புதியவை

ரதிமோகன்எழுதும்தொடர் கதை "பனி விழும் மலர் வனம்"(அத்தியாயம் 04)

 ரதிமோகன்எழுதும்தொடர் கதை "பனி விழும் மலர் வனம்"(அத்தியாயம் 04)
குளிரும் பனிப்பொழிவும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இந்த உலகமே நிசப்தமாக போனதாக ஓர் உணர்விற்குள் அவள் வெறித்தபடி அந்த சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த சுவரில் அவளால் மாட்டப்பட்டிருந்த தந்தையின் நிழற்படம் உயிர்பெற்று வந்ததுபோல் ஓர் அசைவு. " இது என் மனப்பிரமையோ .. அப்பா ஏன் என்னை விட்டு போனாய்.. கவலையற்று சிட்டுக்குருவியாய் திரிந்த எனக்கு ஏனிந்த தண்டனை?? சொல்லுங்க அப்பா சொல்லுங்க.... பொத்தி பொத்தி வளர்த்தீங்களே.. உலகத்தை மட்டும் எனக்கு காட்ட மறந்து போனீங்களே.. அந்நியத்திற்குள் அந்நியப்பட்டு நான் நிற்கிறேன் பாருங்க... " கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாய் கொட்டியது..

மதுமதியால் இந்த அந்நிய நாட்டு கலாச்சாரத்திற்கு முகம் கொடுக்க முடியாது போனதிற்கு சில பின்னடைவுகளும், உலகம் தெரியாது வளர்க்கப்பட்டவிதமும் காரணமாகலாம். ஏன் அவளுக்கு அன்பாக வழிகாட்ட ஒரு நட்போ உறவு நெருக்கமாக இல்லாது இருக்கலாம் . புதுநாடு புது கலாச்சாரத்திற்குள் பெண் நுழையும் போது பக்கபலமாக கணவன் அல்லது நெருங்கிய உறவு தோள் கொடுத்தால் எதிலும் இலகுவாக கால் ஊன்றி கொள்ள உதவியாக இருக்கும். பெண்கள் இயற்கையில் அச்சம்,மடம், நாணம் , பயிர்ப்பு உடையவர்கள். மென்மையான மனம் மனம் படைத்தவர்கள். .மதுமதியும் ஒரு பெண்தானே. அவள் இதற்கு விதிவிலக்கா என்ன.. அதிலும்ஒரு குறுகிய வட்டத்திற்குள் வளர்க்கப்பட்டவள். பாடசாலையும் வீடும் என வெளித்தொடர்பு அற்று வளர்ந்த பெண். அதனால் சமுதாய நீரோட்டத்தோடு பயணிப்பதில் கடினத்தை அவள் உணரவேண்டியுள்ளது..
மீண்டும் தந்தையின் படத்தை உற்று நோக்கிறாள் .. என்ன அதிசயம் !!! ஓர் அசைவு இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது.
" அப்பா ஒருக்கா என்னட்டை வாங்க .. பாருங்க சூரியனை பார்த்து எத்தனை நாளாச்சு.. இருட்டுக்கை வாழ்க்கை இங்கு.. மல்லிகை மணக்க விடிந்த பொழுது எங்கே??? மல்லிகையாய் பனித்துகளுக்குள் விடியுது பொழுது... சீ என்னடா வாழ்க்கை என்றால் அம்மா அல்லோ கண்ணுக்கை வாற ... அம்மாக்காக நான் சிரிச்சு வாழணும்.. அம்மாவை சிரிக்க வைக்கணும் அதொன்றுதானப்பா என் நிலைப்பாடு... அண்ணா எப்படி இருக்கானப்பா" அவள் உரைத்தே கதைத்து விட்டாள். மறைந்த அண்ணன் நினைவாய் அவள் மனதில் வாழ்கின்றான்.
" என்ன மதுமதி கண்ணை திறந்து கொண்டு கனவு காண்கிறாயா.. இப்படி உனக்குள்ளை கதைச்சு கெதியிலை பைத்தியக்காரி ஆகப் போறாய் ... கொஞ்ச நேரம் போய் படு .. நான் இந்த காய் பிஞ்சை நறுக்கவேணும்"" என்று அதட்டியபடி மாமி குசினிக்குள் நுழைந்தார் ...
( தொடரும் )
                                                          ரதிமோகன்No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.