புதியவை

வாக்குத் தவறாத நாக்கு -கவிஞர் கவியருவி -வில்லூரான்

கவிஞர் கவியருவி -வில்லூரான்
நாவாலே நவில்வதெல்லாம் நல்லபடி நடந்தாலே
. . நாமிங்கு நாளும் படும்பாடு நகர்ந்திடுமே
தாமாளும் நாட்டரசர் தாமுரைக்கும் சொல்லிங்கு
. . தக்கபடி செயலாகின் தன்னாடு உயர்ந்திடுமே
காதலிக்கும் போதொன்று சொல்வாரது மெய்யாய்
. . கைப்பிடித்த பின்னாலது காரியத்தில் பொய்யாய்
காவலுக்கு வந்தோர்தாம் கடமையேற்கச் செய்யும்
. . காலச் சத்தியங்கள் கடைசிவரையிருக்காது மெய்யாய்
கடன் வாங்கச்சிலர் கூறும் பொய் கொஞ்சமல்ல
. . கடன்பட்ட பின்னெஞ்சம் கல்லையும் மிஞ்சிடுதே
உடனுதவி கேட்டுச்சிலர் உண்மையுறவாகி ஏங்குவார்
. . உதவி பெற்றுப்பின் அவரோடி மறைவிற் தங்குவார்
வாக்குற்ற வாத்திகளும் வாழநெறி சொல்லுவார்
. . வழியதிலே அவர்தவறி வாக்கினைக் கொல்லுவார்
வாக்குகளைப் பெற்றிடவே வாக்குறுதிகள் முழங்குவார்
. . வாக்குதனைப் பெறும்வரை வாசலிலே ஏங்குவார்
நல்லதென்றே கூறிக் கூறி நலமில்லாப் பண்டமதை
. . நம்தலைமேற் கட்டும்வரை நாவினிலே பொய்யிருக்கும்
உள்ளமது உருகியே உள்ளவனைத் தொழுது சோகம் கொட்டுவார்
. .உள்ளிருந்து வெளியேறி உணராது உள்ளவனைத் திட்டுவார்
நாளை நாளையென்று நாளைக் கடத்துவார் ஏராளம்
. . நாளுமொரு நற்காரியம் நடக்காது ஒருகாலும்
ஆளையாள் ஏமாற்றி ஆண்டிடவே நாவிற் பொய்
. . ஆனதால் அதை மாற்ற எழுத்தினில் காகிதமாய்
மேடையேறி முழங்குவார் கொள்கைகள் ஆயிரம்
. . மேடைவிட்டறங்கியதும் அந்த மேன்மைகள் போய்விடும்
ஆடையதை அடிக்கடி மாற்றுதல் போலவர் வாக்குகளம்
. .ஆகிவிடுவதாலே அவனியிலில்லை அந்த நாக்கு
நல்லெண்ணம் நாமிழந்தோம் நம் நெஞ்சினிலே
. .நல் வார்த்தை தனையிழந்தோம் நரம்பிலா நாக்கினிலே
உள்ளத்தில் நஞ்சேந்தி உதட்டினிலே தேனேந்தி
. .உள்ளவர் நாக்கினிலே வாக்குதான் தவறிடுமே
வாக்கனிலே வலிமை வாய்மை வேண்டும் பிறறை யாம்
. .வஞ்சிக்காது வார்த்தையிலே வாசம் வேண்டும்
நாக்கினிலே வாக்கது மாறாது நம்பிக்கையுடனிருந்தால்
. .நாடு நகர் மாக்கள் போக்கில் புதுமை தோன்றும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.