புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்" தொடர் கதைகளின் அத்தியாயங்கள்


டென்மார்க்  ரதி மோகன்


டென்மார்க்  ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்" தொடர் கதைகளின் அத்தியாயங்கள் 


அத்தியாயம்-8

பனி விழும் மலர் வனம்

காரை விட்டு இறங்கிய மதுமதி சோர்வாக தன் சோபாவில் சாய்ந்தாள். அக்கா வர்ஷா அனுப்பிய கடிதத்தை பலதடவை வாசித்தாள். அக்காவின் சோகமான உள்ளம் துல்லியமாக அவள் எழுத்தில் தெரிந்தது. ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ நல்ல இடத்தில் கல்யாணம் கட்டி வைப்பது என்பது பெரிய சிக்கலான விசயம் என்பது அக்காவின் கல்யாணபேச்சின் ஊடான இழுபறியில் இருந்து கண்டுகொண்டாள் மதுமதி. தாயார் பார்க்காத கல்யாண புறோக்கர்கள் இல்லை எனலாம். காசுதான் கரைந்து போனது மிச்சம் என தாயார் நொந்து கொள்வதுண்டு. அக்கா கறுப்பானாலும் களையாகத்தானே இருக்கிறாள் .. அவளின் அமைதியும் அழகான பேச்சும் எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடும். அப்படிப்பட்ட என் அக்காவை விரும்பி நிச்சயம் ஒருவன் வருவான் என மனதிற்குள் நினைத்தபடி சமர்ப்பிக்கவேண்டிய டெனிஷ் பாடத்தில் கவனம் செலுத்த தொடங்கினாள் மதுமதி.
நள்ளிரவு 12 ஐ தாண்டியபோதிலும் போர்வைக்குள் நுழைந்த அவளின் கண்களில் தூக்கம் நுழைய மறுத்தது. இன்னும் சிலமாதங்களில் பரீட்சை முடிந்ததும் தொழில்ரீதியான குறுகிய படிப்பு ஒன்றை தேர்வு செய்து முடித்தால்தான் அவளின் தலைமேல் இருக்கும் பாரிய பொறுப்பை இறக்கி வைக்க முடியும். சீதனத்திற்கு எதிரான கருத்து அவளிடம் இருந்தபோதும் அக்காவின் வாழ்விற்காக எத்தனை இலட்சங்கள் கொடுத்தாவது அவளுக்கு ஏற்ற நல்ல வரன் தேட வேண்டும் என்ற விருப்பம் எல்லாவற்றையும் விட மேலோங்கி இருந்தது. தங்கைக்கு சிறந்த உயர் கல்வி கொடுக்க வேண்டும் என மனதிற்குள் தீர்மானம் செய்து கொண்டாள் .
குளிர்காலம் மெல்ல மெல்ல ஐரோப்பாவை விட்டு நகர இனவேனில் காலத்தின் இளம் வெயிலும் பறவைகளின் கீச்சு கீச்சு ஓசையும் , துளிர்கள் விட்ட மரங்களும் பூத்துக்குலுங்கும் மலர்களும் மனதை இதமாக வருடிச்சென்று காலை சந்தோசத்தை அள்ளி தெளித்து செல்லும் எழிலான சித்திரைமாதம்... இந்த மாத்த்தில் சிலமலர்கள் சாலையோரம் மலர்ந்து அழகாக்கிசெல்லும் ஐரோப்பிய தேசத்தை. இயற்கையை ரசிப்பதில் அவளுக்கு அலாதிப்பிரியம் உண்டு. செடி ,கொடி மலர்களோடு பேசுவாள்.. பறவைகள் விலங்குகள்மேல் அன்பும் இரக்கமும் உண்டு. அன்பும் கருணையும் நிறைந்த மனம் மதுமதியினுடையது.
இரவு 2 மணி மணிக்கூட்டு அலாரம் சொல்லியது. புரண்டு படுத்தபோதும் அவளால் தூங்க முடியவில்லை. வெளியில் ஆட்கள் கதைக்கும் சத்தம் கேட்டது. அழைப்புமணி அடித்தாற்போல அவள் காதில் ஒலிக்க எழுந்து உட்கார்ந்த அவள்"" சீ இந்த நேரத்தில் யார் இது ...ஏதோ ஒரு பிரமைபோலதான்.. கனவு கண்டேனோ... அடேங்கப்பா தூங்காமல் கனவு காண்பார்களோ.. " நினைத்துக் கொண்டாள்.. சிரித்தும் கொண்டாள் .
இப்போது பலமாக கதவைத்தட்டும் ஓசை கேட்டது. இது கனவல்ல நிஜம். மெல்ல கட்டிலைவிட்டு இறங்கியவள் கதவருகே வந்தாள். ஆட்கள் பலர் கதைக்கும் சத்தம் தெளிவாக கேட்டது. தமிழில் பேசினார்கள்.
எந்தக் காரணம் கொண்டும் கதவைதிறக்கக்கூடாது என மனதிற்குள் நினைத்தபடி திரும்ப வந்து கட்டிலில் அமர்ந்த அவளை பயம் பற்றிக்கொண்டது...


