புதியவை

இன்று இலங்கை முஸ்லிம்களின் அரசியல்முச்சந்தியில் தான் நடை பெறுகிறது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

இன்று  இலங்கை முஸ்லிம்களின் அரசியல்முச்சந்தியில் தான் நடை பெறுகிறது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா 

 இலங்கை அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற சமூக ஜனநாயக கொள்கையை முற்படுத்துகிறது என்றாலும், இலங்கை  தேர்தல் விதிமுறை பல விசித்திரமான சூத்திரங்களை உள்ளடக்கியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, தேர்தல் முறையில், அரசை புதுப்பித்துக் கொள்ளவும், ஆளும் கட்சிகளை மாற்றிக் கொள்ளவும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அதிகாரம் (mandatory) வழங்கியிருக்கிறது.
ஓர் அரசின் நிதிக்கொள்கை, பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதரங்களின் பாதுகாப்பு, பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது, அமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் சட்டப்படியும் நீதிப்படியும் பாதுகாக்கப்படுவது, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அண்டை நாடுகளுடனான உறவு, உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது ஆகிய அம்சங்களை ஒரு கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைக் கொண்டே ஆட்சி மாற்றங்கள் நிகழவேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லை 
The Economic Times பத்திரிக்கையின் ஒரு பந்தியை கூட இலங்கையின்  சராசரி வாக்காளரால் புரிந்து கொள்ள முடியாது. பயங்கரவாத பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கை சொல்லும் ‘தர்மமே’ உண்மையானது என்றிருக்க, ஆதம் காக்காவுக்கும் ராசதுரைக்கும் சில்வாவுக்கும்  வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை சரியான புரிதலுடன் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று யாரும் சொல்ல முடியாது. 
மாகாண சபையாக  இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும் ஒரு தொகுதியை பொருத்தமட்டில் நகர்ப்புற வாக்குகள் 40 சதவிதமாகவும், கிராமப்புற வாக்குகள் 60 சதவிதமாகவும் இருக்கிறது. இதனால் நகர்புறத்தார் தேர்தல் மூலம் விரும்பும் மாற்றத்தை கிராமப் புறத்தாரின் நோக்கமின்மை அல்லது தேவைகள் தோற்கடிக்கின்றன. சில நேரங்களில் தேர்தல் கொள்கைக்கும் ஆசைக்கும் இடையேயான மோதலாக நடந்துவிடுகிறது. எனவே ஆட்சி மாற்றத்தை எந்த மக்கள் விரும்பினார்கள் என்பது பெரியதொரு கேள்வி. நகர்ப்புறமும் கிராமப்புறமும் வெவ்வேறான நோக்கமும் தேவையும் உடையதாக இருப்பதால் வெவ்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பிரச்சினை மாகாண ஆட்சி  முதல் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை விரிகிறது. இங்கே நகர்ப்புறத்தார் சிறுபான்மை வாக்காளர்களாகவும் புறநகர் கிராமப் புறத்தார் பெரும்பான்மை வாக்காளர்களாகவும் இருக்கிறார்கள்.
இலங்கையின்  மதரீதியான பிளவுண்டு கிடக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை வாக்காளர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இலங்கை  மக்கள் தொகையில் அனைத்து சிறுபான்மையினரும் சேர்ந்து கால்பங்காக இருக்கின்றனர். எனினும் அவர்களது வாக்குகள் எந்த மதிப்பும் இல்லாமல் போகிறது. வாக்கை போடுவதும் குப்பைக் கூடையில் போட்டு வருவதும் ஒரேமாதிரியான விளைவையே தருகிறது.
கடந்த பொது தேர்தலைப் பாருங்கள் முஸ்லிம் கட்சிகள், அதன் தலைவர்கள் உட்பட பெரும் பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்துதான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது 
தற்போது சிறுபான்மை என்ற சொல் முஸ்லிம்களோடு ஐக்கியப்பட்டு போனது. சிறுபான்மையினர் அதிகம் பேசக்கூடாது, வாலாட்டக்கூடாது, அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்கக் கூடாது, உரிமை போராட்டங்களை வலுப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் பெரும்பான்மை என அடையாளமிடப்பட்ட மக்களிடம் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது. 
முஸ்லிம்கள் இனியும் தனிக்கட்சி அரசியல் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இருப்பினும் முஸ்லிம்கள் தங்களின் அரசியல் இருப்பு குறித்து தீவீரமாக ஆராய வேண்டும்.
பொதுவான கட்சிகளில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. அதாவது நீங்கள் மைய நீரோட்டமான அரசியலுக்குள் வரவேண்டாம், எங்கள் கட்சிகளில் உங்களுக்கான உட் பிரிவு ஒன்று உள்ளது. அதற்குள் நீங்கள் நீந்திக்கொள்ளுங்கள் என்கின்றனர்.
மேலும் முஸ்லிம்களில் நிறைய செல்வந்தர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் சொத்துக்கள், உடைமைகளைக் காக்க அரசியல்வாதிகளுடன் நட்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்த கட்சியிலும் சேர்ந்து சமூகத்திற்கான பிரதிநிதியாக இருக்க விரும்பவில்லை. தேர்தல் சமயத்தில், சில கோடிகளை கொட்டிக் கொடுத்து சீட் வாங்குவதும், வென்றால் நாடாளுமன்றத்துக்கும் வீட்டுக்கும் நடப்பது, தோற்றால் ஒழுங்காக தொழிலை கவனிப்பது என்று ஒதுங்கிக் கொள்கிண்றனர். இவர்களால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாக்கப்படுகின்றனர்.
ஜனநாயக அரசியல் அமைப்பில் கட்சிகள் தான் நாட்டை ஆள்கின்றன. உண்மையில் கட்சியை ஆள்பவர்கள் தான் நாட்டை ஆள முடியும். மக்கள் மத்தியில் செல்வாக்குடைய கட்சிகளில் இணைந்து அதன் உச்சிக்குடுமியை பிடிக்காதவரை முஸ்லிம்களுக்கு இலங்கை அரசியலில், முற்றத்துக்கு வெளியே நாற்காலி போடப்பட்டிருக்கும் மற்றவைகளின் வெற்றி விழாக்களை வேடிக்கை பார்ப்பதற்காக. 
தற்போதுள்ள சூழ் நிலையில் முஸ்லிம் கட்சிகளைக் களைத்து விட்டு முஸ்லிம்கள் அனைவரும் பெரும்பான்மைக் கட்சி ஒன்றில்  சேர்ந்து கொள்ளுங்கள் என்றே கூறுவேன்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.