வெள்ளம் அளித்த விடை -கார்த்திகேயன் இமயவரம்பன்
அன்றுதான்… ஆம்
தண்ணீர்க் காட்டில்
நகரம் மிதந்து கொண்டிருந்த
அன்றுதான்…
பலமுறை கவிதை புனைந்து
கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல்
நகரம் கிழிந்து கிடந்த
அன்றுதான்…
பெயர் தெரியாத
முதியோர் இல்லம் ஒன்றில்..
பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்
அடுக்கி வைத்து அழகு பார்த்த
ஓர் ஈரம் பிசுபிசுத்த நாள்
அன்றுதான்…
கரைகளில் பிறந்தும்
கரை சேராத பலபேர்
நாளை என்பதை மறந்து
அன்றைக்கான இலவசத்திற்காய்
காத்திருந்த அன்றுதான்…
சின்னஞ்சிறு வயதில்
வயலோரம் நான்பார்த்து
சேற்றில் நின்ற கால்கள் சில
சேற்றுப்புண்ணோடு பிரண்டுகிடந்த
அன்றுதான்…
மரக்கால்களில்
அள்ளித்தந்த கைகள் சில
மறத்துபோய் பிச்சை ஏந்திய
அன்றுதான்…
விரிசல்விட்ட வீடு புறம்கிடக்க
கரிசல் காட்டில் உடல்கள் ஊரிக் கிடக்க
என் இனமோ,
வரிசைக் கட்டி அரிசி ஏந்திய
அன்றுதான்…
பசியில் நொந்து
அங்குல இடைவெளியில்
பானைபானையாய் நீர் இருந்தும்
பாலைவனமாய் வரண்டு கிடந்த
ஊரோரத் தமிழனொருவனின் நாக்கு,
அரசியல் கண்ணாடியில் வாக்காகத் தெரிந்த
அன்றுதான்…
சுனாமி சுருட்டி
‘தானே’ தடம்புரட்டிய
அந்த கடலூரானை
மழை சலவை செய்தது...
உடலளவில் எழுந்து
மனதளவில் குனிந்து கிடக்கும் அவன்
மடியேந்திய அன்றுதான்…
இல்லத்தைக் கடந்து
இல்லத்தரசி கைநீட்ட மாட்டாள்.
அவள் உள்ளத்தை உலுக்கி
தன்மானப் பாத்திரத்தோடு
வீதிகளில் திரியவிட்ட
அன்றுதான்…
ஆம், அன்றுதான்
வெள்ளம் அந்த விடையைச்
சொன்னது!
நாகரீகம் என்பது
வெறும் நகர்மயமாவதல்ல!
நாகரீகம் என்பது
பணம் மட்டும் சார்ந்ததல்ல!
நாகரீகம் என்பது
விழுந்தவனைப் பார்த்து வருந்துவதில்லை!
பரிணாமம் என்பது
பாத்திரத்தில் பரிமாறுவதல்ல!
பரிணாமம் என்பது
இரண்டு அறை, ஒரு கழிவறை
சொந்தம் கொள்வதல்ல!
மனிதாபிமானம் என்பது
உணவு, உடை மட்டும் சார்ந்ததல்ல!
மனிதாபிமானம் என்பது
ஒரு நாள், ஓரிரவு இச்சையல்ல!
தன்மானம் என்பது
கால்சட்டை, மார்சட்டை
மத்தியில் மட்டுமல்ல..
தன்மானம் என்பது
இனம் சார்ந்தது, சுயம் சார்ந்ததல்ல!
விழிப்பதென்பது விழிமட்டும்
சார்ந்ததல்ல!
எழுவதென்பது வலியை மறப்பதல்ல!
மாற்றம் என்பது
தலைகள் மட்டும் மாறுவதல்ல!
வெள்ளம் விடைசொல்லி வழிந்தோடியது
உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்!
கார்த்திகேயன் இமயவரம்பன்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.