புதியவை


டென்மார்க் ரதி மோகன்


டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனிவிழும் மலர் வனம்" 

தொடர்கதைஅத்தியாயம் -17

மதுமதியின் தந்தையின் பிரிவுக்குப்பின் குழந்தைகளான இவர்கள் மூவரையும் வளர்த்தெடுக்க தாயார் பட்ட கஸ்ரங்கள் சொற்களில் அடக்கமுடியாதவை. அந்தச் சந்தர்ப்பத்தில் போர் காரணமான இடம்பெயர்வுகளும் இரட்டிப்பு கஸ்ரம் தந்து நிற்க ஒவ்வொரு பொழுதுகளும் கேள்விக்குறிகளோடு அவர்கள் வாழ்வில் புலர்ந்தன, மறைந்தன. தாயார் பட்ட கஸ்டங்களை அறியாத பெண்ணல்ல மதுமதி. எத்தனை வேதனைகள், துன்பங்கள் ஒன்றா? இரண்டா?அவர்கள் வாழ்வில் . காலத்தோடு சேர்ந்து முதுமையின் வரவும் தாயாரின் உடலில் நோய்களின் ஆக்கிரமிப்பாய் உயர் குருதியழுத்தமும் குருதியில் ஹொலஸ்ரோலின் அளவில் அதிகரிப்பும் தொடர்ந்துவர, அதற்கான குளிகைகள் தாயார் எடுத்திருந்த போதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மனதை வாட்டும் கவலைகள் ஒருபுறம். இதுவே இதயத்தின் செயற்பாட்டில் நாளுக்குநாள் தாக்கத்தை தந்து நின்றன. ஒரு பெண் பிள்ளையை ஒருவாறு கல்யாணம் செய்து கொடுத்தநிம்மதி இருந்தபோதும் மற்ற பிள்ளைகள் இருவரையும் ஒருவன் கையில் பிடித்து கொடுக்கும்வரை மதிமதியின் தாயாரின் பொறுப்பு குறைந்துவிடப்போவதில்லை. கல்யாணம் செய்து கொடுத்தாலும் பிள்ளைப்பேற்றுக்கும், பேரப்பிள்ளைகள் பராமரிப்புக்கும் உதவி ஒத்தாசை என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த சுமைகூட பெற்றவளுக்கு தனி இன்பம். 

இந்த சமயத்தில்தான் மதுமதியின் மாமா தாயாருக்கு ஹோல் செய்து மதுமதி வெள்ளைக்காரன் ஒருவனுடன் சேர்ந்து திரிவதாக கூறிய செய்தியே வைத்தியசாலைவரை அவரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தாயார் மற்றைய பிள்ளைகளைவிட மதுமதியின் மேல் பூரண நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தவர். இந்த செய்தி அவரை நிச்சயமாக பாதித்து இருந்ததில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
மதுமதியால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. " அம்மா நீ வேணும் ..நானே உனக்கு யமன் ஆகி விட்டேனா... உன்னை விட எனக்கு எதுவும் பெரிதல்ல..." சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தாள். " அம்மா" அன்பின் சொரூபம். தன்னை மெழுகுவர்த்தியாக்கி தன் குடும்பத்திற்காக அல்லும் பகலும் உழைப்பவள். அந்த அன்புக்கும், கருணைக்கும் நிகரேது. மனித பிறவியில் மட்டுமல்ல எல்லாஉயிர்களிடத்திலும் தாய்மையின் அரவணைப்பை காணலாம். இவ்வாறாக பெண்ணாக பிறந்ததில் மதுமதி பெருமைகொள்பவள். " "மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டுமம்மா" ஆம் இது முற்றிலும் உண்மையும் பெருமையும் அல்லவா...

