புதியவை

கண்ணதாசன் -சிவசூரி.

                                                                 கண்ணதாசன் -சிவசூரி.

செம்மாந்து நடந்துவரும் சிறுகூடல் சேவலுனை
தம்பாட்டாம் தமிழமுதில் தென்னிலந்தைத் தென்றலவர்
அம்மாடி அடக்கிவிட்ட அதிசயத்தில் மயங்கிவிட்டேன்!
உம்பாட்டைப் புகழ்கையிலே உன்மத்தம் ஆகிவிட்டேன்!

வெண்மைமிகு திரையினிலே விதவிதமாய் விரிந்துவர
வண்டமிழின் இனிமைமிக வாசமலர்ப் பாவெழுதி
கண்ணெதிரில் பவனிவர, கண்ணனவன் தாசனெனும்
உண்மைஉணர் வேதியனாய் ஓதிநின்ற உத்தமனே!

கிள்ளைமொழி கொஞ்சிவர, கேட்பவர்கள் கிறுகிறுக்க
கொள்ளையெழில் குமரிகளின் கொஞ்சுமொழி பவனிவர
அள்ளியள்ளி அமுதமென அருந்தமிழில் நமக்கெனவே
வெள்ளமென வழங்கிநின்ற விற்பனமே, அற்புதமே!

உள்ளமெனும் பந்ததனின் உட்புறத்தை வெளியாக்கி
வெள்ளமெனக் கதிர்பாய்ச்சி வெகுவேகம் தேவதைகள்
கொள்ளையெனக் கவிதைகள் கொடுப்பதனை ஏந்துகின்ற
கொள்கலனாய் நின்றுகவி கொட்டிநின்ற வள்ளல்நீ!

தனவணிகர் குலவழக்கும் தண்டமிழின் மொழிமுழக்கும்
கனியெனவே இனிக்குவணம் கவிவழியில் பெய்தளித்தே
இனிதிதுவே என்றிதழ்கள் இசைத்திடவே வைத்தவனே!
தனியெனவே யுகங்கோடி வாழ்வாய்நீ கவியேறே!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.