புதியவை

அவளென் பா - வெண்பா-கவிஞர். கு. நா. கவின்முருகு

அவளென் பா - வெண்பா-கவிஞர். கு. நா. கவின்முருகு

.
செந்திருவாய்ச் செப்பிடுமே செம்மொழியை உன்நாவே!
வந்தணைவாய் என்னையும் வாழ்விக்க! - சொந்தமுடன்
எந்நாளும் என்னகத்தே நீயிருப்பாய்! சிந்தையில்
முந்திவரும் உன்றன் முகம்.

நெஞ்சின் விசும்பினதாய் நேயமுடன் பற்றினை
மஞ்சம் நெருங்கினதாய் வாஞ்சையும் - தஞ்சம்
எனபுகுந்தென் வாழ்வினில் இன்பமெய்தும் போது
மனமோகும் காதலும் மாண்பு.

கண்ணோரம் மைத்தீட்டல் கள்ளம் உரைக்குமோ
வண்ணங் குழப்பிபூசி மௌனமும் - எண்ணமும்
சீர்மிகும் காதலாலென் சிந்தை குளிர்வித்து
வார்குழலாய் நின்றாயென் மாது.

மணிமணியாய் பேச மணிக்கணக்கில் பேச
அணியாய் ஒருவார்த்தை யாகும் - அணிசெய்து
செப்பிய வார்த்தை செவியினிக்க கேட்டுகேட்டு
ஒப்புடன் ஈவேன் உயிர்.

அவளின் சிரிப்பொலி யாழிசை யென்பேன்
அவளின் மொழியின் அமுதால் - தவமாகி
காதல் எழுதி கனவில் மலர்ந்தென்றன்
காதிலே காதலிசை யாய்.

என்னை இசைக்கிறாய் என்னில் இசைகிறாய்
என்னை மறந்தேன் எழிலியுன்னில் - தன்னை
அணையும் கனவிலுன் ஆளுமை என்னில்
துணையணையும் காதல் சுகி.

இதழ்குடிக்கும் உந்தன் இதழ்வெல்லும் என்னை
இதஞ்சொல்லி ஏற்பாள் இனியாள் - இதயம்
மதம்பிடிக்கும் மாண்பாய் மடிதந்து ஏற்க
இதந்தருமே கூந்தல் எழில்.

உன்கொலுசின் ஓசை உயிர்உரசும் என்னுள்ளே
உன்காதல் உண்ணதமே என்னவளே! - என்னையும்
நீயாள நானாவேன் நித்திலமே நின்னருகில்,
நீயாவாய் சிந்தையெலாம் நீடு.

கனவெல்லாம் நீயாள கண்ணுறக்கம் இல்லை
கனலாய் நினைவொன்றே காய்ச்ச - மனவிசனம்
தாக்குதடி, உள்ளுயிரின் சாசுவதம் உன்காதல்
மூக்குத்தி பூவாகும் மூப்பு.

எண்ணத்தில் நீயுதிக்க என்னையே நானிழக்க
கண்ணத்தின் முத்தத்தில் காற்றாட - வண்ண
எழில்கோலம் பொங்கும் இளையாள் அவளின்
கழல்பாதம் சொல்லும் கதை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.