புதியவை

மகளிர் மாண்பு- பாவலர் கோ. மலர்வண்ணன்வீட்டுக்கு விளக்கமெனத் திகழ்வார்; அன்பு
----வீற்றிருக்கும் நன்நெஞ்சம் பெற்றி ருப்பார்!
பாட்டுக்குப் பொருளாகிச் சிறப்பார்; வெற்றி
----பன்மடங்கு சேர்ப்பதிலே துணையி ருப்பார்!
நாட்டுக்குக் கண்ணெனவே ஒளிர்வார்; ஏற்றம்
----நாடுபெறப் பல்வகையில் ஒத்து ழைப்பார்!
காட்டுக்குப் போய்வாழ நேர்ந்திட் டாலும்
----கணவனையே தெய்வமெனத் தொழுது வாழ்வார்!

இல்லறத்தை நல்லறமாய்ச் செய்வார்; இன்னல்
----எதுவரினும் குடிப்பெருமை போற்றிக் காப்பார்!
நல்லுவகை தரும்வகையில் மக்கட் பேறு
----நல்கி,குலம் தழைப்பதற்கு வழிவ குப்பார்!
நல்லுறவை வளர்த்தெடுப்பார்; சுற்றத் தாரின்
----நலம்நாடிச் செயல்படுவார்! பண்பாட் டிற்குப்
பல்வகையில் பெருமைசேர்ப்பார்; தூய்மை காத்துப்
----பாராட்டும் படிவாழ்க்கை வாழ்ந்தி ருப்பார்!

கணவனுக்கு நல்லமைச்சாய், பிள்ளை கட்குக்
----கல்விதந்து வழிநடத்தும் நல்லா சானாய்,
உணவளித்துப் புரப்பதிலே காமத் தேனாய்,
----உடல்நலத்தைக் காப்பதிலே மூலி கையாய்,
குணநலத்தில் மலைமுகடாய், ஓய்வில் லாமல்
----குடும்பநலம் நாடியுழைப் பதில்தேன் ஈயாய்,
மணமிக்க மல்லிகையாய்த் திகழும் பெண்கள்
----மாண்பெடுத்துச் சொல்லுதற்கு வல்லார் யாரே!?


- பாவலர் கோ. மலர்வண்ணன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.