புதியவை

பரம்பரை வீடு - மீ.விசுவநாதன்

                                               

   இந்த வீட்டிற் குள்ளேதான்
    என்தாத்தா பாட்டியும் வாழ்ந்தார்கள் !
வந்த இன்ப துன்பத்தை
    வரவேற்றுச் சிறப்புடன் வென்றார்கள் !
எந்த வேளை ஆனாலும்
     இருக்கின்ற உணவினைப் பகிர்ந்தார்கள் !
கந்த வேளை எப்போதும்
     கருத்தினில் வைத்தே கடந்தார்கள் !

சும்மாப் போக வரும்போதும்
     சுவைப்பதற்கு தட்டை, முறுக்குகளை
அம்மா செய்து எங்களுக்காய்
     அன்பாக அள்ளியே தந்தார்கள் !
எம்மாம் பெரிய மனத்துள்ளே
     எப்போதும் கருணை கொண்டார்கள் !
பம்மாத் தெல்லாம் இல்லாமல்
     பச்சைவயல் போலி ருந்தார்கள் !

இன்னார் என்று இல்லாமல்
     இரக்கத்தில் உதவிடக்  கரம்நீட்டும்
பொன்னார் குணத்துப் பெரியோர்கள்
     புழக்கத்தில் பொலிகிற இல்லமிது !
முன்னோர் பாதம் பட்டதனால்
     முத்தாக ஒளிர்கிற இவ்வீட்டில்
பன்னீர்ப் பூவின் வாசனையை
     பரம்பரையாய் நுகர்ந்திட முடிகிறது ! 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.