புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஏப்ரல் மாதம் 2016 நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி பாராட்டுக்ககளைப் பெறும் கவிஞர்கள்தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை

சர்க்கரை பூசி சொற்களை
இனிக்க வைத்து
ஒரு சங்கீதப் பாட்டெழுது
பூமி ஓரிசையில் சுழலட்டும்......
சமத்துவம் முளைவிடும்
பூக்களை வரைந்து
தேனை ஊற்றிவிடு
சந்தோஷம் மலரட்டும்..........
மேகத்தை வரைந்திடு
மனித நேயம் பொழியட்டும்
ஆழும் வர்க்கமும் வாழும் வர்க்கமும்
ஒரு குடையில் நனையட்டும்......
காற்றையும் கதிர் ஒளியையும்
உன் கைகளில் பிடித்து வந்து
சுதந்திர ரகசியத்தின்
பொருள் எழுது.............
நெருப்புப் பொறிகளாய்
பொறித்த வரிகள் புறப்பட்டு வந்து
தீமைகளை அழிகட்டும்!!
நன்மைகள் துளிர்க்கட்டும் ......
ஓ பாவலனே
துணிவு எனும்
விலங்கை அணிந்து கொண்டு
உன் கைகளுக்குள் ஒழிந்திருக்கும்
நெம்புகோலால்
அடிமைகளை புரட்டிவிடு
உலகம் உய்யட்டும்..........!!
சுபாரஞ்சன் -டென்மார்க்

                                                         இராதை பாரதீ இராஜேந்திரன்

தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் கைகள்
பாக்கள் மட்டும்
எழுதுவதில்லை.

பசித்தெழும்
வயிற்றின் பாட்டை
பரிவுடனே எழுதி
பசியாற வைக்கும்

மழை மறந்த பூமி
மெளனம் காத்த வானம்
கசியாதோ என
கலந்தெழுதிய
பாவலன் கை.

வியர்வையை இயற்றி
விளைநிலம் உழுது
விதையுடன் பேசி
உறவு வளர்த்த
பாடல்கள்

காலைப் பனி சுரந்து
புல்லின் காதல்
சொல்லும்
இளம் பனி பாவலன்.

மழைச்சாரல்
மலைச்சாரல்
என இலக்கியம்
தொட்ட மரபு சொல்லும்
கவி வரிகளின் காவலன்

இருவிழி வீழ்ந்து
இதயம் கலந்த
உணர்வுகளின்
அனைகளை உடைக்கும்
உன்னத கவிகள்

தாய்யின் மடி
தந்தையின் தோள்
கசிந்துருகும்
பாசம் சொன்ன கவிஞன்.

ஆழம் துலாவும்
பார்வையில்
ஆயிரம் சொல்லி
ஆசைகளை பதியலிட்டு
ஈரம் தோய்ந்த சாலையில்
பிரியமானவர்களின்
விரல் பிணைத்து
சாரலில் நடந்த
சந்தோஷ தருணங்களை
பாட்டில் கொணரும்
பாவலன் கையன்றோ?

இராதை பாரதீ இராஜேந்திரன்

திருப்பூர் மாவட்டம்


குமுதினி ரமணன்

தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலர் கை.
எண்ண அலைகளின் கலையாத
வண்ணத் தூரிகை.
கற்பனைச் சிறகுகளில் கருக்கொள்ளும்
காதல் மாளிகை.
மனக்கடலின் ஆழத்தில் உறங்காது
முத்துக்களிக்கும் ஆழ்மன எழுகை.
வாழ்வியலோடு நடைபழகும்
காலத்தின் தேடுகை.
மனித உள்ளத்தின் உணர்வறிந்த
எழுதுமுனையின் ஆளுகை.
முக்காலமும் முதல் அறிந்த
இறைவன் அவன் ஏடுகை.
எழுத்தாணி ஆயுதமாய்
அறிவு தீட்டும் எழுதுகை.
மனித உள்ளத்தினை உளி
கொண்டு செதுக்கிடும் சிற்பியின் கை
.
மனித உணர்வுகளை புரிந்திடும்
உளவியலின் ஆளுகை.
சமூகத்தின் குறை கண்டு
துடித்திடும் மாண்புகை.
பழம் வாழ்வியலை காட்டி
நின்ற சங்கப்பாலவன் கை.
வளமான தமிழ் மொழியில்
வாழ்வு பெறும் கை
.
குமுதினி ரமணன்


                                                                 அ.முகம்மது பர்ஸான்     

தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை
மொழிக்குள்ளே முக்குளித்து
முத்தான சொல்லெடுத்து
ராகத்தின் வரப்புக்குள்
ரசனையோடு பட்டைதீட்டி
பாட்டெழுதும் பாவலன் கை
போற்றப்பட வேண்டுமல்லோ...

