புதியவை

நம்பிக்கைத் துரோகம் -பாவலர் கருமலைத்தமிழாழன்


                            நம்பிக்கைத் துரோகம்  பாவலர் கருமலைத்தமிழாழன்


எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள்
-----என்னுறவை ; தோழியரைத் துறந்து விட்டே
உங்களையே என்னுடையத் துணையாய்க் கொண்டே
-----உங்களின்பத் துன்பத்தை எனதாய் ஏற்றேன் !

மங்கலமாய் மருமகளாய் உங்கள் வீட்டை
-----மாண்புகாக்கும் விளக்காகி ஒளிரச் செய்தேன்
பொங்குமன்பில் மாமியாரை மாம னாரைப்
-----பொறுப்பாகக் கவனித்துப் பேணி வந்தேன் !

என்னுடைய தம்பியாக உங்கள் தம்பி
-----என்னுடைய தங்கையாக உங்கள் தங்கை
நன்றாக அவர்மனந்தான் கோணா வாறு
-----நல்லதையும் கெட்டதையும் பார்த்து வந்தேன் !

பின்படுத்து முன்னெழுந்து வீட்டு வேலை
-----பிறர்க்கென்ன பிடிக்குமென்று சமையல் செய்து
ஒன்றாக குடும்பமெல்லாம் சேர்ந்து வாழ
-----ஒற்றுமைதான் குலையாமல் காத்து வந்தேன் !

தங்கமென இருகுழந்தை பெற்றுத் தந்து-
.....தாயாகத் தாரமாகக் குறைவைக் காமல்
உங்களுடன் இசைவாக உள்ள போதே
-----உண்மையினை மறைத்தீர்கள் கரவு நெஞ்சால் !

குங்குமத்தை என்நுதலில் வைத்த கையால்
-----குலமழிக்க அணைத்தீர்கள் மற்றோர் பெண்ணை
அங்கையாய் நம்பிக்கை துரோகம் செய்த
-----அகமிலோனே நீஉயிரோ டிருத்தல் தீதே !

பாவலர் கருமலைத்தமிழாழன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.