அத்தியாயம்-9

பனிவிழும் மலர் வனம்..
.
மெல்ல மெல்ல நடந்து கதவருகே சென்றாள் மதுமதி. திறப்பின் துவாரத்தின் வழியே உற்று நோக்கினாள். அங்கே சங்கரின் நண்பர்கள் இருவர் சங்கரை கைத்தாங்கலாக தூக்கியபடி நின்றனர். ஒருகணம் மதுமதியின் இதயம் நின்றது போல் இருந்தது. மின்னல் வேகத்தில் ஓடிப்போய் கதவைத் திறந்தவள்
" சங்கருக்கு என்னாச்சு நல்லாத்தானே இருந்தான் ஏதாவது அக்சிடென்ட்.. என இழுத்தவளை இடைமறித்த சங்கரின் நண்பன் சதீஷ் "" இல்லை மது என்ரை வீட்டிலைதான் சும்மா கதைச்சு கொண்டுருந்தம்... சங்கர் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டான்..எல்லா ரிங்சும் எடுத்துட்டான் .. நான் வேணாம் என்றேன் Carlsberg , vodka என தொடங்கி snaps வரை ஒன்றும் விடவில்லை...கடைசியா இப்படி மயங்கிற்றான்..அங்கை வீட்டை போனால் அம்மா கத்தி குளறுவா என்றுதான்... ஏன் சங்கீதா ரெலிபோன் பார்க்கலையோ... " என.. அப்போதுதான் தொலைபேசியை பார்த்தாள் பல தடவை அழைப்பு வந்து இருந்தது. அவள் தொலைபேசியின் சத்தத்தை நிறுத்தி இருந்ததையும் அப்போதுதான் அவதானித்து தன்னைத்தானே கடிந்து கொண்டாள் .
நண்பர்கள் சங்கரை கட்டிலில் கொண்டுவந்து படுக்கவைத்தார்கள்.அவன் எந்தவித சலனமும் இன்றி கண்களை மூடி இருந்தான்..பார்க்க கோபம் ஒருபுறம். மறுபுறம் ஐயோ பாவமே என்ற பரிதாபம் அவன்மேல் அவளுக்கு இருந்தது.. எவ்வளவு கோபம் அல்லது வெறுப்பு இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது உதவும் மனப்பான்மை தானகவே வந்து விடுவது இயல்பே.. அது அவளிடமும் இருந்தது. அவனை அங்கே விட்டு விட்டு நண்பர்கள் சென்றபோது அதிகாலை 3.30 மணியை நேரம் தாண்டி இருந்தது.. சோபாவில் படுத்தபடி கண்களை மூடியபடி இருந்தபோதும் தூங்க எப்படி அவளால் முடியும். சங்கர் முனகியபடி இருந்தான் .. அதுவும் ஓர் ஆடவனுடன் தனியாக ஓர் அறையில் நினைக்கவே அவள் நெஞ்சம் பதறியது. சொந்தமோ பந்தமோ யாராக இருந்தாலும் பார்த்தவர்கள் என்ன நினைப்பார்கள் உள்ளூர பயம் அவளைக் கவ்விக்கொண்டது. இந்த ஐரோப்பிய சூழலை பொறுத்தவரை அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்காத தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் இந்த சமுதாயம். "ஐயோ கடவுளே ..இது எங்கள் நாடாக இருந்தால் கதை கட்டி விடுவார்கள்.. " மனதிற்குள் எண்ணி சிரித்துக்கொண்டாள்.காலைப்பொழுதும் வழமைபோல் புலர்ந்தது. வசந்தகால பறவைகளின் பாடும் ஓசையில் மனம் இறக்கை கட்டி பறக்க அவள் நீராடிமுடித்தபோது நேரம் காலை 6.39 ஐ காட்டியது. இளஞ்சூரியன் இதமாக வருகை சாளரத்தின் வழியே மஞ்சள்மேனியை மெல்ல வருடிப்போனது. அழகான நாரியுடன் வெட்டப்பட்ட கூந்தலை துவாயினால் துவட்டியபடி கைத்தொலைபேசியில் சங்கீதாவை வரும்படி அழைத்துவிட்டு.
