புதியவை

சிறுகதை -நிரஞ்சன்

சிறுகதை  -நிரஞ்சன்

வீட்டுக்கூடத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில்  பல நூறு காட்டெருதுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு குறுகிய நதிப்பரப்பைக் கடந்து கொண்டிருந்தன.
நீர் சுழித்துக் கொண்டோடும் ஓசை  காற்றைக் கிழிக்க திடீரென்று அந்த நீர்க்குகையிலிருந்து ஒரு ராட்சத முதலை மேலெழுந்து  ஒரு காட்டெருதின் காலைக் கவ்வியது
அந்தக் காட்சியைப் பார்த்து பனி போல் உறைந்திருந்த என்னை ஒரு செல்பேசி அழைப்பு  உடைத்தது.
செல்பேசி திரையைப் பார்த்த போது "தனுஜா வைஃப் காலிங்" என்றது .
மெல்லிய கடுப்புடன் பேசியை எடுத்து ஹலோ என்றேன்.
"கிளம்பிட்டேளா"
"இல்லை. கிளம்பிண்டே இருக்கேன்"
"இன்னும் கிளம்பலையா. இப்பவே மணி ஆறரை ஆயிடுத்தே"
"ஆ... இதோ  கிளம்பிடறேன்"
"சரி.  நான் சொன்ன படி க்ரீன் குர்தா, டார்க் ப்ளூ ஜீன்ஸ் போட்டுண்டிருக்கேளா"
"ஆமா"
"சமத்து. ஒரு ஏழு மணிக்கு மண்டபத்துக்கு வந்திருங்கோ. நானும் என் ஃபிரண்ட்ஸோட  7 மணி வாக்குல அங்கே  நேரா வந்துடுவேன்.பாய்"
பேசி முடித்த பிறகு அவசர அவசரமாக  ஓர்  அழைப்புந்தைத் தேர்ந்து  அதில் என் இலக்கை நோக்கிப் பயணித்தேன்.
நல்ல வேளை. வாகன நெரிசல் குறைவாகத் தான் இருந்தது. சொன்ன படி 7 மணிக்கு மண்டபத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.
நுழைவாயிலின் மையத்தில் வெண்ணிற பிள்ளையார் அருள் பாலித்துக் கொண்டிருக்க அவரைக்   குல தெய்வமாகக் கருதி   பக்கவாட்டில்  இரு யானைச்சிலைகள் துதிக்கையைத் தூக்கி வணங்கிக் கொண்டிருந்தன.
உள்ளே பூந்தொட்டிகள்  இலை கூப்பி வரவேற்க  நான் பயணித்த வாகனம்  வாசலில் வந்து நின்றது. 
அங்கே  வெண்ணிற உடை அணிந்து  நின்றிருந்த வரவேற்பாளர் காரின் கதவைத் திறந்து வரவேற்றார்.
அவரைப் பார்த்துப் புன்னகைத்தவாறே    தனுஜாவை   அழைத்தேன்.  
" இங்க பயங்கர டிராஃபிக் பா. ஒரு கால் மணி நேரத்துல வந்திடுவேன்" என்றாள்.
எதிர்பார்த்த பதில் தான். அதனால் கோபம் ஏதும் வரவில்லை. 
ச்ச சீக்கிரம் வந்துவிட்டோமே என்று அலுப்பு ஏற்பட மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தேன். 
மண்டபத்தின் வளாகத்தில் இருந்த திறந்தவெளியில்  வெள்ளை உடை அணிந்து ஏராளமானோர்  குழுமியிருந்தனர்.
வட்ட வட்டமாக பல நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
 நீல நிற கோட்டணிந்த நாலைந்து துப்புரவுப் பெண்கள் கடந்து சென்றனர்.
சிலபல சிறுவர் சிறுமியர் பரபரப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடினர்.
சற்று தள்ளித் தெரிந்த சிறிய உணவுப்பந்தலில் மிரிண்டா, ஸ்ப்ரைட் உள்ளிட்ட குளிர்பானங்களை குவளைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
உடனே ஓடிச்சென்று ஒரு மிரிண்டா வாங்கிக் கொண்டேன்.
குடித்தவாறே மேலே பார்த்த போது  கருநீலப் போர்வையைப் போர்த்துக் கொண்டிருப்பது போல வானம் காட்சியளித்தது.
அதில்  மகாராணி போல் பிறைநிலாவும் அவளுக்குச் சேவை செய்யும் தாதியாய் ஒற்றை நட்சத்திரமும் அருகருகே ஒட்டிக்கொண்டிருந்தன.
அவற்றின் கீழே இரு தென்னை மரங்கள் காற்றில் ஒசிந்தன.
அதன் ஓலைகள் நிமிர்ந்திருக்கும் ஒரு கையின் ஐந்து விரல்கள் போல் விரிந்திருந்தன. 
