புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்" தொடர் கதைகளின் அத்தியாயம் -14

                                           டென்மார்க் ரதி மோகன்

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்" 


தொடர் கதைகளின் அத்தியாயம் -14


நாளடைவில் மதுமதிக்கு அனசன் (Andersen)மேல் நல்லதோர் எண்ணம் வளரத்தொடங்கியது. எங்கு சென்றாலும் அனசனை (Andersen)துணைக்கு அழைத்துக்கொண்டாள். தோழனாய் , சகோதரனாய் , தந்தையாய் அவனின் அன்பு அவளை திக்கு முக்காட வைத்தது.. "அனசன் "அவன் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளுக்குள் இனம்புரியாத ஒருவகை சந்தோசம் ஏற்படுவதை மதுமதி உணர்ந்தாள்... அவனைக் காணாத பொழுதுகள் அவளுலகம் இருண்டு போய்க்கிடந்தது. " யாரிவன்?? ஏன் எனக்குள் இந்த உணர்வு... இதுதான் காதலா? அவனுக்கும் இப்படித்தோன்றுமா?" தன்னைத்தானே கேள்வி கேட்டு சிரித்தும்கொண்டாள் . காதல் என்ற உணர்வு எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்தே தீரும், தவிர்க்க முடியாதது, புனிதமானதொரு உணர்வு. சிலருக்கு ஒருவரை பார்த்தவுடனேயே ஏற்படும். அங்கே அழகுதான் முதல்நிலைப்படுத்தப்படும்.ஆனால் நீண்ட காலமாக பழகிய பின் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து ,உள்ளங்கள் இணைந்து வரும் காதல் ஈடிணையற்றது. அது ஆழமானது,ஆயுளுக்கும் அது நீடித்துச்செல்லும். அவ்வாறான காதல்தான் மதிமதியினுடையது. அனசன் டெனிஷ் சமூகத்தை சார்ந்திருந்தபோதும் வேற்று மதத்தானவன் என்ற போதிலும அவனிடம் நிற, மத ,இன பேதம் எதுவும் இல்லை. இரக்கமுள்ள மனதுடையவன். இனியவன். அவனின் கண்களில் , பேச்சில் ஒரு தனிக்கவர்ச்சி எப்போதும இருக்கும். இவையெல்லாம் அவனின்பால் ஓர் ஈடுபாட்டை அவளுக்கு ஏற்படுத்த காரணமாகிப்போனவை.
கோடைகாலத்து சூரியன் அதிகாலையிலேயே மெல்ல மெல்ல தலைகாட்டத்தொடங்கியிருந்தான். நீண்ட பகல் பொழுதுகளும் குறுகிய இரவுகளுமாக டென்மார்க் கோடைகாலம் நகர்ந்துகொண்டிருந்தது. எங்கும் வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கி சிரித்து கொண்டிருந்தன. அனசன் கடற்கரைக்கு செல்வதற்கு மதுமதிக்கு அழைப்பு விடுத்திருந்தான். அவளுக்கு பெரிதாக விருப்பம் இல்லாதிருந்தபோதும் அந்த அழைப்பை தட்டிக்கழிக்க முடியவில்லை. இதற்கு அவள் மறுப்பு சொன்னால் அவன் மனம் வேதனைப்படுமே என்ற ஆதங்கம் அவளிடம் இருந்தது. அத்தோடு அனசனின் குடும்பமும் கடற்கரைக்கு வருவதாக ஏற்பாடாகி இருந்தது. அனசனின் குடும்பம் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற அடிப்படையில் அழகாக சிறியதாக அமைந்த ஒரு குடும்பம்.
அவனின் தங்கை பல்கலைகழகத்தில் உளவியல் துறையில் கல்விக்கற்றுக்கொண்டிருந்தாள். அவளுக்கு மதுமதியை ரொம்ப பிடிக்கும். ஈழத்துப்பெண்களின் கலையும், கலாச்சாரமும் பார்த்தும், கேட்டும், படித்தும். வைத்திருந்தாள். பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு மதுமதி அவளையும் அழைத்துச்செல்வது வழக்கம். மதுமதி முறைப்படி பரதநாட்டியம் கற்றவள். புனிதமான அந்தக்கலையை தொடர்ந்து படிப்பிக்க ஆசை அவளுக்கு இருந்தபோதும் அது நிறைவேறாத்தாகவே இருந்தது. அனசனின் தங்கை அனேற்றா(Annette ) பரத நாட்டியத்தின்மேல் இருந்த ஈடுபாட்டால் ஒற்றைக்கை முத்திரைகள் 28 ஐயும் படித்து வைத்திருந்தாள். ஆடவும் கொஞ்சம் மதுமதியிடம் இருந்து கற்றிருந்தாள். மேலைத்தேய மக்களுக்கு நம் கலைமேல் இருக்கும் ஆர்வத்தை கண்டு மதுமதி வியப்புற்றாள்.