" சங்கர் சங்கர் ...விடிந்திட்டுது..எழும்பு அம்மா தேடுவா..." கண்களை கசக்கியபடி எழுந்தவன் திகைத்தான். " ஓ மை காட் எப்படி நான் இங்கை... எப்படி சொல்லுடி மது?"
" கலோ கலோ இந்த டி போடுற வேலை வைச்சுக்காதை.. ஐயாவை கடத்தி வைச்சிருக்கேன் ... பெரிய வெள்ளைக்காரன் நினைப்பு மட்டும் மனசிலை... அடச்சீ.. ஆசை தங்கச்சி வந்து விபரம். சொல்லுவா... முகத்தை கழுவிவிட்டு இந்த காப்பியை குடி..." நையாண்டியாக அவனை பார்த்தபடி சோபா இல் காப்பி குவளையுடன்அமர்ந்தாள்..
சங்கர் மௌனமாய் குளியலறைக்குள் நுழையவும் சங்கீதா வரவும் சரியாக இருந்தது. மதுமதியை கட்டித்தழுவியவள்"" மது நீ செய்த உதவியை என்னாலை மறக்க முடியாது... அம்மா அவனை இந்தக் கோலத்தில் பார்த்திருந்தால் பிரசர் கூடி கார்ட் நின்றிருக்கும்... அவா பாவம்.. தன்ரை பிள்ளை சுத்தத்தங்கம் என நினைச்சிட்டு இருக்காங்க மது..."" என பேசிக்கொண்டு போனவளை இடைமறித்த மதுமதி.. " சரி போகட்டும் விடு உன் அண்ணனுக்கு புத்தமதி சொல்லி திருத்தப்பார் என்றாள்.
இவற்றை எல்லாம் கேட்டபடி நின்றிருந்த சங்கரின் முகத்தில் அசடு வழிந்தது. " சீ சீ போயும் போயும் இவளுக்கு முன் தலைகுனிந்து நிற்கிறேனே" என நினைத்துக்கொண்டான்.
சங்கரை நோக்கி சங்கீதா கொட்டிய வார்த்தைகள் கேட்க முடியவில்லை... நாளை சமுதாயத்தில் ஒரு டாக்டராக வர போகிற சங்கர் அடிக்கடி இப்படி குடிபோதையில் மூழ்குவதை பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை. மதிமதிக்கு சங்கரை பிடிக்கவில்லை என்ற போதிலும் உறவு முறைக்கும் தன்னை ஆதரித்துவரும் மாமா குடும்பத்தின் மேல் நன்றிக்கடனும் பாசமும் எப்பொழுதும் அவளுக்கு உண்டு.
சங்கர் முதன்முறையாக மதுமதி மேல் பாசமான அன்பான பார்வையை வீசியபடி அருகில் வந்தவன் " மது நான் உன்னை ஒருபொழுதும் வெறுக்கவில்லை... நீ தான் என்னை பொல்லாதவனாக பார்க்கிறாய்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இனி நான் குடிக்க மாட்டன் நம்பு" என்றவனை நோக்கி மதுமதி கொல் என சிரித்தாள். அவளுடன் சேர்ந்து சங்கீதாவும் சிரிக்க சங்கருக்கு கோபத்தோடு வெட்கமும் சூழ சட்டென வெளியே போனவனை பார்த்து" அட பார்ரா என் அத்தை பெத்த தங்கமே ... இப்படி எல்லாம் எங்கு பேச கற்றாய்...நல்லது சென்று வா" என இருகரம் கூப்பி அவள் வழியனுப்ப அண்ணனும், தங்கையும் விடைபெற்றனர

