புதியவை

பனிவிழும் மலர் வனம்...ரதி மோகன் அத்தியாயம்- 5

பனிவிழும் மலர் வனம்...ரதி மோகன்
அத்தியாயம்- 5

மதுமதியின் மாமி குசினிக்குள் நுழைந்த வேகத்தைப்பார்த்தால் இன்று தடல்புடலாக சமையல் இருக்கும் போல அவளுக்கு தெரிந்தது. கடல்கடந்து வந்தபோதும் இன்னும் கடந்து போகாமல் சமயசம்பிரதாயங்களை மாமி பின்பற்றுவது மதுமதிக்கு அவர்பால் ஒரு விருப்பினை வளர்த்திருந்தது.
பிரதோஷம், கந்தசஷ்டி, கௌரிகாப்பு என என்னென்ன விரதமோ அத்தனையும் அனுஷ்டிப்பது மாமியின் வழக்கம். வீடே சாம்பிராணியின் மணத்தில் தாயகத்தை நினைவூட்டும். மாமியின் சமையலுக்காகவே அவர்களுடன் தங்க மதுமதி விரும்பியகாரணத்திலொன்று.

அண்மையில்தான் படிப்பதற்காக அருகில் உள்ள நகரமொன்றில் ஒரு அறை எடுத்து இருந்தபோதிலும் இங்கு தங்குவது அவளின் மனதிற்கு ,தனிமைக்கு ,சுகமாக இருந்தது. சங்கர் கூட விடுமுறைக்குதான் வீடு வருவான். அவன் படிக்கும் கலாசாலை பல கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்திருந்தது. இடைக்கிடை அவனை சந்தித்தபோதும் இவன் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கான் என்மேலே என பலதடவை மதுமதி தனக்குள் சிந்தித்து கொண்டபோதும் விடைகாண முடியாத புதிர் அவன் .

""என்ன மாமி ஏதாவது உதவி செய்யட்டா? என்ன தடல் புடலா சமையல்" என உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவத்தொடங்கினாள் மதுமதி."" ஓம் பிள்ளை கதையோடை கதையாய் சொல்ல மறந்திட்டன்.. தம்பி இரவுக்கு சாப்பாட்டுக்கு வாறனென்டான்.. அங்கை யுனிவேசிட்டிலை தனியாத்தானே சமைச்சு சாப்பிடுறான் பாவம்...வாறநேரம்தானே வாய்க்கு ருசியாய்சாப்பிடுவான் என்றுதான்"" " ஓம் மாமி அதுவும் சரிதான்.. " என தலையசைத்துவிட்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.."" ஓ நல்ல தம்பி இன்று வெள்ளிக்கிழமை டிஸ்கோ ரெக்கிலை சோடி போட்டு ஆடிப்போட்டு சாமத்திலை வருவான் காத்திருங்கோ..""அவளின் மனம் மட்டும் பேசியது. அவன் தானுண்டு தன் படிப்பு உண்டு என்ற போதிலும் இடைக்கிடை தன் சொந்த நகருக்குவரும்போது அவனின் பால்ய நண்பர்களுடன் சேர்ந்து இப்படி குடித்து கூத்தடிப்பான்.. அதற்காக அவன் பெரிய குடிகாரன் இல்லை.

அப்போது அங்கே விருட்டென உள்ளே வந்த சங்கீதா... " என்ன மச்சி இங்கையா நிற்கிறீங்கள்.. சரி சேர்ந்து சமையுங்கோ... மூவா (அம்மா) நான் என்னோடை படிக்கிறவையோடை வெளியிலை போறன்... வர நேரமாகும் .. நீங்க படுங்க.." என்றபடி கையை அசைத்தபடி போனவளின் உடுப்பும் அவள் நடையையும் பார்த்து அவள் கூனிக்குறுகிப்போனாள்..

மதுமதியும் நாகரிகமான பெண்தான். உடுப்பு தேர்ந்தெடுப்பதில் நாகரிகம் மாறாத ஒரு நேர்த்தியான தனித்தன்மை அவளின் குணவியல்பை அப்படியே துல்லியமாக காட்டிநிற்கும். நாகரிகம் தன்னுடலை மற்றவருக்கு கட்டம் கட்டமாய் காட்டுவதில் தங்கியிருப்பதில்லை என்பது அவளின் தனிப்பட்ட கருத்தாகவும இருந்தது.
இறுக்கமான ரீசேட்டும் தொடைக்குமேலே போடப்பட்ட உடலோடு ஒட்டிய குட்டை பாவாடையும் , பார்த்தவரை பார்க்கத் தூண்டும் பளிச்சிடும் கால்கள், குதிக்கால் உயர்ந்த செருப்புமாய் மொடல் அழகியாய் தெரிந்தாள் சங்கீதா. ஆனால் மதுமதியை பொறுத்தவரை அழகு என்பது அடக்கமாய் இருக்க வேண்டும் என நினைப்பவள். அவளுக்கு வந்த கோபத்திற்கு அவளை திட்ட வேண்டும்போல இருந்தபோதும் இதனால் பகைமையை சம்பாதித்துக்கொள்ள விரும்பாதலால் மௌனமானாள். கதவை திறந்து கொண்டு போனவளை மாமி  " சங்கீதா நேரத்தோடை வீட்டை வா.. அண்ணாவும் வருவான் ... காது கேட்குதோ சொல்றது..."" பதிலுக்கு "" ஜா ஜா... " என்றவளின் அவுடி(Audi ) மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது.

அந்த நேரம் குப்பென்ற சிகரட் வாசனை குசினிக்குள் வருவதை உணர்ந்த மதிமதி மெல்ல யாரென தலையை திருப்ப அங்கே காப்பி கப் உடன் உள்ளே நுழைந்த மாமா "" என்ன மாமியும் மருமோளும் செய்யிறியள்.. இவள் சங்கி எங்கை போறாளப்பா""என . " ஓ அதுவா யாரோ சினேகிதி வீட்டை ஏதோ பார்ட்டியாம் போறாள்.. அதை விடுங்கோ.. நான் நூறுதரம் சொல்லிப்போட்டன்.. இந்த சிகரட் பழக்கத்தை விடச்சொல்லி ... ஒரு சொல்லு கேட்க மாட்டியள்..."" மாமியின் அதட்டல் தொடர்ந்தது....

( தொடரும்)
ரதி மோகன்No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.