புதியவை

வாக்குத் தவறாத நாக்கு கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி எம்.ஏ., பி.எட்.,


 கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி எம்.ஏ., பி.எட்.,
வெண்பா
சொல்லில் விதைக்கின்றார் சோகம் தருகின்றார்
நல்லோர் எனவே நடிக்கின்றார் -கல்விதனை
ஆக்கு (ம்) முறைமறந்தார் அன்பிலாப் பேர்க்கேது
வாக்குத் தவறாத நாக்கு.
ஆசிரியப்பா
'''''''''''''''''''''''
வாயது கிழிய வார்த்தைகள் பெருக்கி
நீயது வாழும் காரணம் ஏனடா ?
தீயது கண்டு திளைத்திடு வோனாய்த்
நாயது போல வாழ்வதும் வீணடா !
நாக்கை அடக்க நாட்ட மில்லை
ஆக்கும் இறைவனை அண்ட வில்லை
போக்கில் திரியும் பூதிநாய் போலத்
தாக்குற உருண்டாய்த் தரணியில் புழுதியில்
மாதரைத் தாயாய் மனதி லெண்ணாய்
தீதவ றிழைத்துத் திளைத்து நின்றாய்
ஓதலை மறந்து ஊறு செய்தாய்
மாதவன் வாக்கினை மறந்து விட்டாய்
ஆக்கம் உனக்கே அனைத்து மென்றாய்
நாக்கால் உதிர்க்கும் நற்சொல் கூறி
தூக்கி நிறுத்து தூய மனிதா....
ஊக்கம் காப்பாய் தவறாய் வாக்கே !
கலிப்பா
''''''''''
வாக்கதைக் காத்திடுவாய் வண்ணமலர் ஆகிடுவாய்!
நாக்கதுவால் நீயுதிர்த்த நற்சொற்கள் நாடிடுவாய்!
ஏக்கமுற்றுப் பஞ்சைகளாய் ,ஏழைகளாய் வாழ்பவரை
ஆக்கமுடன் வாழவைக்க அன்புமழை பெய்திடுவாய்!
ஊக்கமுள்ள மாமனிதா! உண்மைதனை நாடிடுவாய்!
பூக்களது வாசமென புன்னகையே வீசிடுவாய்!
காக்கின்ற நாவாலே! கண்ணீரும் தோன்றாது
தூக்கமின்றிப் பார்காப்பாய் தான்தவறா வாக்காலே !
வஞ்சிப்பா
--------
நலமாகிடும் நிலைதான்பெற
பலமாகிடும் பதஞ்சேர்ந்திட
மலமாகிடும் மாதீவினை
செலவாக்கிடச் சீராகுமே !
-அதனால்
ஏது பேசினும் ஏதம் நீக்கிடு
சூது வாதின்றி வாழ்ந்து
தீது களைந்திடு தீரனுன் நாக்கிலே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.