அத்தியாயம்-10

"பனிவிழும் மலர்வனம்"

மதுமதியின் கண்கள் சிவந்து கொவ்வைப்பழங்களாக வீங்கி இருந்தன. நேற்றிரவு சங்கரினால்அவள் தூக்கம் பறி போயிருந்தது. அவன்மேல் மாமி எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் அதை உதாசீனப்படுத்திவிட்டு குடியும் கூத்துமாக திரியும் அவனை பார்க்க கோபம்தான் மனதிற்குள் அவளுக்கு வந்தது. பெற்றதாயின் நம்பிக்கையை வீணாக்கும் அவன் இந்த குடிபழக்கத்தில் இருந்து விடுபடுவானா ?என்ற ஆதங்கம் அவளுக்குள் அவளை அறியாமல் புகுந்து இருந்ததில் தப்பு இல்லை. சொந்த உறவுகள் ஆயிற்றே.
ஆனாலும் இதுவரை அவளால் அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை.. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவன் நேற்று மட்டும் அன்பாக அவளுடன் பேசியது அவளுக்கு பெரியதொரு வியப்பாகத்தான் இருந்தது. " சீ எனக்கேன் தேவையற்ற சிந்தனை .. மாமி மாமா அவையும் அவையின்றை பிள்ளையும் ..என் குடும்ப சுமை தலைக்குமேலை கிடக்கு .. இதிலை எனக்கென்ன வேண்டிக்கிடக்கு.. இன்னும் ஒரு இரண்டு வருசத்திலை படிப்பு எல்லாம் முடிஞ்சிடும்.. வேலையிலை சேர்ந்து என்ரை குடும்பத்தை முன்னேற்றனும்..""" மனதிற்குள் பேசியபடி சோபாவில் சாய்ந்து கண்களை இறுக மூடியபோதும் அவளால் தூங்க முடியவில்லை.. அம்மா தொலைபேசியில் சொன்ன அந்த வார்த்தைகள் அடிக்கடி மனதை குடைந்தவண்ணம் இருந்தது. " பிள்ளை இப்ப இருக்கிற வீட்டுக்கு வாடகை காசை மட்டும் தவறாமல் வேண்டுறாங்கள் ஆனால் குசினிக்கை மழை வந்தால் ஒழுக்கு.ஒரு அறை சின்ன விராந்தைக்கை எப்படி இந்த இரண்டு குமருகளையும் வைச்சு காலந்தள்ளுறது... வேறை வீடு பாப்பம் என்றால் அட்வான்சா நிறைய கேட்கிறாங்க". ஆம் உண்மைதான்..
இன்று பல கஸ்டங்கள் மத்தியில் மதுமதியின் குடும்பம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறது.
நல்லாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் வலிவடக்கை இராணுவம் ஆக்கிரமித்தபோது இடம்பெயர்ந்து எத்தனை தொல்லைகள்.. மூட்டை முடிச்சுகளுடன் இடம்மாறி இது கடைசியாக கோண்டாவிலில் கிடைத்த சின்ன வீடு. வசதி இல்லாத ஒரு வீடுதான். அதாவது கிடைத்ததே என்ற நிம்மதி ஒன்று போதுமானதாக இருந்தது. காலச்சக்கரமும் துரிதமாக சுழன்று ஓடிக்கொண்டிருந்தது. மதுமதியின் தந்தை உயிரோடு இருந்தவரை வீட்டு நிர்வாகத்தை அவரே திறம்பட நிர்வகித்திருந்தார். தாயாருக்கு அந்தளவு பொறுப்பும் இல்லை அத்தோடு தெரிய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இப்போது எல்லாம் தாயாரின் லையில்சுமையாகிபோய்க்கிடக்கிறது.
