எல்லாமே அழகு--என் வி சுப்பராமன்
25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தலைப்பில் நான் எழுதிய ஒரு கவிதையை இங்கே இடுவதில் மகிழ்கிறேன். பின்னூட்டம் கொடுத்தால் நன்றியுடையவனாவேன்.
பறப்பன அழகு, ஊர்வன அழகு
பாங்காய் நிற்கும் பாறையும் அழகு
ஒளியும் அழகு இருளும் அழகு
இரவைத்தொ டரும் காலையும் அழகு
காலை நேரக் கதிரொளி அழகு
கதிரொளி மின்னும் பனித்துளி அழகு
பனித்துளி மூடும் புல்வெளி அழகு
புல்வெளி யிடையோர் பூவிதழ் அழகு
மழையுடன் சேர்ந்த வெய்யிலும் அழகு
எழுஞாயிறு அழகு விழு ஞாயிறு அழகு
எண்ணிப் பார்த்தால் எல்லாம் அழகு!
வயலும் அழகு மலையும் அழகு
விண்ணொடு சேர்ந்த விண்மீன் அழகு
ஆலயம் அழகு ஆண்டவன் அழகு
விண்ணை முட்டும் கோபுரம் அழகு
கடலும் அழகு குளமும் அழகு
கடலில் துள்ளும் மீன்களும் அழகு
மல்லிகை அழகு அல்லியும் அழகு
மலருடன் சேர்ந்த நாரும் அழகு!
அன்பே அழகு அறிவே அழகு
பண்புடன் கூடிய பார்வையே அழகு
உண்மையே அழகு அடக்கமே அழகு
மென்மையோடியைந்த பெண்மையே அழகு
பெண்மை மிளிரும் தாய்மை அழகு
அருளே அழகு பொருளே அழகு
இரக்கம் கூடிய ஆண்மையே அழகு!
மனதில் உறுதி மலர்ந்தால் அழகு
வாக்கில் இனிமை வளர்ந்தால் அழகு
தெள்ளத் தெளிந்த ஞானம் அழகு
உள்ளம் உயர்வெனில் வறுமையும் அழகே!
இளமையும் அழகு முதுமையும் அழகு
வெறுமையோடிணைந்த தனிமையும் அழகு
பார்க்கும் பார்வையில் எண்ணும் நினைவில்
எழுதும் எழுத்தில் சொல்லும் சொல்லில்
சொல்லின் பொருளில் பொருளின் உயர்வில்
உயர்வில் பணிவில் பணிவில் அறிவில்
அறிவில் தெளிவில் ஆற்றலின் பொலிவில்
செய்யும் செயலில் செயலின் திறத்தில்
உண்மையை நேர்மையை உளத்தில் நிறுத்தி
உயர்வை அடைந்தால் அதுவே அழகு!
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.