புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்" தொடர் கதைகளின் அத்தியாயம் -15


                                                                   டென்மார்க் ரதி மோகன் 

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்" தொடர் கதைகளின் அத்தியாயம் -15

அனசனின் அந்த பேச்சினிலே தமிழ் மீதான அவன் பற்றும் தமிழ்பெண்கள் மீதான அவன் நல்லெண்ணமும் தெளிவாக தெரிந்தது. இந்துசமயம் மீது அவனுக்கு ஈடுபாடும் , இந்துமுறைப்படி நடைபெறும் திருமண வைபவங்களில் கலந்து சிறப்பிப்பது மட்டுமல்ல தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியுடன்தான் செல்வது அவன் வழக்கம் . மொத்தத்தில் அவனோர் தமிழனாகவே மதுமதியின் கண்களில் தெரிந்தான். அனசனை காதலிப்பது தவறில்லை என அவளின் உள்ளுணர்வு சொல்லியது. ஆனாலும் அவள் பிறந்த , வளர்ந்த குடும்பம் ஆசாரமானது. வேற்று இன மதமுடையவனின் புதுவரவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பது இது அவள் அறிந்த விடயம். அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரி தாழ்ந்தசாதி பையனை காதலித்து ஓடி போன நாளில் இருந்து இற்றைவரை அந்த அத்தையுடனான உறவை தொடர்பை அறுத்தவிட்ட குடும்பம். அந்தளவு ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மதுமதியின் குடும்பம் அவள் காதலை ஒருபோதும். ஏற்றுகொள்ளப்போவதில்லை என்பது அவளுக்கு தெரிந்திருந்தபோதும் அவளால் உணரப்பட்ட முதல் காதலிது.அனசன் மேல் ஏற்பட்ட காதலை அடைய பல சவால்களை மதுமதி ஏற்றே ஆக வேண்டும்.
பேசிக்கொண்டே போன அனசனைப்பார்த்து" அனஸ் போதும் போதும் புகழாரம்... நிற்பாட்டு .. உங்க அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க.."
""ஹ ஹ லூசு பெண்ணே .. என் விருப்பம் எதுவோ அது அம்மாவின் விருப்பம்.. என் காதலை நீ ஏற்றுக்கொள்வாயா? ஒரேயொரு வார்த்தை "ஜா" என சொல்லி விடு"" அனசன் ஏக்கத்தோடு அவள் கைகளை பற்றினான்.

