புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனிவிழும் மலர்வனம்" தொடர் கதைகள் அத்தியாயம் 19 -20

டென்மார்க் ரதி மோகன் எழுதும்  "பனிவிழும் மலர்வனம்" தொடர் கதைகள் அத்தியாயம் 19 -20


அத்தியாயம்-19"பனிவிழும் மலர் வனம்"

மெல்ல மெல்ல இருள் கவியத்தொடங்கியது. மழை இருட்டும் சேர்ந்து மாலை 5 மணி இரவு 8 மணிபோல் காட்சி அளித்தது. இடியோடு மின்னலும் கண்ணையும், காதையும் பறித்துச்செல்ல
கோடைகாலத்து சந்தோசங்களை கார்காலமேகங்கள் பறித்துச்செல்கிறதே என்ற அங்கலாய்ப்புடன்  மதுமதி நகப்பூச்சிடப்பட்ட தன்  நகங்களை அழகுபார்த்தபடி நீண்டநாட்களின் பின் ஒற்றைத்தாளில் கவிதையொன்றை எழுதினாள்.
" தூங்காத விழிகள் தந்தாய்
   துடிக்கின்ற நெஞ்சம் தந்தாய்
    எழுதப்படாத கவிதையாக
     எங்கு சென்றாய் நீ.... "
 தாய்மொழியில் எழுதும்போது ஏதோ ஒரு பரவசம் அவள் மனதிற்குள் பரவிவருவதை உணர்ந்தாள். ஆங்கிலமும், டெனிசும், பேசும்போது கூட இத்தகைய ஆனந்தத்தை அவள் அனுபவித்ததில்லை. இந்த சமயத்தில் அவளை அறியாமல் அவளுக்குள் ஒரு நெருடல்  வெள்ளைக்கார குடும்பத்திற்குள் நுழையும்போது இத்தனை சந்தோசத்தையும் இழந்து விடுவாளோ என்ற அச்சம். "சீ நான் தொடர்ந்து எழுதுவேன்.என்மொழியை மறப்பேனா.. ஒருபோதும் இல்லை.." மனதிற்குள் பேசிக்கொண்டாள். 

பயங்கர ஓசையோடு ஒரு பேரிடி முழக்கம் அருகில் வெடித்ததுபோல் இருந்தது. ஒருகணம் நடுநடுங்கிப்போனாள். இப்படித்தான் விமானக்குண்டு வீச்சிற்கும், ஷெல் அடிக்கும் இடையில் ஓடியதும், மரத்திற்குகீழே பதுங்கியதும், பதுங்குகுழிக்குள் பதுங்கிய பல பொழுதுகள் எளிதில் மறந்துவிட முடியாதவை. கொத்துக்குண்டுகளுக்கிடையில் கந்தக புகையையும் நுகர்ந்து கடந்து உயிரை கையில் பிடித்தபடி ஓடிய அந்த நாட்கள்....
மாற்றியுடுக்க உடையின்றி, உண்ண உணவுமின்றி சோர்ந்து தாயின் மடியில் மயங்கிய அந்த போர்க்கால நாட்கள்... காலங்கள் கடந்தபோதும் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. அவள் கண்முன்னே கழுத்தறுப்பட்டு துடிதுடித்து இறந்துபோன சித்தி கனவுகளில் இன்றும் ... டென்மார்க் வந்திருந்த ஆரம்பகாலங்களில் நடுநிசியில் இவற்றை எல்லாம் கனவு கண்டு பெரும்சத்தமாக  அவள் குளறியழுதபோது மாமா மாமியிடம் வேண்டிய திட்டுக்கள்... அவர்களுக்கு இந்த வேதனைகள் புரிந்துகொள்ள நியாயமில்லையே.. பெரும் போருக்கு முன்னே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள்.. ஆனால் அவள் இத்தனையும் அனுபவித்தபின் புலம்பெயர்ந்தவள். இவையெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாதவை.