இப்போது வலிவடக்கு குடிமனைகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்ட போதும் அவர்களால் அங்கு போய் வாழமுடியாத நிலை. வீடு பாழடைந்து பாம்பு புற்றுகளுக்கு நல்ல வாழ்விடமாகவும் ,வீட்டை சுற்றியுள்ள காணியில் முட்பதர்களும் . விஷச்செடிகளும் ஆளடி உயரத்திற்கு வளர்ந்து செழித்து இருந்தகாட்சி புகைப்படத்தில் பார்த்தபோது அழுகையே மதுமதிக்கு வந்தது. அன்று சிறு குழந்தையாக வளர்ந்த அந்த பால்ய மண் தெல்லிப்பளை. இரு பிரமாண்டமான கல்லூரிகளான யூனியன் கல்லாரியும் மகாஜனாக்கல்லூரியும் பிரசித்தமானவை.. இரு கல்லூரிகளிலும் அவள் படித்தவள். அம்பனையில் இருந்து தெல்லிப்பளைசந்தியில் வந்து ஐஸ்பழக்கடைக்கு போகாமல் பாடசாலை நாட்கள் இருந்ததில்லை.. மகாஜனாக்கல்லூரி விளையாட்டுப்போட்டியும் அதில் பச்சைஇல்ல தலைவியாக இருந்த நாட்கள்.. களிப்பானவை. தெல்லிப்பளை துர்க்கையம்மன் திருவிழா இப்போது நடைபெற்றாலும் அந்த அழகிய கிராமங்கள் தெல்லிப்பளை , அம்பனை சோபை இழந்துதான் இன்றும் அவள் கண்களில் தென்படுகிறது. அவள் வாழ்ந்த வீட்டோரம் இன்று கால்கள் வைத்து நடக்கவே பயமாக இருப்பதாகவும்,மிதிவெடி இருக்கலாம் என்ற அச்சம் ஒருபுறம் என தாயார் குறைபட்டுக்கொண்டிருந்தார். கூலிக்கு ஆட்களை அமர்த்தி சுத்தப்படுத்தலாம் என்றாலும் மணித்தியாலத்திற்கு கூலி ஆயிரம் ரூபாவோடு சாப்பாடும் கொடுக்க வேண்டும். காணியை சுற்றி கிளுவை வேலி போடுவதென்றாலும் இருபத்தாயிரம் ரூபா வேண்டும். மதுமதியின் அக்காளின் ஆசிரியத்தொழில் சம்பளம் உடுப்புக்கும் சாப்பாட்டிற்கும்தான் போதுமானதாக இருந்தது. விலைவாசி ஆனைவிலை குதிரைவிலையாக அங்கு ஏறிக்கொண்டேபோகிறது. இவற்றை எல்லாம் மனதில் அசைபோட்டபடி இருந்த மதுமதி நேரத்தை பார்த்தபோது மணி முற்பகல் 11.00 காட்டியது. மதுமதி தாயகத்தை சிந்தித்தால் அவளுக்கு நேரத்தை பற்றிய கவலையும் இல்லை. அந்த சந்தோசத்தில் தன்னை மறந்து போயிருப்பாள். புலம்பெயர்ந்து இங்கு வந்து எத்தனை ஆண்டுகள் போனாலும் அங்கு அனுபவித்த அந்த இன்பத்தை எவராலும் தந்து விட முடியாது என்பது அவளை பொறுத்தவரை அசைக்க முடியாத உண்மை. " சீ என்ன வாழ்க்கை .. தனியாய் " அலுத்தபடி உடுப்பு தோய்க்கும் மெசினுக்குள் உடுப்புக்களை போடத்தொடங்கினாள். வெளிவாசலில் கூடு கட்டி இருந்த அந்தக் குருவி(sol sort) தன்குரலில் சங்கீதமாக இணையை அழைத்துப் பாடிக்கொண்டிருந்தது.

