புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனிவிழும் மலர் வனம்" தொடர் கதையின்                                                                                  அத்தியாயம் -16

காரை விட்டு இறங்கிய அனசன் மதுமதிக்கு கை அசைத்துவிட்டு தன் வீட்டிற்கு நுழையவும் ,மதுமதி தன் பயணத்தை மாமா வீட்டை நோக்கி தொடர்ந்தாள். அங்கு வந்த அவள் வீட்டுமணியை அழுத்தியபோது சங்கீதா கதவை திறந்தபடி "வாங்கோ மது..உஷ் எல்லோரும் உங்க மேல செம கோபம்" என்றாள். மெதுவாக சங்கீதா. " ஏன்" என்றதிற்கு உஷ் என சைகைகாட்டியபடி அவள் நகர உள்ளே வந்தவளை பார்க்காதமாதிரி எல்லோரும் இருந்தது அவளுக்கு என்னவோ போலிருந்தது. மெல்ல மாமி அருகே வந்தவள் பேச்சைத்தொடக்கினாள். அப்போதுதான் மாமியின் முகத்தில் கோபக்கனல் வீசியது " தெரியாமல்தான் கேட்கிறன் எங்கை இவ்வளவு நேரமும் ஊர் சுத்திட்டு வாறாய்.." என்றதுக்கு " ஐயோ மாமி உங்களுக்கு சொல்லிட்டுத்தானே போனனான் " என மாமியின் கையை பற்றினாள். " " மது காலம் கெட்டுக்கிடக்கு.. என்ரை மகளின்றை பிரச்சனைக்கு இப்பதான் ஒரு முடிவு எடுத்துப்போட்டு இருக்கிறன்.. இப்ப நீ ...இப்படி இந்த வெள்ளகளோடை சுத்துறது பிடிக்கலை ... ஏதாவது காதல் கீதல் என்று வந்தாயோ தொலைச்சிடுவன்... அவங்கள் நாளுக்கு ஒன்று பிடிக்கிறவங்கள்.." என்ற உடன் மதுமதிக்கு எங்கு இருந்து இப்படி கோபம் வந்ததோ தெரியலை "" மாமி பிளீஸ் வேணாம்.. என்னை நம்புங்க..அவன் அப்படிப்பட்டவனல்ல..." என்றாள். இதைக்கேட்டவுடன் மாமியின் கோபம் பலமடங்கு ஆனதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. " அப்போ நீ உண்மையா அவனை விரும்புகிறாயா? சொல்லு இப்ப " அவளின் தோளை பிடித்து உலுக்கியதை மதுமதி எதிர்பார்க்கவில்லைதான். """ வந்து வந்து இல்லையே.. ஒன்லி பிரண்ட் " வார்த்தைகள் தொண்டைக்குள்ளிருந்து வந்ததும் வராததுமாய் திண்டாட தன்னை சுதாகரித்துக்கொண்டாள்.
 


இவ்வளவு சம்பாசணையையும் தனது அறைக்குள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த சங்கர் வெளியே எட்டி தலையைக்காட்டி " ஏய் இந்த தமிழ்ப்பொண்ணு எப்போது வெள்ளக்காரியானாள்?? கடலிலே கூட ஒன்றாக அவனோடு குளித்தாளாமே"
எல்லோருடைய வார்த்தைகளும் அம்பாக அவள் மேல் பாய்ந்தன. மாமா ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவரின் மௌனம் அவளை அணு அணுவாக கொல்லத்தொடங்கியது.


