புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனிவிழும் மலர் வனம்" தொடர்கதைஅத்தியாயம் -18

டென்மார்க் ரதி மோகன்  எழுதும் "பனிவிழும் மலர் வனம்" 

                                                    தொடர்கதைஅத்தியாயம் -1
மதுமதியால் எதுவும் சொல்ல முடியவில்லை சிரித்தபடியே "" சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்.. காதல் சுகமானது ...வாசற்படிஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது... ., " என்ற பாடலை பாடியபடி " இன்றுபோய் நாளை வா என அவனை கதவோடு தள்ளினாள்... "" சரி ரொம்ப நல்லாக பாடுகிறாய்.. அதை டெனிசில் சொல்லேன்" என்றவனை "" உனக்கு மொழிபெயர்த்தே என் வாழ்க்கை முடியப்போகுதடா போ"" என்றபடி கதவை தாளிட்டாள். "" ஓகே ஓகே " என்றபடி அனசன் புறப்பட்டு செல்லவும்" ம்ம்ம்" என்ற பெருமூச்சோடு சோபாவில் சாய்ந்தவளின் களைப்புற்ற கண்கள் மெல்ல மூடின..
அங்கு மதுமதியின் மாமா வீட்டில் சிறியதொரு வட்டமேசை மாநாடு நடந்துகொண்டிருந்தது. உளவியல் துறையில் கல்வி பயிலும் மதுமதியின் தோழி உஷாவை மாமா வீட்டிற்கு அழைத்து மதிமதியின் நிலைமையை எடுத்திச்சொல்லி, அவளுக்கு நல்லபுத்தி சொல்லும்படியும் மதுமதியின் மாமா அவளை கேட்டிருந்தார். தமிழையே உயிராக நேசித்த , கலாச்சாரமே வாழ்வாக கொண்ட மதுமதி இப்படி மாறிப்போவாள் என எவருமே எதிர்பார்த்திருக்கவில்லைதான். இதற்கு மதுமதியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. கவிதையும், தொலைக்காட்சித்தொடர் பார்ப்பதும் என வாழ்ந்து கொண்டிருந்தவளை திசை மாற வைத்தவர்களில் மாமா மகன் சங்கரும் அவனின் நையாண்டியான பேச்சும் என சொன்னாலும் தப்பில்லை. மதுமதியின் மாமி விரதமும் தமிழ் சமையலும்தான் எம் கலாச்சாரம் என காட்ட நினைத்தாவே தவிர தமிழ் தொலைக்காட்சி பார்ப்பதும் ,தமிழ் பேசுவது அநாகரிகம் என நினைத்து வீட்டில் கூட டெனிசிலேயே பேசும் தனது கணவனையும் ஏன் பிள்ளைகளைகூட கண்டிக்க தவறியதும் இவர்கள் செய்த பிழையே..இரு கலாச்சாரவாழ்விற்குள் எதை பின்பற்றுவது என்ற நிலைமையை உருவாக்கி பிள்ளைகளிடை தர்மசங்கடத்தை தோற்றுவித்தவர்களும் இவர்களே.
