புதியவை

சித்திரை பிறப்பு சிறப்பு கவிதை - ப.கண்ணன்சேகர்,
வேம்பது இனித்திட வந்திடும் சித்திரை
     வேண்டிய நலனையும் தந்திடும் சித்திரை
பூம்பொழில் எழிலென பூத்திடும் சித்திரை
     புதுத்தென்றல் வீசிடும் பொன்னிற சித்திரை
தாம்பூல மங்கலம் தழைக்கின்ற சித்திரை
     தானமே மிகுதியாய் தருகின்ற சித்திரை
தேம்பிடும் நெஞ்சினை தேற்றிடும் சித்திரை
     திருநாளாய் மலர்கின்ற செந்தமிழ் சித்திரை

துர்முகி ஆண்டென துளிர்க்கின்ற சித்திரை
      தொடராக வளங்களை தூவிடும் சித்திரை
போரிலா புவிதனை புலர்த்திடும் சித்திரை
       புண்ணிய நதியெலாம் புனலோடும் சித்திரை
வீரிய வேளாண் விளைந்திடும் சித்திரை
      வளர்ந்திடும் அறிவியல் வளமாகும் சித்திரை
கூரிய ஆற்ற்லை கொடுக்கின்ற சித்திரை
      கூனிய வாழ்வினை கூராக்கும் சித்திரை

கடமைகள் முடித்திட கனிந்திடும் சித்திரை
       கவலைகள் நீங்கியே களித்திடும் சித்திரை
மடமைகள் மாய்ந்திட மாற்றிடும் சித்திரை
       மனதினில் தூய்மையை மலர்த்திடும் சித்திரை
வடமோடு தேரிலே வலம்வரும் சித்திரை
       வணங்கிட தெய்வமாய் வந்திடும் சித்திரை
புடமிடும் நிலவென பௌர்நமி சித்திரை
        புதுவழி தந்திடும் புதுவருட சித்திரை

                -ப.கண்ணன்சேகர், திமிரி. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.