அத்தியாயம்-11

"பனிவிழும் மலர்வனம்"
அந்த சம்பவத்திற்கு பிறகு சங்கரும் மதுமதியுடன் அன்பாக பழகத்தொடங்கினான். அடிக்கடி அவள் கேட்காமலே பாட சம்பந்தமான உதவி செய்தபோதும் , அவனோடு அவள் மனம் மட்டும் ஒட்டி உறவாட ஒருபோதும் விரும்பியதில்லை. மாமா,மாமியின் 25 வது கலியாணநாளில் சரசு மாமியும் பரிமளா மாமியும் பேசிக்கொண்டது இப்போதும் அவளது காதுகளுக்குள் ஒலித்த வண்ணம் இருந்தது.
" ஏன் சரசு சங்கருக்கும் படிப்பு முடியுதுதானே பேசாமல் சட்டுபுட்டென்று மதுவைக் கட்டி வைக்கிறதை விட்டுவிட்டு காலத்தை வீணாக்கிறியள்?" என்றாள் பரிமளா மாமி
அதற்கு சரசு மாமி இரகசியமாக "" ஓம் பரிமளம் இந்தக் கால பிள்ளைகளின்றை மனசிலை என்ன கிடக்கோ தெரியலை... இரண்டும் கீரியும் பாம்புமாக அல்லோ இருக்குதுகள்..." என்று பேசிக்கொண்டவர்கள், அவளைக்கண்டதும் அந்த சம்பாசணையை முடித்து விட்டபோதும், அவளுக்கு அவர்கள் பேசியது ஒரு துளி கூட பிடித்தமானதாக இருக்கவில்லை. " அவன் அழகன்தான் ஆனால் அவனோடு வாழும் எண்ணம் மட்டுமன்றி ஒரு துளி காதல்கூட அவன்மேல் அவளுக்கு ஏற்படவில்லை. அவளின் எளிமையான ஆடம்பரம் இல்லாத வாழ்விற்கு அவன் ஏற்றவனுமல்ல அத்தோடு முன்கோபக்காரனும் கூட. அவனோடு இணைந்து தன் வாழ்க்கையை நாசமாக்க அவள் துணியவும் இல்லை. ''யாருக்கு யார் என்பது ஆண்டவன் போடும் முடிச்சு'' அது விதி வகுத்த வழி என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தாள் மதுமதி.
இப்படியே காலங்கள் அழகாக சுழன்றுகொண்ட காலகட்டத்தில் மதுமதியின் அக்கா வர்ஷாக்கு நல்லதொரு சம்பந்தம் கைகூடி வந்தது அவளுக்குநிம்மதியைத் தந்தது. எவ்வளவோ இழுபறிக்கிடையில் வந்த கல்யாணம். என்று மனதில் எண்ணிய மதுமதி இந்த திருமணத்தை எந்த வித தடங்கலும் இன்று நிறைவேற வேண்டும் இறைவனிடம் மனதார வேண்டிக்கொண்டாள்
ஏனோ மதுமதிக்கு, அவள் எண்ணிய விடயங்கள் எல்லாமே மெல்ல மெல்ல ஈடேறுவது அளவற்ற சந்தோசத்தை தந்தது .
மதுமதி தாயகத்தைவிட்டு வெளியேறியபோது அவளுக்கு வெறும் பதினைந்து வயது மட்டுமே பூர்த்தியடைந்து இருந்தது. வரைபடத்தில் மட்டுமே பார்த்து படித்து தெரிந்திருந்த டென்மார்க்கை அவள் வந்தடைவாள் என்பது மதுமதியால் கனவிலே கூட நினைத்திருக்காத விடயமான ஒன்றாக இருந்தது.
எத்தனையோ பல போராட்டங்களின் மத்தியில் மொழிக்கும், வேறுபட்ட கலாச்சாரத்திற்கும் முகம் கொடுத்து தன்னை ஒரு புதிய ஒரு சமுதாயத்திற்கு ஏற்றவளாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருப்பது மட்டுமே அவளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று ஆழமாக நம்பினாள் மதுமதி.
மதுமதியின் எண்ணத்தின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது போன்று
காலச்சக்கரமும் வெகு வேகமாக சுழன்று கொண்டிருந்தது. பனிவிழும் கடுங்குளிர்காலமும், மழை கொட்டும் இலையுதிர்காலமும், இதமான வெயிலைதரும் இளவேனிற்காலமும், நீண்ட விடுமுறையை கொண்ட கோடைகாலமும் துரிதமாக மாறி மாறி நகரவும் அவளின் கனவுகளின் ஏக்கமும் அதன் நிறைவேற்றமும் ஒன்றோடு ஒன்றாகி பிணைந்தவண்ணம் நகர்ந்து கொண்டிருந்தது.