காலநீரோட்டத்தில் எல்லாம் கடந்து மறந்து போகும் என அவள் நினைத்தபோதிலும் சில காயங்கள் என்றும் ஆறாதவையே. கடிகாரம் இரவு ஏழைமணியைத்தாண்ட அடுத்தநாள் வேலைத்தளத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டிய சில பைல்களை பார்வையிட தொடங்கினாள்.. ஒன்பதுமணிக்கு மேல் அவளால் தொடர முடியவில்லை.. கண்களை கசக்கியபடி தூக்ககலக்கத்தில் இரவு உடையை கூட மாற்ற மறந்துபடுக்கையில் சரிந்தாள்..

அதிகாலைப்பொழுது ஒரு தனியழகு..சங்கீதம் பாடும் பறவைகளின்  ஒலி மனதை இதமாக்கிச்செல்லும். திறந்த யன்னல் வழியே வெளியே நோட்டமிட்டாள்...இரவு பெய்தமழையும் நின்று போயிருந்தது.. நல்ல வெளிச்சமாகவே இருந்தது..".இன்று காலநிலை நல்லாகவே இருக்கப்போகிறது.." என யோசித்தபடி அளவுமானியை அவள் பார்த்தபோது வெப்பநிலை காலையிலேயே 15 c காட்டியது. மனதிற்குள் உற்சாகத்துடன் குளியலை முடித்துவந்தபோது சங்கீதாவின் குறுஞ்செய்தி வந்திருந்தது"" மச்சி ஈவினிங். வேலையாலை வீட்டை வாயேன்... என்னைப்பெண்பார்க்க வாறாங்க "" வாசித்தமறுகணம் "" சரி வேலையாலை அங்கேயே வாறன் " என அவளுக்கு பதில் அளித்தவிட்டு பணிக்கு செல்ல ஆயத்தமானாள்.


மதுமதி வேலை முடிந்து மாமா வீட்டை வந்து அடைந்தபோது அங்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வந்திருந்தனர். "வணக்கம் " என தன்னை அறிமுகப்படுத்தியபடி கதிரையில் அமர்ந்தாள் . " என்ன இருந்தாலும்  மாமி பலே கெட்டிக்காரிதான்..சங்கீதா காதலித்தவனையே ஒருவாறு கதைத்து கல்யாணம் வரை கொண்டு வந்ததே பெரிய காரியம்... அதற்கு மேலே கல்யாணத்திற்கு முந்திய உறவால் கருவை சுமக்கிறாள்.."என மனதிற்குள் எண்ணியவளாய் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டாள்..பையனின் தாயார் மிக சாந்தமான பெண்மணியாக தெரிந்தார். ஆனால் தந்தையாரின் பேச்சில் கொஞ்சம் அதிகாரத்தோரணை தென்பட்டது. " ஏதோ பிள்ளைகள் பிழை விட்டிடுதுகள்... காதும் காதும் வைச்ச மாதிரி விசயத்தை அடுத்த முகூர்த்தத்திலே முடிப்பம்... அதுசரி இது உங்க சொந்த வீடோ... என்ன உங்க பிள்ளைக்கு கொடுக்கப்போறியள்"" இந்த வார்த்தைகளை கேட்டதும் மதுமதியின்  கண்களில் அனல் பறந்தது. "கடல் கடந்து வந்தபோது கூட இந்த சீதனப்பிரச்சனை தொலைந்து போகுது இல்லையே"மனதிற்குள் பேசியபடி மாமியின் முகத்தை பார்த்தாள். மாமி சிரித்தபடி"" இதென்ன கேள்வி இருக்கிறதே ஒரு பொம்பிளைப்பிள்ளைதானே நகைநட்டு எல்லாம் கிடக்கு... கொஞ்சகாசு பாங்கிலை இருக்கு... இன்னும் 10 வருசத்திலை வீட்டிக்கடன் முடிய வீடு அவளுக்குத்தானே..." என இழுத்தார். 
" ஓ அப்படியா... நல்லது உங்கடை பிள்ளைக்குத்தானே பார்த்து செய்யுங்கோ...என்றபடி அவர் சிரித்த பார்க்க மதுமதிக்கு அருவருப்பாக இருந்தது.. " பெண்ணை எடுக்க பேரம் பேசுறாங்களே..சீ தமிழன்  மாறவே மாட்டான்..." என நினைத்தபடி சங்கீதாவைப்பார்த்தாள். துள்ளித்திரிந்த அந்த புள்ளிமான் எதுவும் சொல்லாமல் அடக்கத்தோடு அமர்ந்திருந்தது. மாமா தொடர்ந்தார்" மூத்தபையன் டாக்டராக இருக்கான் இப்ப டியூட்டிலை... இவாவின்றை கல்யாணம் முடிந்த கையோடை அவனுக்கும் செய்து வைத்தாள் நல்லது... அவனுக்கும் முப்பது ஆச்சுது இனியும் வத்திருக்க ஏலாது... காலாகாலத்திலை அலுவலை முடிச்சிடனும்..." என்றார். " ஓ நேரத்தோடை முடிச்சு வைச்சால் நாங்களும் பேரன் பேத்திகளை கொஞ்சலாம்..." என சிரித்தபடி மாப்பிளையின் தந்தையார் பரிமாறப்பட்ட தேநீரையும் கேசரியையும் சுவைத்துக்கொண்டிருந்தார்....