அவற்றைப் பார்த்த பிறகு மனதைச் சூழ்ந்திருந்த அலுப்பு கொஞ்சம் விலகியது போலிருந்தது.
தனுஜா வருவதற்கு கண்டிப்பாக கால் மணி நேரத்திற்கு மேலாகும் என்று உள்ளுணர்வு சொல்லியது.
ஏன் மண்டபத்தைச் சுற்றிப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் விளைந்த போது எனக்கே வினோதமாக இருந்தது.
ஆனால் பிடித்திருந்தது.
குடித்த குவளையை குப்பைத்தொட்டியில் கிடத்திய பிறகு கொஞ்ச தூரம் நடந்த போது அந்த ஆச்சர்யத்தைக் கண்டேன்
உணவுப்பந்தலின் கீழே பல்வேறு பழங்கள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சுழன்று கொண்டிருந்தன.
அங்கே  நின்றிருந்த பணிப்பெண்ணிடம் "இது என்னது மா " என்றேன்.
"பிளாஸ்டிக் சார்.  மேலே இருக்கறது தான் உண்மையான பழம்" என்றாள்.
இயற்கையைப் பிரதியெடுப்பதில் தான் மனிதனுக்கு எத்தனை ஆர்வம் என்று எண்ணிக்கொண்டேன்.
அந்தக் கண்ணாடிக் கூண்டின் மேல் தட்டுகளில் ஆப்பிள், பப்பாளி, கிர்ணி, தர்பூசணி, கிரேப்ஸ் ஆகியவை நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இரண்டு ஆப்பிள் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்டேன்.
பழக்கூண்டுகளுக்குப் பக்கத்தில் பான் வெற்றிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
அருகே ஒரு கண்ணாடி கன சதுரத்தில் பாப்கார்ன்  நிரம்பியிருந்தது.
பந்தலுக்கு அப்பால் பந்தியறை தென்பட்டது.
பந்திக்கு இப்போது செல்ல முடியாது என்பதால் மண்டபத்தின் முகப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
மண்டபம் எங்கிலும் விளக்கு மாலைகள்  கவிழ்க்கப்பட்ட   மலைகள் போல் அசையாமல் நின்றன. 
முகப்புக்கு வந்த போது இரு தொங்கு விளக்குகள் உறைந்த அருவி போல பல்வேறு வண்ணங்களில்   மாறி மாறி மின்னின.
முன்னம் பார்த்த வரவேற்பாளர் வாகனங்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.
அவரிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது "சார்.  காலைல  முகூர்த்தம் எப்போ" என்று அவரே கேட்டார்.
"தெரியலையே அண்ணா" என்றேன். 
அவர் முகம் திருப்பி தன் பணிகளில் மூழ்கத் தொடங்கினார்.
அவரிடம் தொடர்ந்து  என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்த போது  தற்செயலாக  அவர் இடுப்பில் சுற்றியிருந்த ஒரு  பிரத்யேக துண்டைக் கவனித்தேன்.
"அண்ணா. உங்க இடுப்புல கட்டியிருக்கீங்களே. அதென்னது" என்றேன்.
"இதுவா. இதுக்குப் பேரு கமார் பாந்த்.  போலீஸு, மிலிட்டரிக்கெல்லாம் இத கொடுப்பாங்க " என்றார்.
"ஓஹோ. சூப்பர்" என்றபடி   நகர்ந்தேன்.
 நிறைய பேச வேண்டும் என்று எண்ணி சரியாகப் பேசாமல்   சட்டென்று  பின் வாங்கியது எனக்கே ஏமாற்றமாகத் தான் இருந்தது.
ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் மண்டப கதவுகளை நோக்கி அடியெடுத்து வைத்த போது தான் அவ்விடத்தில் பெண்கள் இருப்பதையே கவனித்தேன்.
இருப்பினும்  மங்கையரைக் கவனிப்பதை விட மண்டபத்தைக் கவனிப்பதிலேயே என் கண்கள் குறியாய் இருந்தன.
எனக்கே அது வியப்பாக இருந்தது. 
தொடர்ந்து முன்னேறினேன். செவ்வகத் தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த கற்கண்டுகளை எடுத்து மென்றேன்.