மலரோடு வண்டுரச
வந்த வழி மணம் வீச
தானாக மெட்டெடுத்துப்
பாட்டெழுதும் பாவலன் கை

தென்னையோடு தென்றலது
உறவாடிச் செல்லுகையில்
கீற்றோசை தனைக் கேட்டுப்
பாட்டெழுதும் பாவலன் கை

ஓடையிலே தண்ணீர்
ஓய்வின்றி ஓடுகையில்
அதன் சலசலப்பைச்
சந்தமாக்கிப்
பாட்டெழுதும் பாவலன் கை

பால் நிலவைப்
பார்த்து நின்று - அவள்
பளிங்கு முகம் போல
எண்ணிக் கற்பனையில்
பாட்டெழுதும் பாவலன் கை

பிஞ்சுப் பிள்ளையது
பீரிட்டுக் கத்துகையில்
அன்னையெனும் அந்தஸ்த்தில்
தாலாட்டும் தாயாகப்
பாட்டெழுதும் பாவலன் கை

தலைவி தாண்டுகையில்
கொலுசு சினுங்குகையில்
காதலும் காமமும் நெஞ்சில்
பேரோலி எழுப்புகையில்
இரட்டைப் பொருளில்
சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாவலன் கை

கடலோடு அலை பேச
புல்லோடு பனி பேச
புலரும் காலைப் பொழுதினில்
சூரியன் முகம் கண்டு
சூட்சுமமாய்ப்
பாட்டெழுதும் பாவலன் கை

இழவு விழுந்த போதும்
குழந்தை பிறந்த போதும்
மூத்த செடி பூத்த போதும்
பொருளூன்றிய சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாவலன் கை...
*******

அ.முகம்மது பர்ஸான்


தா.தமிழ் தங்கராஜ்


தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை


எண்சீர் விருத்தம் (இடம் போதாமையால் மடித்து சமைத்துள்ளோம்)

பாட்டெழுதும் பாவலனின்
புரட்சிக் கைதான்
பச்சோந்தித் தனமில்லாப்
, பாட்டுக் கைதான் . . . .
வேட்டுவைக்கும் தீமைக்கு
அவனின் கைதான்
வேதனைகள் தீர்த்தேதான்
பார்க்கும் கைதான் . . . .
தோட்டாக்கள் அவனெழுத
சரமாய் பாயும்
தோள்மீது விழும்போது
பூவாய் வீழும் . . . .
பாட்டாளி மக்களுக்கே
வடிக்கும் பாட்டை
பாமரனின் நலனுக்காய்
நடத்தும் வேட்டை . . .

பூக்களையும் பாக்களென
கோர்க்கும் கைதான்
பூமிதனை சாமியென
மாற்றும் கைதான் . . . .
தாக்கவரும் வறுமையை
தாக்கும் கைதான்
தாமரையாள் தவழ்ந்துவரும்
கவிதைக் கைதான் . . . .
சீக்குநிறை போக்குகளை
தீர்த்துக் கட்டும்
சீர்த்திருத்த நோக்குகளை
வார்த்துக் காட்டும்
தூக்கிலிட்டு பொய்களையே
அழித்துக் கொல்லும்
தூங்காமல் தேசமதை
காத்துக் கொள்ளும் . ..

சாதிமத பேய்களையே
ஓட்டும் கைதான்
சமுதாய தாகமதை
தீர்க்கும் கைதான்
போதிமர புத்தனென
மாறும் கைதான்
போதனைகள் மக்களுக்காய்
கூறும் கைதான் . . . .
சாதிக்கும் பாவலனின்
கரங்கள் வாழ்ந்து
சாகாமல் புவிமீது
இன்றும் என்றும் . . . .
போதிக்கும் பாவலர்காள்
வாழ்க! வாழ்க !
போதிக்கும் பாவலரே
வாழி ! வாழி !


தா.தமிழ் தங்கராஜ்
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.