அத்தியாயம் -12

"பனி விழும் மலர் வனம்"

இப்போதுதான் மதுமதியின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல பூக்கள் விரியத்தொடங்கின..அவளின் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இப்போதுதான் இருப்பதாக எண்ணிக்கொண்டாள். தாயாருக்கு சிறியதாக ஒரு வீடு வாங்கி கொடுத்தபோது அவள் அடைந்த சந்தோசத்திற்கு உலகில் எதுவும் இல்லை. அண்ணாவினதும் தந்தையினதும் மறைவுக்குப்பின் மறைந்து போன சந்தோசங்கள் மீண்டும் மதிமதியின் தாயார் முகத்தில் துளிர்விடத்தொடங்கியிருப்பதும், தன்னால் தன் குடும்பத்தை தூக்கிநிறுத்திக்கொண்டிருப்பதும் அவளுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்றைய நவீன உலகத்து புதுமைப்பெண்கள் வரிசையில் அவளும் தன்னை இணைத்துக்கொண்டாள். பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள். எதற்கும் சளைத்தவர்களல்ல. எவரையும் சார்ந்து இருப்பவர்களல்ல என்ற மனத்திடம் அவளிடம்கூட பிறந்த ஒன்றாகவே இருந்தது. அடைக்கலம் தந்த அழகிய டென்மார்க்தேசத்தின் வாழ்வியலும் அவளுக்கு இரட்டிப்பு மனத்திடத்தை கொடுத்திருந்தது.
இந்தச்சந்தர்ப்பத்தில்தான் மாமா மகள் சங்கீதாவின் காதல் விவகாரம் சங்கடத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியிருந்தது. அவளின் அதீத அழகு பல இளைஞர்களை அவள்மேல் காதல் கொள்ளவைத்தது. அதை பயன்படுத்தி காதலை ஒரு விளையாட்டாக அவள் எடுத்துக்கொண்டாள்... அவளின் காதலர்கள் வரிசையில் நாலாவதாக வந்துபோன மதன் என்பவனால் அவள் கருவை சுமந்தபோதுதான் சங்கீதா விழித்துக்கொண்டாள், தவறை உணர்ந்து கொண்டாள், அழுதாள்.
ஆனால் புனிதமான பெண்மை களங்கப்பட்டு போய் நின்றது.
மதுமதியின் தாயாரின் ஒப்பாரி கல்லான மனதையும் கரையவைத்தது. "" படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியா.,,கண்டபடி திரியாதை என்று... உன்னைச்சொல்லி குற்றமில்லை... அப்பரை உதைக்கணும்... எல்லாம் அவர் கொடுத்த செல்லம் ... கண்றாவி வயித்திலை சுமந்துகொண்டு வந்து நிற்குது...யாரிட்டைபோய் சொல்லி அழுவேன்... கருவை அழிக்கும் பாவத்தை தேட வைச்சிட்டியேடி பாவி" மாமியின் தோள் மீது கையை போட்டு ஆதரவாக மதுமதி "மாமி இப்ப அழுவதாலை பயனில்லை.. எதற்கும் மதனோடை கதைத்து அவனுக்கே அவளை கட்டி வைக்கும் அலுவலைப்பாருங்கோ" என்றாள். உடனே இடைமறித்த சங்கீதா" இல்லை நான் அவனோடு வாழ மாட்டன் .. அவன் இப்ப இன்னொன்றை வைத்திருக்கான் " பெரிதாக கத்தினாள். மதுமதியின் அண்ணன் கண்களில் தீப்பொறி பறந்தது. " சீ நீ என் தங்கச்சியா .. கட்டுப்பாடாய் இருக்கத்தெரியாது... இப்ப உனை கொன்றுபோட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை " என்றான். மதுமதியின் தந்தையார் ஒரு மூலையில் மௌனமாக இருந்தார்.. கண்களால் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மாமா இப்படி கலங்கியதை பார்த்த மதுமதியின் கண்களில் இருந்தும் கண்ணீர் பொல பொல என்று விழுந்தது..