நான் கற்கண்டு தின்றதாலோ என்னவோ புடவை அணிந்த ரோஜாக்கள் என் மேல் பன்னீர் தெளிக்காமல் புறக்கணித்தன.

ஆனாலும் நான் கண்டுகொள்ளாமல். மண்டபச் சுற்றுலாவைத் தொடர்ந்தேன்.

கதவுகளுக்கருகே  கால் மேல் கால் போட்டு  சீரடி சாய் பாபா புன்னகை தவழ அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

கொப்பளிக்கும் ஆர்வத்தோடும் குழந்தை குதூகலத்தோடும் உள்ளே  நுழைந்ததும்  எஜமானனைக் கண்டவுடன்  பாய்ந்தோடி வந்து கொஞ்சம்  நாயைப் போல் குளிர்சாதனக்காற்று முகத்தைக் கட்டிப்பிடித்து கொஞ்சி முத்தமிட்டு கண நேரத்தில் கடந்து சென்றது.
கடைசி வரிசையில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.
மனதார தனுஜாவுக்கு நன்றி சொன்னேன். அவள் சீக்கிரம் வந்துவிடக் கூடாதே என்று  வேண்டிக் கொண்டேன்.
அவள் வருவதற்குள் என் சுற்றுப்பயணத்தை முடித்து விட வேண்டுமென்று தீர்மானித்தேன்.
இடது புறம் நோக்கிய போது  ஓர் இசைக்குழுவின் கச்சேரி நிகழ்ந்து கொண்டிருந்தது.
இசைமேடையின் அருகிலேயே கழிவறை இருந்த போது இசைக்கலைஞர்களை நினைத்து பரிதாபப்பட்டேன்.
"புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது"  என்ற பாடலை இருவர் சுதி சேராமல் பாடிக் கொண்டிருந்தனர்.
பின்னால் இருந்த புகைப்படத்தில் இளையராஜா ஏன் சிரிக்கவில்லை என்று அப்போது தான் புரிந்தது.
 அப்பாடலில் கரைந்தவாறே  கூரையின் கீழிருந்த இரு திரைகளில் மணமக்களைப்   பார்த்துக் கொண்டிருந்த போது  தனுஜா  தன் நண்பர் குழாத்தோடு வந்து சேர்ந்தாள்.
"சாரி பா.  ரொம்ப டிராஃபிக். அதான் லேட்டாயிடுத்து".
"பரவாயில்லை"
அவள்  தன்  நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.
அதில் கிருஷ்ணா என்பவன் மட்டும் என்னிடம் வந்து பேசினான்.
"ஹாய் ப்ரோ.  எப்படி இருக்கீங்க?"
"ஹாய். நல்லா இருக்கேன்"
"எங்க வொர்க் பண்றீங்க"
 நான் என் பணி நிறுவனத்தின் பேர் சொன்னேன்.
" நீங்கள் தமிழா" என்று கேட்டேன்.
"இல்ல. தெலுகு. ஆனா கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவேன். ஒரு தமிழ் பொண்ணைத் தான் கட்டிக்கிட்டேன்"
"ஓ. சூப்பர்"
" ப்ரோ. எனக்கும்  இங்கே தான் கல்யாணம்  நடந்தது. ஆனா பாருங்க எனக்கே இந்த மண்டபத்துக்கு வர வழி தெரியல" என்று சொல்லிவிட்டுக்  கலகலவென்று  சிரித்தான்.
கல்யாணம் ஆன பிறகு ஒரு "வழி"யும் தெரியாதுபோலும் என்று எண்ணிக்கொண்டேன்.