இவ்வேளையில் மதுமதியின் அக்காவின் தொலைபேசி வந்தது.. " மது.....அம்மா இப்பத்தான்...கண்விழித்திட்டா.. யோசிக்காதை .. உன் பேரைத்தான் முணுமுணுத்துபடி கிடக்கிறா... அதுசரி நீ உண்மையா வெள்ளைக்காரனையே லவ் பண்றாய்.. சொல்லுடி.. "" அக்காளின் கேள்வியில் மதுமதி ஒருகணம் அதிர்ந்து போனாள்.. இப்போது வைபர் செய்திகள் துரித கதியில் போய் சேர்கிறது என்பது உண்மைதான். " தாங்ஸ் கோட்" நிம்மதி பெருமூச்சுடன் " வந்து வந்து...இல்லை அக்கா... நான் அப்படிஇல்லை... அவனை நல்லாக பிடித்திருக்கு உண்மைதான்..இன்னும் நான் அவனிடம் என்காதலை சொல்லவில்லை அக்கா... அதற்கிடையில் அவனோடு நான் சேர்ந்து வாழ்ந்த மாதிரி கதைக்கிறாய்..,
அம்மாவின் விருப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டன் அக்கா நம்பு... நான் பிறகு ஆறுதலாக பேசுறன் ...கார்ச்சத்தம் கேட்குது வாறன் " என்ற படி தொலைபேசியை துண்டித்தாள்.
அனசன் இவள் போட்ட குறுஞ்செய்தியை படித்தவுடன் அங்கு ஓடியே வந்து விட்டான். அவளின் தலையை ஆறுதலாக தடவியபடி" என் அன்பே .(min skat).என்ன அம்மாக்கு என்ன நடந்தது.. டொக்டர் என்ன சொல்றாங்க.." என்றவுடன் அவன் தோளில் சாய்ந்து மனவேதனையெல்லாம் கொட்டவேண்டும்போல அவளுக்கு இருந்தபோதும் அவளைச்சுற்றி அவள் போட்டிருந்த ஒரு வட்டம் தடுத்தது. மனதில் துன்பம் ஏற்படும் சமயங்களில் தோள் சாய ஒரு தோழனோ/ தோழியோ பெற்றவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்தான். மதுமதி நடந்த சம்பவத்தை வரிக்கிரமமாக ஒன்றும்விடாமல் எடுத்துரைத்தாள். தனிமையின் சிறைக்குள்ளே வாழும் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அவனிடம் இருந்து அவள் பெற்ற பாசமும், அன்பும் தாயின் அன்பிற்கு நிகரானது என்றுஅவளுக்கு மட்டும் புரிந்த ஒன்று. ஆனால் இந்த அன்புக்கும் விதிக்கப்படும் தடையை ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் அவள். இச்சந்தர்ப்பத்தில் தன் குடும்பமா? காதலா? பெரிது என உள்ளூர மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திகொண்டிருந்தாள். எதுவுமே புரியாத அந்த அப்பாவி இளைஞன் அனசன் இருவருக்கும் சந்தோசமாக கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தான். 
Danish cookies ( பிஸ்கட்)உடன் கோப்பியை சுவைத்தபடி இருந்த இருவரின் மௌனத்தை கலைத்த பக்கத்து வீட்டுக்குழந்தையின் விரீட்ட அழுகைச்சத்தம் திறந்தவிடப்பட்ட சாளரம் ஊடாக வீடெல்லாம் பரவியது... 
"மது நீ ஓய்வு எடு நான் போயிற்று வாறன்.. ஒன்றுக்கும் யோசிக்காதே நானிருக்கிறேன்" என்றபடி எழுந்தவனின் கையை பிடித்து" நான் உன்னோடை பேசணும் இப்ப ... இருடா " என்றாள் .. " ஹ ஹ உன்னோடை பேசிட்டேதானே இப்பவும் இருக்கேன்.., என்ன சொல்லு"" என்றான். அவளின் வாய்வரை வந்த வார்த்தைகள் வெளியேவரத்தயங்கின.
 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.