புதியவை

கவிமாமணி இலந்தையார் இயற்றிய அனுமன்துதி


                                                         கவிமாமணி இலந்தை

கவிமாமணி இலந்தையார் இயற்றிய அனுமன்துதி

விண்ணி றங்கி மண்ணிலே 
  மேன்மை நீதி நாட்டிய 
அண்ணல் இராமன் தூதனே 
  ஆஞ்ச நேய மூர்த்தியே 
எண்ணில் நல்ல பேறுகள் 
  எண்ணி ரண்டும் வேண்டியே 
புண்ணி யாதின் பொற்பதம் 
  போற்று கின்றோம் வாழ்த்துவாய்!

புகழ்
தோன்று கின்ற போது நற்புகழ் துலங்கத் தோன்றினாய் 
ஈன்றதாய் மகிழ்ந்திருக்க எல்லை யாவும் தாண்டினாய் 
ஆன்ற இராமன் தூத னாக அற்புதங்கள் செய்தவா!
ஊன்று நற்புகழ் விளங்கி ஓங்கி வாழ வாழ்த்துவாய் 1.

கல்வி
ஆத வன்தன் பாதை சென்றே ஆன்ற கல்வி கற்றவா! 
வேத மூலம் கண்டு வித்தை மேன்மை கொண்ட மேதையே! 
நாதன் இராமன் கேட்க நன்மை நாடிச் சொன்ன நாயகா 
போதமான கல்வி எம்முள் பூத்துப் பொங்கச் செய்கவே 2.

வீரம்
ஆற்றல் வந்தே நின்னிடத்தில் ஆற்றல் பெற்றுச் செல்லுமே 
மாற்றுச் சற்றும் மாறிடாத பக்தி இராம பக்தியே 
ஏற்று வாழும் எங்கள் தேவா, ஏந்தல் ஆஞ்ச னேயனே, 
போற்று கின்ற வீரம் எம்முள் பொங்க வேண்டும் வேண்டுமே 3.

வெற்றி
தூதனாகச் சென்று சீதை சோகம் தீர்த்து நின்றவா! 
மோதுகின்ற வேலை தாண்டி முந்தி விண்ணில் ஊர்ந்தவா! 
மாதவங்கொள் இராவணன் சீர் மங்கச் செய்து வென்றவா 
ஆதரித்து வெற்றி நல்கி ஆட்படுத்து தேவனே! 4.

நன்மக்கள்
நல்ல மைந்தன் என்று யாரும் போற்றும் இராம சாமியை 
சொல்லில் ஈர்த்து சொல்லின் செல்வன் என்ற பட்டம் பெற்றனை 
வல்லமைக் கிடில்லை என்னும் வண்ணம் வெல்லும் மாருதி 
வெல்லும் நல்ல மைந்தர் நல்கி மேன்மை கொள்ள வாழ்த்துவாய்! 5.

செல்வம்
ந்தச் செல்வம் அந்தச் செல்வம் எந்தச் செல்வம் ஆயினும் 
சொந்தச் செல்வம் ஆகி உன்னைத் தோத்தரித்து நிற்குமே 
சிந்தைச் செல்வம் ஆக இராம நாமம் சேர்த்த செல்வனே 
வந்து நிற்கும் நல்ல செல்வம் வாழ்வில் நல்கிக் காக்கவே 6.

தானியம்
மானுடர்க்கு மண்ணகத்தில் வாழ்வளிக்க வந்தவா 
மானத் தோடு வாழ வேயிவ் ஊனுடம்பு தேவையே 
ஊனுடம்பு நல்ல வண்ணம் உற்றி ருக்க வேண்டியே 
தானியங்கள் தட்டிலாது தாம்கொழிக்கச் விக்கவே 7.

நல்லூழ் 
இன்ன தெல்லாம் இப்படித்தான் இங்குக் கூடும் என்பது 
முன்விதித்த ஊழ்வினைக்கே முற்றும் கூடும் ஆயினும் 
துன்பம் கூட்டும் ஊழைக் கூட நல்லூழ் போலத் தோற்றியே 
என்றும் என்றும் நல்லூழ் வாய்க்க எண்ண வேண்டும் மாருதி 8.