(தொடரும் )
                                                        டென்மார்க் ரதி மோகன்

                                     அத்தியாயம்- 20  "பனிவிழும் மலர்வனம்"


சங்கீதாவின் கல்யாணத்திற்கு நாளும் குறித்தாகிவிட்டது. கல்யாண ஏற்பாடுகளுக்கு இடையில் ஒருநாள் சங்கீதாவின் எதிர்கால கணவன் மதனின் ஒன்று விட்ட சகோதரியை மதுமதி சந்திக்க நேரிட்டது.. அவள் கண்களையே நம்ப முடியவில்லை. அன்று பால்ய பருவத்தில் ஒரே பாடசாலையில் தெல்லிப்பளை யூனியனிலும் ,மகாஜனாக்கல்லாரியிலும் ஒன்றாக இருவரும் படித்தவர்கள். பெயரளவில் தெல்லிப்பளை என பெயரை சுமந்ததே தவிர பாடசாலைகள் யூனியன், மகாஜனாக்கல்லூரிகளும் அவர்கள் குடும்பங்கள் போலவே இடம்பெயர்ந்து வேறு கிராமங்களில் இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.. அந்த சமயத்தில் மதனின் சகோதரி மதனிகா மதிமதியின் நண்பியாக திகழ்ந்தவள். நாட்டு நிலைமையால் இடம்பெயர்ந்து கொழும்புக்கு சென்றவள். இன்று டென்மார்க்கில் அவளை சந்தித்தபோது இருவரும் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. இன்று அவள் இரு பிள்ளைகளுக்குத்தாய் இளம் வயதிலேயே திருமணம் முடித்திருந்தாள். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். அப்போதுதான் மதனிகா மதுமதியிடம் கேட்டாள் " என்ன மது நீ இங்குவந்து பல வருசமாச்சே... வேலையும் செய்யிறாய்... கல்யாணம் செய்யும் பிளான் இல்லையா..." அதற்கு கலகல என சிரித்த மதுமதி"" ஏனாம் நாம சுதந்திரமாக இருக்கிற உங்களுக்கு பிடிக்கலையா.... என் இராச்சியத்தில் நானே ராஜாராணி.." என்றாள் .
" என்ன மதனிகா... பெண்கள் படித்து பட்டம் பெற்றவுடன் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதியா என்ன? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்... கணவன் பிள்ளைகள் என வந்திட்டால் சுதந்திரம் எல்லாமே போயிடும்... என் குடும்பத்திற்காக நிறைய கஸ்ரப்பட்டுவிட்டேன்... இப்போது என் குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது...தங்கச்சிக்கும் நல்ல இடத்திலை இருந்து சம்பந்தம் வந்தது... அவங்க கேட்ட பத்துலட்சம் கொடுத்துட்டேன்... கல்யாண செலவுக்கும் காசு அனுப்பியாச்சு... எல்லாரும் கரைசேர்ந்த திருப்தி... இப்ப நான் சுதந்திரப்பறவை...