பிறகு மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மேடையேறிய போது எங்களுக்கு முன்னால் நின்ற ஒரு வெள்ளைக்காரருக்கு நம்மவர் ஒருத்தர் பொன்னாடை  அணிவித்து படம் பிடித்துக் கொண்டார்.
 நான் சுற்றுலா வந்தது தப்பே இல்லை என்று தெளிந்து கொண்டேன்.
மேடையிலிருந்து கீழே இறங்கிய போது ஜூம் ச ஜூம் சா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ற  பின்னணி இசையோடு   மாசி மாசம் ஆளான பொண்ணு என்ற பாடலைப் இசைக்குழுவினர் பாடினர்.
பயங்கர குஷியாக இருந்தது. 
வந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை மண்டபத்தினுள் ஏற்பட்ட அனுபவங்கள் வெகு சுவாரஸ்யமாய் அமைந்திருந்தன.
நேரம் கொல்வதற்காக ஆர்வமே இல்லாமல்  செய்யத் தொடங்கிய ஒரு விஷயம் இப்படி மிகுந்த ஆர்வத்துக்குரியதாய்  மாறியிருந்தது நம்புவதற்குக் கடினமானதாய் இருந்தது. 
பின்னர் நண்பர்களோடு தாமி எடுத்து முடித்துப் பந்திக்குச் சென்று சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடித்த பின் சிறிது  நேரத்தில் தனுஜாவின்  நண்பர் ஒருவர் காரிலேயே வீட்டுக்குக் கிளம்பினோம்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த போது திவ்யா என் தோளில்  புதைந்து கொண்டு பேசத்தொடங்கினாள்.
 "சாரி. என் நண்பர்களோட பேசிண்டே இருந்தேன். உங்கள சரியா கவனிக்கவேயில்ல" என்றாள்.
"ம்ம்.. பரவாயில்ல மா. இதுல என்ன இருக்கு" என்றேன்.
"சாப்பாடு நல்லா இருந்துதுல்ல"
"ம்ம்"
"சரியா சாப்பிட்டேளா" 
"ம்ம்".
" நான் சொன்ன மாதிரியே டிரஸ் பண்ணிண்டு வந்ததுக்கு 
தாங்க்ஸ்" என்று சொல்லி முத்தமிட்டாள்.
"இதிலென்ன இருக்கு"
"என் மேல கோபம் ஒன்னும் இல்லயே"
"இல்ல."
"ஏன் சரியாவே பேச மாட்டேங்கறேள்"
"அதெல்லாம் ஒன்னுமில்ல மா"
"இல்ல. உங்க மனசுல என் மேல இன்னும் கோபமிருக்கு"
"அய்யோ  இல்லமா"
"நான் நம்ப மாட்டேன்.   வந்ததுல இருந்தே பாக்கறேன். நீங்க டல்லாவே இருக்கேள்.   உங்க மனசுக்குள்ள ஏதோ வச்சிண்டிருக்கேள். என்னன்னு சொல்லுங்கோ"
"சீச்சீ. அதெல்லாம் ஒன்னும் இல்லங்கறேன்ல"
"இருக்கு. சொல்லுங்கோ ப்ளீஸ்"
"ஒன்னுல்ல. அடுத்து உன்னோட எந்த ஃபிரெண்டுக்கு கல்யாணம் வருதுன்னு சொல்றியா. அதுக்கும் இன்னிக்கு மாதிரி  நான் முதல்லயே போயிடறேன், நீ உன் ஃபிரண்ட்ஸோட மெதுவா வந்தா போதும்" என்றேன். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.