புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் பனிவிழும் மலர்வனம் -அத்தியாயம் 7


                                                                     ரதி மோகன் 
சங்கீதா போய் மெல்ல கதவைத்திறந்தாள். அர்ச்சனைத்தட்டுடன் தாயும் தந்தையும் நிற்கும் காட்சியை பார்த்து கொல் என சிரித்தே விட்டாள் . ""சீ சீ இவ்வளவு திருநீற்றை நெற்றியில் அப்புவாங்களா.. இரண்டு பேரும் சாமியராகவே மாறப்போறீங்க போல கிடக்கு" என டெனிஷ் மொழியில் கூறினாள். "" ஓ இதில்லை இன்னமும் சொல்லுவாய்.. காவோலை விழ குறுத்தோலை சிரித்த கதைதான்.. போ போ..என்ன எல்லோரும் நேரத்தோடை வந்திட்டியள்.. இருங்கோ ஒரு நிமிசத்திலை வாறன் சாப்பிடுவோம்" என்றபடி உடுப்பு மாற்ற தாயார் செல்லவும் மதுமதி சாப்பாட்டு மேசையை ஒழுங்குபடுத்தினாள்.

சாப்பாட்டு பரிமாற்றத்திற்கு இடையில் ஒரே சிரிப்பும், கேலியுமாக சுவாரசியமாக இருந்தது.மாமா டெனிஷ்காரனாகவே தன்னை காட்டிக்கொள்ளும் விதத்தை பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டாள் மதுமதி. ஆனால் வீட்டில் மட்டும் தமிழ்சமையலும் சமய ஆசாரங்கள் ஊரைப்போலவே நடக்கிறது. இதெல்லாம் மாமியின்உந்துதலாகத்தான் இருக்கும் என அவள் மனதில் நினைத்ததுண்டு. மாமா தன்பிள்ளைகளுடன் டெனிஷில்தான் பேசுவார். இங்கு வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் எதற்கு? என அடிக்கடி சொல்வார். அதுதான் பிள்ளைகளின் நடை உடை பாவனை டெனிஷ் கலாசாரத்தை தழுவி இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சாப்பாடு முடிந்து சிறு அமைதி. மாமா TV2 தொலைக்காட்சி பார்க்க அமரவும் மாமி பாத்திரங்களை கழுவும் மெசினில் கோப்பைகளை அடுக்கவும் போக, மதுமதி மேசையை துடைத்துவிட்டு ""சரி மாமி நான் என் றூமுக்கு போட்டு வாறன்" என விடைபெறவும், மாமி "" நில்லு மது .. நாளைக்கு லீவுதானே இஞ்சை படுக்கலாம்தானே... ஐயையோ மறந்து போயிட்டன் பிள்ளை ஊரிலை இருந்து உனக்கு கடிதம் வந்தது பிள்ளை இந்தா"" என நீட்டியபடி நின்ற மாமியைப்பார்த்து " என்ன யாரிட்டை இருந்து? என்ற கேள்வியுடன் கடித த்தை திறந்தாள்.

என் அன்பு மதுவுக்கு
உன் அக்காவின் இனிய முத்தங்கள். அம்மா ரொம்ப கஸ்ரப்படுறா. நான் என்னடி பாவம் செய்தேன்? கறுப்பாக பிறந்தது என் குற்றமா? எத்தனை மாப்பிளை பேசி வந்தது. நிறத்தை பார்த்திட்டு சீதனத்தை ஏத்துறாங்களடி.. நான் வடிவில்லையா... படிப்பில்லையா... நான் படிப்பிக்கிற பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிற வாத்தின்றை சம்பந்தம் வந்தது.. புறோக்கர் பொன்னையர் கொண்டு வந்தார். அவன் என்ன சொன்னான் தெரியுமே.. பொம்பிளை கறுப்பாம்.. ஓகோ என இல்லையாம் 20 லட்சம் என றால் ஓகேவாம். ஆடு மாடு வாங்குவதுபோலத்தான் பொம்பிளைகளை வாங்குகிறார்கள் ..யோசித்துப் பார் இனி எப்படியடி அவனோடை வேலை செய்யிறது.. இதுதான்டி அவனின் படம். மொட்டைத்தலையன்.. மூஞ்சையும் முகரக்கட்டையையும் பாரடி... இத்தனைக்கையும் இவள் கடைசி என்ன சொல்றாள் தெரியுமே ..எனக்கு வழியை விடு நீ.. நான் உன்னாலை கனகாலமாய் கட்டாமல் இருக்க ஏலாது என்று. அவள் யாரையோ காதலிக்கிறாள் போலத்தான் கிடக்கடி.. பயமாயிருக்கு சாதி சமயம் மாறி ஓடிப்போனாளோ .. நாங்கள் வெளியிலை தலைகாட்ட ஏலாது... பிளீஸ் நீதாண்டி ஒருக்கா அவளோடை பேசு...இதெல்லாம் ரெலிபோனிலை அவைக்கு முன் பேச ஏலாது.. அதுதாண்டி உனக்கு கடிதம் எழுதினான்...உந்த வெளிநாட்டு காசாலைதான் சீதனமும் ஏறிபோச்சுதடி..சனம் கூத்தாடுதடி... வேறு என்ன..
அன்புடன்
உன் அக்கா
வர்ஷா
கண்ணீர்த்துளிகள் பொல பொல என கடித்த்தின் மேல் விழ கண்களை துடைத்தபடி ... ஏன் அழுகிறாய் என வினாவிய மாமியிடம்" ஒன்றுமில்லை" என்ற படி விடைபெற்ற மதுமதியின் கார் தன் றூமை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்தது....

( தொடரும்) 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.