புதியவை

தேச நேத்துரு” விருது பெற்ற பேராசிரியர் மௌனகுருசமூகத்தின் முன்னோக்கிய பயணத்தினை நாடகத்துறைக் கூடாக வெளிப்படுத்திய  உன்னத கலைஞன்.
கலைப் படைப்பு எதனை வெளிப்படுத்த வேண்டும்?  எது சிறந்த கலைப்படைப்பு? யார் சிறந்த கலைப் படைப்பாளி? போன்ற வினாக்கள் பலரிடமும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்துபவை. இவ்வினாக்களுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் பதிலுரைப்பனவாக வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
இலங்கையின் கலாசார அடையாளங்களைப் பிரதிபலித்து விசேடகலைத் திறமைகள் மூலம் இதயபூர்வமான கலைப்படைப்புக்களை வழங்கியமைக்கும்
சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்குமாக கல்வி மற்றும் நாடகத்துறையில் ஆற்றிய உன்னத சேவைக்குமாக
‘ தேசநேத்துரு”
எனும் விருதினை இவ்வருடம் 29.11.2015 அன்று குருநாகல் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் நடைபெற்ற தேசிய இலக்கியகலை பிரஷாதினி விழாவில் ஐம்பெரும்படைப்பாளிகளுக்கு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
இந்த உன்னத நிகழ்வு எமக்கு எதனை தெளிவுபடுத்துகின்றன?
கலைகள் உணர்ச்சியின் வடிகால்களாக விளங்குகின்றன. நெரிடும் உணர்ச்சிகள் வழிந்தோட அவை உதவிபுரிகின்றன. என கிரேக்க தத்துவமேதை அரிஸ்ரோட்டில் குறிப்பிட்ட சிந்தனையையும், கலைஞர்களுக்குப் பரிமாறத்தக்க கருத்தென தெரிந் தெடுக்கப் பெற்றகருத்துக்களை கலைகளுக் கூடாக வெளிப்படுத்துகின்றான்.என கலை ஆய்வாளார்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்களையும், கலைகலைக்காக அன்றி, அது மக்களுக்கானது, சமூகத்தின் முன்னோக்கிய கருத்துக்களை,  சிந்தனைகளை, வழிகாட்டல்களை அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்தி சமூகமாற்றத்திற்கான சாதனமாக விளங்கவேண்டும் என்பதனையும் ஆகும்.
இதனடிப்படையில் இலங்கையின் கலாசார அடையாளங்களைப் பிரதிபலித்து முன்னோக்கிய பயணத்திற்கான கலைப் படைப்புக்களைத் தந்த உன்னத கலைஞர்கள் என கல்வியலாளர் பேராசிரியர் சுவர்ணா ஜெயவீர ( வயது 86 ), ஓவியக்கலைஞர் ஆரியசேன  (வயது 87 ),  பாளி மொழியியலாளர் அசோகா கருணாரெட்ன  (வயது 87 ), நடனக்கலைஞர் நயனானந்த  (வயது 86 ),  நாடகக்கலைஞர் பேராசிரியர் சி. மௌனகுரு ( வயது 72 ) ஆகியோர் அடையாளப் படுத்தப்பட்டு தேசநேத்துரு எனும் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர்;.
இவர்களில் வயதுகுறைந்த ஒரே ஒரு தமிழ் நாடகப் படைப்பாளி பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் விருதுவழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விருது கௌரவ கலாசார அமைச்சரால் வழங்கப்பட்டது
மட்டக்களப்பின் செழுமை மிகுந்த பண்பாட்டில் பிறந்த பேராசிரியர் மௌனகுரு. தனதுஐந்தாவது வயதிலேயே பெரியவைத்தியர் எனும் நாடகத்தில் நடித்து நாடக உலகிற்குள் நுழைந்து கொண்டவர். சீலாமுனைஎனும் தனது கிராமத்தில்  நடைபெற்றகூத்துக்களை சிறுவயது முதல்பார்த்து இரசித்து அனுபவித்தவர்.
அவரது பதினாறாவது வயதில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் பாசுபதாஸ்திரம் எனும் கூத்தில் சிவவேடம்பூண்டு நடித்து பலரின் பாராட்டைப்பெற்றவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களை சுருக்கியவர்,  பிரதியாக்கம் செய்தவர்,
இவற்றில் பிரதானபாத்திரம் ஏற்று நடித்தவர்.
கூத்தினை பரதத்துடன் இணைத்து புதிய ஆற்றுகை வடிவங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகண்டவர்.
கூத்து மரபினை நவீன அரங்குடன் இணைத்து நவீன தமிழ் அரங்கினை வளப்படுத்தியவர். சங்காரம்,  சக்திபிறக்குது,  மழை,  சரிபாதி,  நம்மைப்படித்தபிசாசு,  வனவாசத்தின்பின்,  தப்பிவந்த தாடிஆடு,  வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள், இராவணேசன்,  தாண்டவகனம் போன்ற நாடகங்களைப் படைத்து சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்கான கருத்துக்களை, சிந்தனைகளை மக்களோடு பரிமாறிக் கொண்டவர்.