நேரம் மதியத்தைத் தாண்டி 14.00 ஆகி இருந்தது . அவசர அவசரமாக மெல்லிய கத்தரிப்பூ நிற சட்டையும், அதே நிற நகப்பூச்சும், விரித்துவிடப்பட்ட, அளவாக கத்தரிக்கப்பட்ட அழகிய கூந்தலும், எப்போதுமே அவளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மென் புன்னகையும். அவளின் அழகுக்கு அழகு சேர்த்து மெருகூட்டியிருந்தது. ஒரு கூடையில் மதுமதியால் தயாரிக்கப்பட்ட சான்ட்விச் பாண் துண்டுகள் ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தாள். நறுக்கப்பட்ட சலாட்டை ஒரு பெட்டியில் வைத்து இறுக மூடியபின் கொக்கோகோலா போத்தல்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது அனசனின் தொலைபேசிஅழைப்பு வந்தது. மதுமதிக்காக காத்திருப்பதாக அவன் கூறியதும் அதற்கு அவள் தான் உடனே வருவதாக பதில் அளித்துவிட்டு வேகமாக காரை ஓட்டிக்கொண்டிருக்கையில் மாமா மாமிக்கு சொல்லாமல் போகும் குற்ற உணர்வு மனதை தாக்கியது. வீதியோரமாக காரை நிறுத்திய மதுமதி " அங்கிள் நான் இன்று ஒரு பார்ட்டிக்கு போக வேண்டி இருக்கு வர லேட்டானால் உங்க வீட்டை வர மாட்டன் "" என சொல்லிவிட்டு மீண்டும் காரை ஓட்டத் தொடங்கினாள்.
மதுமதியின் மனதிற்குள் உள்ளூர ஒரு பயம் தொற்றிக்கொண்டது. அனசனோடு மதுமதி கடற்கரைக்குப்போவதை யாரும்கண்டு மாமாவிடம் போய் சொல்லிவிட்டால் தன் நிலை என்னவாகும்? மதுமதி நல்லபொண்ணு என மாமா அவள்மேல் அதிக பற்றும் வைத்திருந்தார். சங்கருக்குகூட தமிழ்கலாச்சாரம் மறவாத நல்ல பெண் என்ற அளவுக்கு அதிகமான மரியாதை அவள்மேல். இந்த சூழ்நிலையில் மதுமதியை வெள்ளைக்காரனோடு அவர்கள் சந்திக்க நேரிட்டால்? அவள் நிலை என்னவாகும்?
மதுமதி தன்னைத்தானே நொந்து கொண்டாள்" கடவுளே ஏன் எனக்கிந்த நிலை? ஏன் நான் மாறிப்போனேன்? தமிழை பழித்த செயலுக்காக சங்கரை வெறுக்கத்தொடங்கின நான் இன்று முற்றுமுழுதாக தமிழ் சமுதாயத்தை விட்டு இன்னொரு நாட்டவன், வேறு மதத்தவன் மேல் ஏன் காதல் கொண்டேன் ??" அதற்கு மேல் அவளால் சிந்திக்க முடியவில்லை...
காரும் சங்கர் வீட்டை அடைந்தது. எல்லோரும் கடற்கரையை நோக்கி பயமானார்கள். அனசன் வந்து மதுமதியின் காரில் ஏறிக்கொண்டான். இருவரும் நீண்டநேரம் எதுவும் பேசவில்லை. ஒரு அசாரண அமைதி நிலவியது. தீடீரென்று பெற்றோல் நிலையத்தில் காரை நிறுத்தும்படி சொன்ன அனசன் ஒரு சொக்லேட் பெட்டியுடனும் ,சிவப்பு ரோஜாவுடனும் வந்து " Min Skat!! jeg elsker dig( my dear I love you) என்ற போது அவளுக்கு உடல் ஒருகணம் நடுங்க, வெட்கத்தில் அன்றலர்ந்த செந்தாமரையாக முகம் மாறியது. என்னதான் அதே உணர்வு அவளுக்குள் இருந்தபோதும் அவளால் அதை வெளிக்காட்டிக்க முடியவில்லை. ....பெண்களுடன் நால்வகை குணங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கூடப்பிறந்தவை. அவளுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறக்கத்தொடங்கினபோதும் நாணம் வந்து திரைச்சேலை போட்டது... அனசனை நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று அவள் நிலத்தைப்பார்த்தாள். மௌனத்தை கலைத்த அனசன் " இதுதான் தமிழ்பெண்களின் அழகு அதைதான் நான் விரும்புகிறேன்" என டெனிஷ மொழியில் பேசிக்கொண்டே போனான் .

(தொடரும)No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.