மதுமதியின் தோழி " அங்கிள் கவலைப்படாதையுங்கோ.. நான் அவளோடை பேசுறன் .. அவளுக்குள் நிறைய கவலை இருக்கு...எனக்கு பலதடவை சொல்லி அழுவாள்... தமிழில் பேசக்கூட முடியலை... கவிதை எழுதக்கூட முடியலை...நீங்கதானே அவளுக்கு தடை போட்டீங்க... கிட்டத்தட்ட மாமியின் சாம்பிராணிபுகையும், விரதமும். இல்லைஎன்றால் டெனிஷ்கார வீடு மாதிரிதானே உங்க வீடு... உங்க பிள்ளைகள் சாமத்திலை வந்து கதவு தட்டுவதை அனுமதித்தீங்க... தட்டிக்கேட்கலை... சங்கீதா வயிற்றிலை சுமந்து வந்தாள்...அப்புறம் அழுதீர்கள்.. மதுமதிமேல் திணிக்கப்பட்டதே இந்த வாழ்வியல் என சொல்வேன்... உண்மை என்னை கோபிக்காதீங்க அங்கிள்... ஒருவரை வாழும் சூழல்தான் மாற்றுகிறது... அவளை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள்... அவள் பாவம் ... அவளுக்கு மொழிபடிக்கவும் தொழில் ரீதியாகவும் அவளுக்கு ஆதரவாய் சாய தோள் கொடுத்த அனசனின் நட்பு இன்று காதலாகி மலர்ந்து நிற்கிறது ....மதுமதியோடை நான் பேசுறன்.. அவள் புத்திசாலிப்பொண்ணு" என்ற உஷா அங்கிருந்து விடை பெற்று செல்லவும் மாமி கிழிஞ்ச சேலை மாதிரி புறுபுறுத்தபடி "" என்ரை பிள்ளைக்கு அவளைகட்டி வைப்பன் என்று கனவு கண்டன் ... இஞ்சை வரேக்கை என்ன மாதிரி வந்தவள்..,தங்கமான பொண்ணு..காதலும் கத்தரிக்காயும் இப்ப அவளுக்குத்தேவை... நான் எப்படி மச்சாளுக்கு சொல்லப்போறன்.. கடவுளே...எல்லாம் போச்சு.." தோய்த்துலர்ந்த உடுப்புக்களை அழகாக மடித்து அடுக்கத்தொடங்கினார்.
இடையில் ஏதோ நினைத்தவராய் "" சங்கீதா இஞ்சை ஒருக்கா வாம்மா .., இன்று மதுவின்றை சத்தத்தைக் காணவில்லை.. ஒரு ஹோல் போட்டு பாரம்மா" என்றதும், உடனேயே சங்கீதா மதுவிற்கு தொலைபேசி எடுத்தாள். " மதுமச்சி என்ன பண்றாய்? இன்று நம்ம வீட்டுப்பக்கம் உங்க காற்று வீசலையே... நலமா தாங்கள்"" என்றவுடன் கல கல என சிரித்த மதுமதி" ஆமா ஆமா கொஞ்சம் தலைவலிடா தூங்கிட்டேன் நாளை வாறேனே" என்றாள்.
மதுமதிக்கு முன்பு போல் மாமா வீட்டை அடிக்கடி போக பிடிக்கவில்லை. அவர்களும் அவளோடு அன்பாக பேசுவதும் இல்லை.. மதுமதியை ஒரு குற்றவாளியை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்.. அவளுக்குப்புரியவே இல்லை"கடவுளே வெள்ளைக்காரனை காதலிப்பது இவ்வளவு பெரிய குற்றமா ? யாரும் செய்யாத ஒன்றையா நான் செய்துவிட்டேன்... விதிதானே எனக்குள் காதலை வரவழைத்தது? இவனிடம் மட்டும்தானே அந்த உணர்வை உணர்கிறேன்... " அவளையறியாமலே கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்தபடி அழகான அந்த வெள்ளை ரோஜாச்செடிக்கு தண்ணீர் ஊற்றினாள் . வெள்ளை நிறம் அவளுக்கு பிடித்தமான நிறங்களில் ஒன்று. மனதையும் கள்ளங்கபடமற்று வெண்மையாக வைத்திருக்க விரும்புபவள். யாரோடும் தேவையற்று பேசமாட்டாள். பழகியவர்களுடன் அன்பாய் அரவணைத்து அழைத்துச்செல்லும் கலகலப்பான பாசக்காரிதான் இந்த மதுமதி.. எப்பொழுதும் அவள் முகத்தில் புன்னகை.. அவளின் அழகுக்கு மேலும் மெருகூட்டும். பார்த்தவர்களை பார்க்கத்தூண்டும், பேசியவர்களை பேசத்தூண்டும் வசீகரமானவள் மதுமதி. அழகும் நல்ல குணமும் ஒருங்கே அமைவது கடவுள் கொடுத்த வரம் எனலாம். அந்த அழகிய பூங்கொடி தன் அழகிய வெண்டைக்காய் விரல்களுக்கு சிவப்பு நிறத்திலான நகப்பூச்சை பூசத் தொடங்கினாள்.. மனதிற்குள் " பனி விழும் மலர் வனம்., உன் பார்வை ஒரு வரம்.. இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்..." என்ற பாடலை முணுமுணுத்தபடி...
.
( தொடரும்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.