நுகர்ச்சி
என்ன வேண்டும் இங்கு வாழ என்ற றிந்த ஐயனே 
இன்ன வேண்டும் என்று நானும் உன்னைக் கேட்க வேண்டுமோ? 
முன்னி ருந்து வேண்டும் யாவும் முந்தி நல்கும் தேவனே! 
நன்நு கர்ச்சி எங்களுக்கு நல்கி வாழ்த்த வேண்டுமே 9.

ஞானம்
நல்ல மைச்ச னாகி வெற்றி நாட்டி வைத்த ஞானிநீ
தொல்லைக் கெல்லாம் தொல்லை தந்து தோளுயர்த்தும் வீரன் நீ
எல்லை யில்லாப் பக்திக் கேயோர் எல்லை யான போதம்நீ
நல்ல ஞானம் எங்களுக்கு நல்க வேண்டும் நாதனே 10.

வனப்பு
சீரிலங்கை தீயில் வேகச் செய்த வாலைச் சொல்லவா?
வாரிதிக்கு மேல்பறந்த மாண்பெடுத்துச் சொல்லவா? 
சீரிலங்கு நல்வனப்புத் தெய்வமேஎம் மாருதி!
ஏரிலங்கு நல்வனப்பை எங்களுக்கு நல்கவே. 11.

கெளரவம்
சீதை கேள்வன் பக்தன் என்று செப்புகின்ற கெளரவம் 
நாதனே நீ பெற்றிருக்கும் நல்ல வெற்றி அல்லவா? 
ஆதரித்தே எம்மைக் காக்கும் அண்ணல் ஆஞ்ச னேயனே! 
தீதில்லாத கெளரவம் சேர்க்க வேண்டும் தேவனே 12.

இளமை
என்றென்றைக்கும் மூப்பில்லாத ஏந்தலே எம்தெய்வமே! 
அன்றும் இன்றும் என்றும் ஒன்றாய் ஆன ஞான மூர்த்தியே! 
குன்றெடுத்த கொற்றவா, ஓர் கொள்கை கொண்ட நாயகா!
என்றும் மூப்பி லாத வாழ்வை எங்களுக்கு நல்கவே 13.

தைர்யம்
எம்மை வெல்ல யாரு மில்லை என்றெதிர்த்தே உன்முனே 
வம்பு மாயம் செய்தபேரை வாலெடுத்து வீசினை 
நம்பி உன்னை நண்ணினோர்க்குத் தெம்பு தந்து காத்தனை 
எம்பி ரான்நீ தைரியத்தை எங்களுக்கு நல்கவே. 14.

நோயின்மை
போர்க்களத்தில் வீழ்ந்தோர் விட்டுப் போன ஜீவன் பெற்றிட 
தேர்ந்தெடுத்த மூலிகைசேர் குன்றெடுத்து வந்தனை 
ஆர்த்தெழுந்து நோய்கள் தீர்க்கும் ஐயனே சொல்மெய்யனே! 
பார்த்துப் பார்த்து நோயில்லாமல் பாதுகாக்க வேண்டுமே 15.

ஆயுள்
வேண்டுகின்ற யாவும் நல்கும் மேன்மை கொண்ட வித்தகா! 
தாண்டிச் சென்றி லங்கை மண்ணில் தாயின் சோகம் தீர்த்தவா! 
கூண்டு கொண்டி லங்கும் இந்தக் கோலங் கொள்ளும் வாழ்விலே 
ஆண்டு நூறு நோயில்லாத ஆயுள் வேண்டும் தேவனே! 16.

பலன்
ஆறு மாறும் நாலு மான பேறெலாமும் வேண்டியே 
கூறுகின்ற பாடல் தன்னைக் கூறு கின்ற பக்தர்கள் 
வீறு கொண்ட ஆஞ்ச னேயன் வேண்டும் வண்ணம் தந்திடப் 
பேறெலாமும் பெற்று மிக்கப் பீடு கொண்டு வாழ்வரே!

அருமண மாக நெஞ்சில் அனுமனைப் பதித்துக் கொண்டால் 
திருமணம் ஆகா தோர்க்குத் திருமணம் நடக்கும், செல்வம் 
வருமண மாக வேலை வாய்த்திடும், பதவி கிட்டும் 
கருதிய தனைத்தும் வெற்றி கைவசம் ஆகும் உண்மை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.