இவர் தயாரித்த சங்காரம்  (1960) மிக முக்கியமான நாடக சிருஷ்டியாகும். மனித சமூகத்தின் தோற்றத்தையும், போராட்டத்தையும், வளர்ச்சியையும், எழுச்சியையும், நம்பிக்கைமிக்க எதிர்காலத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டு உலகப் பொதுமையான இன, வர்க்க,  சாதி முரண்பாடுகளை தகர்த்தெறிவதற்கு எடுக்கப்பெற்ற முயற்சியாகும்.
இது தமிழ் நாடகவரலாற்றில் கூத்திலே சமூகஉள்ளடக்கத்தினை வெளிப்படுத்திய முதல் நாடகமாகின்றது.
சக்தி பிறக்குது எனும் நாடகம்புராணங்களிலும் இதிகாசங்களிலும் சக்திஎன்று போற்றப்படும் பெண் நடைமுறையில் கீழாகவே ஆணாதிக்கச் சமூகத்தால் கணிக்கப்படுகின்றாள். இந்த சமூகமுரணை வெளிக்காட்டுவதும், சக்தியான பெண்கள் தம் சக்தியை உணர்த்துவதையுமே நோக்கமாக கொண்டது. இது சமூகத்தில் வேர்ஊன்றியிருந்த பெண் அடிமையையும், ஆணாதிக்க சிந்தனையையும் கேள்விக்குட்படுத்தி பெண்விடுதலையை ஏற்படுத்த எடுக்கப் பெற்றமுயற்சியாகும்.
மழை நாடகம் மனிதவாழ்வின் தேடலை மையப்படுத்தி மனித பிரச்சினைகளை பொதுமைப்படுத்தி அவற்றிற்கான வழிவகைகளை விளக்க முற்படுகின்றது. இது ஒற்றுமையாக இயங்குவதன் மூலம் எதனையும் சாதிக்கலாம் என்ற சமூகத்திற்கு மிக அத்தியாவசியமான கருத்தினை அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்திய சிறந்தபடைப்பாகும்.
நம்மைப்பிடித்தபிசாசு எனும் நாடகம் அந்நியநாட்டுமோகம்,  பிரதேசபேதங்கள்,   உத்தியோகமோகம்,  சீதனம் என்னும் சமூகக்குறைபாடுகள் எல்லாவற்றையும் பிசாசுகளாக உருவகம் செய்து பாரதியின் உச்சாடனங்களால் இப்பிசாசுகள் விரட்டப்படுகின்றமையை எடுத்துக்காட்டுகின்ற சிறந்த படைப்பாகும்.
தப்பிவந்த தாடிஆடு என்ற நாடகம் நவீன உலகில் இளம்சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங் கொடக்கக்கூடிய தன்னம்பிக்கையை, மனத்தைரியத்தை ஊட்டுகின்ற படைப்பாகும். வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள் புத்திசாதுரியமாக  செயற்படுவதன் மூலம் பேராபத்துக்களை தவிர்க்கலாம் என்பதை உணர்த்துகின்ற படைப்பாகும். இராவணேசன் நாடகம் இராமாயணம் எனும் இதிகாசத்தை அடிப்படையாகவைத்து யுத்தம் சார்ந்த அழிவை அதன் அவலங்களை உலகைப் பொதுமைப்படுத்திக் காட்டுவதற்கு எடுக்கப் பெற்ற முயற்சியாகும். தாண்டவ தகனம் சிவனின் தாண்டவ தகனத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான சூழலியற் பிரச்சினையை முன்வைக்கின்றது.
இவரது இப்படைப்புக்கள் எல்லாம் பெரும்பாலும் ஈழத்தமிழர்களின் தொன்மங்களை, பண்பாட்டினை பிரதிபலித்து அவரது நாடகப்புலமை மூலம் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்குத் தேவையான சமத்துவமான வாழ்க்கை கண்டோட்டம், பெண்விடுதலை,  ஒற்றுமை, புத்திசாதூரியம்,  சமாதானம் , அன்பு,  கருணை , போரினால் ஏற்படும் அவலங்கள் போன்ற கருத்துக்களை,  சிந்தனைகளை, வழிகாட்டல்களை வெளிப்படுத்துவனவாகவே காணப்பெறுகின்றன. இவற்றினை எமது தமிழ் சமூகம் காணத் தவறிவிட்டது.
இவரை விமர்சிப்பதிலேயே காலத்தைக் கடத்தியது.
ஆயினும் சிங்களச்சமூகம் இவரின் சமூகம்பற்றிய தெளிந்த பார்வையை, சமூக முன்னேற்றத்திற்கான இவரது படைப்புக்களை அடையாளங்கண்டு கௌரவப்படுத்தி தமிழ் சமூகத்தை வெட்கித்தலை குனிய வைத்திருக்கின்றது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.