" மது ..உனது வெட்கம் என் மீதான காதலுக்கு சாட்சி ஆனாலும் அதை வெளிப்படையாக நீ சொல்ல தயங்குகிறாய் எனக்கு தெரியும் அன்பே" பேசிக்கொண்டு போனவனை அங்கே வந்த அனேற்றா(Annette ) வருகை தடுத்தது. ஓடிவந்த அவள்" வாங்க எல்லோரும் கடலில் இறங்குவோம் " என்றாள். நீச்சல்உடையில் ரொம்ப அழகாக தெரிந்தாள். " ஏன் மது நீங்க நீச்சல் உடை மாற்றவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மதுமதி இதோ நான் சின்ன சோற்ஸ், சின்ன பிளவுஸ் நல்லாத்தானே இருக்கு" சிரித்தபடி சுழன்று காட்டினாள். " ஓகே ஓகே என பதிலளித்தபடி அனெற்றா மதுமதியின் கரத்தை பற்றி இழுத்து தண்ணீருக்குள் தள்ளினாள்.கடல் மீன்களாக அவர்கள் எல்லோரும் அழகாய் நீச்சல் அடித்தார்கள். கடல் அலை மேலெழுவதும் காற்றும் பலமாகத்தான் அன்று இருந்தது. மதுமதியால் கஸ்ரப்பட்டே நீந்தமுடிந்தது. ஆனாலும் கடலில் நீச்சல் அடிப்பது என்பது மதுமதிக்கு கொள்ளை ஆனந்தம். ஆனால் நீண்டதூரம் கடலுக்குள் போனபோது மதுமதியால் அலைகளுக்கு எதிராக தாக்கிப்பிடிக்க முடியவில்லை. பேரலையொன்று அவளை இழுத்து செல்வதை மட்டும் உணர்ந்தாள். ஆனால் அதை அவதானித்த அனசன் உடனேயே அவளை தாங்கி தன்னோடு சேர்த்து நீந்தத் தொடங்கினான். கண்களால் நன்றி என சொன்னவளுக்கு வாய் பேச மறந்தது. அந்த இரு அழகிய கடல் மீன்கள் அழகாய் நீரினிலே துள்ளியாடிய காட்சி அழகாய் இருந்தது. அவனின் நெருக்கமான தொடுகையில்
அவள் உடலுக்குள் ஹோர்மோன்களின் அதிவேக தொழிற்பாட்டில் ஒரு மின்சாரம் உடலினில் பாய்ந்த உணர்வாய் கணகள் மயங்க....கரைவந்தடைந்தபோதும் அவனைப்பற்றிய கரங்களை விலக்க மனமின்றி கண்கள் நான்கும் கதைபேசின.அங்கு ஓரு காதல் உலகம் உதயமானது.
காதற்பூக்கள் பூத்து குலுங்கிச் சிரித்தன. " சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது.... " பாடல்வரிகளை முணுமுணுத்தபடி அவனிடம் இருந்து விலகி தன் உடுப்பை மாற்ற சென்றாள் .
மதுமதிக்கு எப்போதும் மெல்லிய வர்ண ஆடைகள் நன்றாக பிடிக்கும். அழகான வெள்ளை நிற சட்டையோடு வந்தவளை பார்த்த அனசன் "" உண்மையில் நீ தேவதையேதான் " என்றான். மெல்லியதாக சிரித்தபடி தனது பையை கையில் எடுத்தபடி " நேரமாச்சு கிளம்புவோமா " என ஆம் என தலையசைத்த அனசன் இவளோடு வந்து காரில். ஏறிக்கொண்டான் . " அனஸ்...இந்தா சாவி நீயே காரை ஓட்டு ... களைப்பாய் இருக்கடா" என்றாள். இருவரும் வழிநெடுகலும் எதுவுமே பேசவிவ்லை. தனது கைப்பையில் இருந்த தனது மொபைலை எடுத்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தபோது அம்மா உடனே கதைக்க வேண்டும் என எழுதியிருந்தா. அவளுக்குஉள்ளூரபயம் தொற்றிக்கொண்டது. அம்மாவுக்கு சிலநாட்களாக இரத்த அழுத்தம் கூடி இருந்தது. உடனேயே வைபரில் இருந்து ஹோல் எடுத்தாள். எதிர்முனையில் அம்மா வழமையாக கேட்கும் அதே வாக்கியம் " பிள்ளை சாப்பிட்டியா".
அவளை இத்தனை அன்போடு கேட்கும் ஒரு ஜீவன் அம்மா ஒருவரேதான். " என்ன மது பண்ணுறாய் " அவாவின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாதவள் " அம்மா வெள்ளைக்கார நண்பர்களுடன் கடலுக்கு வந்தன் அம்மா .. இப்ப வீட்டை போறன்"" என்றவளை.. " உனக்கென்ன அவங்களோடை சினேகிதம் ஏன் நாலு தமிழ் சனத்தோடை போய் இருக்கலாமே"அம்மாவின் குரல் கடுப்பானது. " அம்மா.....அது வந்து வந்து...." வார்த்தைகள் தடுமாறின. அம்மா பிளீஸ்மா வீட்டை வந்து பேசுறேனே என்றவள் மொபைலை கைப்பையுக்குள் திணித்தாள். மெல்லியதாய் அவளை நோக்கி புன்னகைத்த அனசன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். கண்களை மூடி சீற்றில் சாய்ந்தவளின் மனதில் ஒருபுறம் காதல்பூக்களும் மறுபக்கம் சந்திக்கப்போகும் பூதாகரமான பிரச்சனைகளும் நிழலாடின.. " ஐயோ கடவுளே நான் தவறு செய்கிறேனா? வெள்ளைக்காரனை விரும்புவது தவறா? ஏய் அனஸ் ஏண்டா உனை நான் பார்த்தேன்... நீ நல்லவன் என்று எனக்குத்தெரியும் ... ஆனால் என் குடும்பம் உனை ஏற்குமாடா... தெரியலையே"" ஆயிரம் ஆணிகள் கொண்டு அடித்தாற்போல இதயம் வலித்தது.
ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கு வாழும் பல தமிழ் குடும்பங்களில் பல கலப்பு திருமணங்கள் நடைபெறுவது காணக்கூடியதாக இருக்கிறது. மதம் இங்கு பிரச்சனையாக பார்க்கபடவில்லை. இருவீட்டாரும் இணைந்து தத்தம் விருப்பபடி இந்துசமயமுறையிலோ அல்லது கிறிஸ்தவ முறையிலோ தாலியும் , மோதிரமும் அணிகிறார்கள். வெள்ளைக்கார பெண்கள் பலர் இந்து முறைப்படி தாலி அணிந்து கூறைச்சேலை அணிந்து நடந்த திருமணங்களும் உண்டு. சில குடும்பங்கள் இப்படிப்பட்ட கலப்புத்திருமணத்தை ஏற்றுக்கொண்டபோதும் பல குடும்பங்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எப்படிஇருந்தபோதும் பழக்கவழக்கங்கள், மொழி சிக்கல், அந்நிய கலாச்சார ஊடுறுவல் தமிழ்சமுதாய பாரம்பரியகட்டமைப்பில் மாறுதல்களை கொண்டுவரலாம் என்ற அச்சம் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் மதுமதியின் குடும்பமும் இதற்கு விதிவிக்கல்ல. காதல் என்ற ஒன்று வரும்போது பல பிரச்சனைகள் ஒன்றாய் வருவது காதலின் சாபக்கேடோ இல்லை காலத்தின் சாபக்கேடோ... மதுமதியின் காதலும் இன்று கேள்விக்குறியோடு..
மௌனத்தை கலைத்த அனசன் தனக்கு தெரிந்த தமிழில்" என்னம்மா பலத்த யோசனை" என.. " ஒன்றுமில்லையே " என்றவள். காரினுள் உள்ள சிடிபிளேயரை போட்டாள் " கூடை மேலே கூடை வைத்து கூடலூரு போறவளே உன் கூட நானும் வாறன் கூட்டிக்கொண்டு போனலென்ன.." என்ற பாடல் தேனாய் காதுகளில் பாய கண்களை மூடி ரசித்த வண்ணம் மதுமதி
இருக்க காரும் அனசன் வீட்டை அடைந்தது.

(தொடரும்)
No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.