புதியவை

அன்னை வருகிறாள் ! புலவர் இராமமூர்த்தி

என்னைப் பெற்றே  எம்மை  வளர்த்த 
            அன்னை  வருகின்றாள்! - அவள் 
தன்னை  இழந்தேஎம்மை வளர்த்தித் 
           தாரணிக்கே  தந்தாள்! 

முன்னைப் பிறப்பில்  யாம்செய் தவத்தின் 
            முதிர்பயனாய்  வந்தாள்!- எமை 
முன்னே  நிறுத்திப்  பின்னே  இயக்கி 
             முறையாய் உயர்ந்திட்டாள்!

இன்னும்  பலமுறை அன்னை பிறந்தெமை 
            ஈன்று மகிழ்வளிக்கப் 
பொன்னுலகத்தைப் ''போ''வெனத்  தள்ளும் 
           புதுமைத்  தவமுடையாள்!

'அன்னை,'அம்மா,'தாய்' எனும் சொற்குள் 
             அடக்கி   விடுவாயோ?- அட!
என்னதமிழ் ? இதன் ஏழைமை கண்டே 
              ஏங்கித்  தவிக்கின்றேன்!

கவிதைக்குள்  ஒரு காவியம்  அடங்கிக் 
          கட்டுப்பட்டிடுமோ?-நம் 
புவிதனை  வென்றதைப் பாதத்தில்  வைப்பினும் 
          போதவே   போதாதே!

''இன்றவள்   வந்தால் எம்மையும்  வாழ்த்தினாள்''
            என்றொரு   நற்செய்தி, 
 நன்றுசெய்  வேதியர்  நாவில்  விளைந்திடும் 
          நாளிதைப்   போற்றிடுவேன்!

(தாயார் சிரார்த்த தினத்தன்று  காலை பாடியது!)
 .

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.