புதியவை

வாக்குத் தவறாத நாக்குபாவலர் கருமலைத்தமிழாழன்

                                          பாவலர் கருமலைத்தமிழாழன்
வாய்வீட்டில் குடியிருக்கும் நாக்குக் குள்ளே
------வார்த்தைகளோ குடியிருக்கும் ! பண்பு தோய்ந்த
தாய்வீட்டில் குடியிருக்கும் பெண்ணிற் குள்ளே
-----நற்குணங்கள் குடியிருக்கும் ! சுருட்டி வைக்கும்
பாய்வீட்டில் குடியிருக்கும் மூட்டைப் பூச்சி
-----பசுங்குருதி குடிப்பதுபோல் அரக்க நெஞ்சப்
பேய்வீட்டில் குடியிருக்கும் மாந்தர்க் குள்ளே
-----பெரும்பாவச் செயல்நினைவே குடியி ருக்கும் !
கல்வீட்டில் குடியிருக்கும் கடினம் கூடக்
-----கலையாகும் சிற்றுளியால் செதுக்கும் போது
சொல்வீட்டில் குடியிருக்கும் கருத்து கூடச்
-----சொக்கவைக்கும் திறமையுடன் பேசும் போது
வில்வீட்டில் குடியிருக்கும் வீரம் கூட
-----வெற்றியாகும் அம்பெய்யத் தெரிந்த போது
பொல்லாமை குடியிருக்கும் மனிதர் கூட
-----புகழ்பெறுவர் தவறுகளை உணர்ந்த போது !
கூன்,மதியில் குடியிருந்தால் குழிகள் தோண்டிக்
-----கூனியைப்போல் பிறர்வாழ்வைப் பகைமை யாக்கும்
தான்,நெஞ்சில் குடியிருந்தால் தலைக னத்துத்
-----தானழியும் தீக்குச்சி போல்வாழ் வாகும்
ஏன்,வினாக்கள் குடியிருந்தால் மூடம் நீங்கி
-----எக்கருத்தும் ஆய்வதனால் தெளிவு தோன்றும்
தேன்வாக்காய் தவறாத நாக்கி ருந்தால்
-----தெவ்வரெல்லாம் நட்பாகி இன்பம் சேரும் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.