அத்தியாயம்-13

"பனிவிழும் மலர் வனம்"

ஆனந்தமயமாக வாழ்ந்துகொண்டிருந்த மாமாவின் குடும்பத்தில் இப்படியொரு பேரிடி வந்து விழும் என எவரும் எதிர்பார்க்கவில்லைதான். பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களை நல்லபடி வளர்த்து கல்யாணம் செய்து கொடுக்கும்வரை உள்ள பொறுப்பு என்பதை பெரியதே. பிள்ளைகள் தவறுசெய்யும் பட்சத்தில் அவர்கள் தன் கடமையை சரிவர செய்தார்களா? அல்லது பிள்ளைகள் பெற்றோர் சொற்கேட்டு நடக்கவில்லையா? பற்பல கேள்விகள் பெற்றவர்கள் மனதில் எழுவது இயற்கை. இன்றைய காலகட்டத்தில் கல்யாணத்திற்கு முன்பான உறவு காதல் என்ற பெயரில் மேலைத்தேயத்தை மட்டுமல்ல கீழைத்தேயத்தையும் ஆக்கிரமிக்கும் தொற்று நோய் எனலாம் . அதிகளவு சுதந்திரத்தை பெறும் சிலர் மட்டுமே வழிதவறிப் போகிறார்கள். " கடவுளே எல்லாமே தனக்கே தெரியும் என திரியும் சங்கீதாவின் புத்தி இப்படியா போகணும் ? சீ இவளை என் உறவு என சொல்லவே வெட்கமாயிருக்கு..சீ இப்பபோய் அவன் மதனை வேண்டாம் என்கிறாளே.,, இனி மறைத்துப்போட்டு இன்னொருவன் தலையிலை கட்டி வைக்க வேண்டியதுதான் " மனதிற்குள் நினைத்த படி மதுமதி தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் கைத் தொலைபேசி மணி அலறியது. மாமிக்கு அருகில் இருந்ததால் அதை எடுத்த மாமி யார் என விசாரித்து விட்டு "" மது உன் பிரண்ட்டாம் அனசன் உன்னுடன் பேச வேண்டுமாம் என்றவுடன் ஓடிச்சென்று தொலைபேசியில் கதைத்துவிட்டு "" சரி மாமி நீங்கள் ரீ குடியுங்க நான் என் றூமுக்கு போயிட்டு வாறன்.. வேலை விடயமாக சிலதுகள் செய்ய வேண்டி இருக்குது"" என்றபடி தன் காரில் தன் இல்லம் நோக்கி பயணமானாள்..
தற்சமயம் மதுமதி அந்த தன் நகரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையில் தகவல் பிரிவில் வேலைசெய்கின்றாள். ரெலிபோனுடனும் கணணியுடனும் அவளின் நாளாந்த வாழ்க்கை. மனதிற்கு பிடித்தமான வேலை.. அந்த சந்தர்ப்பத்தில்தான் எக்ஸ்ரே எடுக்கும் பிரிவில் வேலை செய்யும் அனசனுக்கும் இவளுக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது...
உயரமான கட்டுமஸ்தான உடலமைப்பு, சாந்தமான குழந்தைமுகம் , பேச்சினிலே வசீகரம் இருந்த அவனை நன்றே பிடித்து போயிருந்தது அவளுக்கு. அதைவிட மேலாக அனசன் டெனிஷ்காரன் என்ற போதிலும் எம் கலாச்சாரத்தின் மேல் அதிக ஈடுபாடும், தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவன்.. மதுமதி தன் ஓய்வு நேரங்களில் அவனுக்கு ஓர் தமிழ் ஆசிரியையாக இருந்தாள்.இவர்களின் நட்பு நீடித்து வெளியில் இருவரும் சேர்ந்து போகும். அளவிற்கு வளர்ந்திருந்தது .
அனசன் அவளை கபேக்கு காப்பி குடிக்க அழைத்திருந்தான். அவனுடன் பேசும் தருணங்களில் அவள் மனது ஏதோ ஒரு அமைதியும், மகிழ்ச்சியும் அடைவதை உணர்ந்தாள்.. எந்தவிதமான இன்பமோ , துன்பமோ அதை அவனோடு பகிர்ந்து மதுமதி பேசிக்கொள்வாள். அந்தளவிற்கு அவனிடம் அவளுக்கு அன்பு , நட்பு மிகுந்து இருந்தது. 
தொடரும்No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.