கண்களிலே கங்கை பெருக்கெடுக்க "போயிற்று வாறேன் "என்றபடி தனது காரை நோக்கி விரைந்தவளை தடுத்து நிறுத்திய மாமி அன்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டபடி " நீ என் மருமகள் ஆனால் உனை என் மகளுக்கு மேலாக நினைக்கிறன்... நீ நல்ல பொண்ணு.. நீ தவறான பாதையில் போக க்கூடாது என கண்டிக்கிறேனே தவிர உனை வெறுக்கலை மது..,," " சங்கீதா ஒரு கப் ரீ கொண்டு வா" என்றபடி மதுவின் தலையை வாஞ்சையுடன் தடவ மதுமதி அந்த அன்பிற்குள் கட்டுண்டாள்.
அவளின் காயப்பட்ட இதயத்திற்கு ஒத்தடமாக அது இருந்தது. அவள் தேநீரை அருந்தி முடித்தபடி " சரி நான் போயிற்று வாறன்" என ஆயத்தமானாள். இரவு பத்துமணியானபோதும் பகல் போன்ற வெளிச்சம். டென்மார்க்கின் அழகிய இன்பமான கோடைகாலம். டென்மார்க்கின் வீதி நெடுகளும் கைகோர்த்த ஜோடிகளும் அவர்களின் அரைகுறை ஆடைகளும், கெஞ்சலும் கொஞ்சலுமாய் போவதை பார்க்க அவளுக்குள்ளும் ஓர் ஏக்கம் நெஞ்சிற்குள் அவளையறியாமலே ஏற்பட்டது. காதல் இவ்வளவு அழகானதா? எவ்வாறு எல்லாம் சுதந்திரமாக காதலிக்கிறார்கள். அவளுக்குள்ளும் ஒரு சலனம். அவளும் ஒரு பெண்தானே அவளுக்கும் உணர்ச்சி உண்டுதானே. இதை ஏன் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையே. சிலசமயங்களில் காலமும் , அகச்சூழலும் புறச்சூழலும் ஒருவரின் மாற்றத்தில் வாழ்க்கையில் பெரும் பங்கை வகிக்கின்றன. அவளுக்குள் எழுந்த இந்த மாற்றமும் அப்படியே. மதுமதிக்கும் மற்ற பெண்களைப்போல் தன் எதிர்கால கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆசைகளும் உண்டு. மன்மதனை போல அழகில்லாவிட்டாலும் பரவாயில்லை. அவள் மேல் அன்பாய் எப்போதும் இருத்தல் வேண்டும். கையோடு கைகோர்த்து வீதிகளில் நடக்க வேண்டும். வீட்டு வேலைக்கு ஒத்தாசையாக இருத்தல் வேண்டும். வாஞ்சையோடு தலைதடவி ஒரு முத்தத்தோடு ஒரு வார்த்தை சாப்பிட்டியா என கேட்க வேண்டும்.. இப்படியே நீண்டு கொண்டு போன அவளின் ஆசைகளை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டாள் . கனவோடு அவளையும் சுமந்து வந்த கார் அவள் இருப்பிடம் அடைய இறங்கி தன் குளியலறையில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு வந்த போது அவளின் மனம் இலேசானது.
எதிர்கால கனவுகளில் அவள் மனம் இறக்கைகட்டி பறந்தது. அப்போதுதான் மதுமதியின் தங்கையிடம் இருந்து அழைப்பு வந்தது. " அக்கா .. அம்மாக்கு ஹாட்அட்ராக் வந்து ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்கு.. எனக்கு பயமாயிருக்கக்கா.. அம்மா எங்களை விட்டு போயிடுவாவோ என... ஏதோ மாமாவோடை ரெலிபோன் கதைத்தா பிறகுதான் எல்லாம் நடந்தது" என்றாள்.

" என்னடி சொல்றாய்.. என்ரை அம்மாக்கு என்ன ஆச்சு.. வர்ஷா அக்கா வந்தவாவா? பிறைவேட் ஹாஸ்பிட்டலா கொண்டுபோய் காட்டு.. காசைப்பற்றி யோசிக்காதை.., எனக்கு அம்மா வேணுமடி.." தங்கைக்கு சொல்லியவாறு அழுதாள். " இறைவா உனக்கு என்மேல் இரக்கமே இல்லையா? இனியும் என்னால் சோதனைகளை தாங்க முடியாது.. இழப்புக்களை தாங்க முடியாது., போன பிறப்பிலை என்ன பாவம் செய்தேனோ தெரியலை .., என்னை அணு அணுவாக கொல்வதற்குப்பதிலாக ஒரேயடியாய் கொன்று போட்டிடு இறைவா.., "
அழுதாள். இதைகேட்ட மதுமதியின் தங்கையும் தொலைபேசியினோடு சேர்ந்தே அழுதாள்.

மதுமதியின் அம்மாக்கு ஹர்அட்டாக் வந்தது இது இரண்டாவது தடவை . அப்பாவையும், அண்ணனையும் இழந்தபோது முதல்தடவை வந்தது. இப்ப வருவதற்கு என்ன காரணமாக இருந்திருக்கும்? மனதிற்குள் ஏதோ ஒன்று அவளை குடைந்தது. அம்மா அவளுக்கு வேண்டும். அம்மாவை அழைத்து டென்மார்க்கை ஏன் இந்த உலகத்தையே சுற்றி காட்ட வேண்டும். எத்தனையோ ஆசைகள் அவள் மனதிற்குள் . இவையெல்லாம் நிறைவேற வேண்டும் என்றால் அவள் அம்மா வாழ்ந்தேயாக வேண்டும் . அவளின் குலதெய்வமான அம்மனுக்கும், சிவனுக்கும் விளக்கேற்றினாள். சாம்பிராணி போட்டுவிட்டு தேவாரம் படித்தபோது கண்ணீரால் தேவாரப்புத்தகம் நனைந்தே போனது.
தோடுடையசெவியன் காதுகளில் அவளின் பிரார்த்தனை செவிமடுக்கப்பட்டிருக்குமா..
ஆண்டவன் பதில் சொல்லவேண்டும்..( தொடரும்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.