்கள்.
பெற்றோல் டீசலுக்கு காசு கொடுத்து முச்சக்கர வண்டிகளில் ஏறியிறங்கி பல மைல்கள் செல்கிறோம் நாம் உட்கார்ந்து இளைப்பாற மண் தேடி முற்றத்து மண்ணை குப்பையாக்கி.
அந்தி சாய்ந்து இருள் கவ்வினால் கடற்கரைப் பூங்கா இருள் பூங்காவாய் தடம் தெரியாமல் மறைந்து போக ஒளித்து விளையாடும் பூங்காவாய் தெருவோர வெளிச்சமும் தெரியாமல்.
சேர்ந்து செய்திடுவோம் நல்லவை என்று சொன்னாலும் சந்தேகம் இதிலிவர் உயர்ந்திடுவாரோவென செய்வதுமில்லை விடுவதுமில்லை வைக்கோல் கந்து நாயும் தோற்றிடும்.
இன்னும் எவ்வளவு காலம் தான் தன்மானம் இழந்து வாழ்ந்திடுவீர் ஆண்டுதோறும் வரும் ஒன்றுகூடல் எட்டப்படும் முடிவுகள் எட்டாக்கனியாய் நீங்களும் இப்படியே அவர்களும் அப்படியே.
ஏமாற நீங்களும் ஏமாற்ற அவர்களும் கனகச்சிதமாய் எல்லாமே நடக்க அடுத்த தேர்தல் வருவதை அறிய பாட்டம் பாட்டமாய் மாமாக்களும் வர கடைகளில் மாலைகளும் தீர்ந்திடும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.