பேச்சு சம்பந்த த்தில் இஷ்டம் இல்லை..காதல் திருமணத்தில்தான் நம்பிக்கை இருக்கு... காலமெல்லாம் கூட வருபவன் இல்லையா..சீதனம் கேட்கக்கூடாது இது எனது முதலாவது கன்டிஷன்....எடுத்தற்கெல்லாம் சீறிப்பாயும் கோபக்காரனாக இருக்கக்கூடாது... அப்படியானவன் ஒருவன் இருந்தால் சொல்லு இப்பவே கழுத்தை நீட்டுகிறேன்..." என்றாள்.
அதைக்கேட்ட மதனிகா வாய்விட்டே சிரித்தபடி... " இந்த ஜென்மத்திலை உனக்கு கல்யாணமே நடக்காது... போ... என்னவாவது பண்ணு" என்றபடி கல்யாண பத்திரிகைகளை அடுக்கத்தொடங்கினாள்.
இவற்றையெல்லாம் கேட்டு சிரித்தபடி நின்ற சங்கர் " ஏனில்லை மது.. நீ விரும்பும் இந்த கொள்கையுடையவங்க இருக்கிறாங்க... ஆனால் அவங்களை உனக்கு பிடிக்கவில்லையே.. "என்றான். மதனிகா கண்களால் ஜாடை காட்டிவிட்டு கல்யாணப்பத்திரிகையை மதிவின் மாமியிடம் கொடுப்பதற்கு மாமியைத்தேடி உள்ளே புகுந்தாள்.
""அது வந்து வந்து.... சங்கர் சிலரை பார்த்தவுடன் பிடிக்கும்.. சிலரை பழகியபின் பிடிக்கும்.. சிலர் நல்லவங்க போல தெரிவாங்க உள்ளே அதிகாரமும் ஆணவமும் இருக்கும்.. கல்யாணத்தின் பின் அதை வெளிக்காட்ட தொடங்கிடுவாங்க...இந்த வகை ஆண்களை நம்ப முடியவில்லையே.. அளவுக்கதிகமான அழகு உள்ளவங்களையும் நம்பவே கூடாது.. அவங்கள் மலர் தாவும் வண்ணத்துப்பூச்சிகள்... " என்றவுடன் ... "" ஏய் ஏய் இந்த குத்தல்தானே வேணாம் என்கிறது" என அவளின் தலையில் குட்ட போக அவள் சிட்டுபோல பறந்து மாமியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். " வெவ் வெவ் " என நெளித்துக்காட்டினாள்.
"" அட கடவுளே... எப்ப பார்த்தாலும் சின்னபிள்ளையாட்டம் ... சண்டையும் சச்சரவும்... சங்கர் அடி வேண்டப்போறாய்.., அவளுக்கு கை நீட்டினால்... " என சங்கரை கடிந்தபோதும் மனதிற்குள் " இதுகள் இரண்டும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு சந்தோசம்.. கடவுளே ஒரு வழி விடப்பா..." என மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.
மதுமதியின் மாமி வீட்டில் கல்யாணம் களை கட்டத்தொடங்கியது. டென்மார்க்கில் சாறி வாங்குவதை விட சுவிசில் மலிவாகவும் நல்ல செலக்‌ஷனாகவும் வாங்கலாம் , இல்லாவிட்டால் லண்டனில் வாங்குவோம் என சங்கீதா பிடிவாதமாக இருந்தாள். டென்மார்க்கில் மற்றைய நாடுகளைபோல இலட்சக்கணக்கில் தமிழர்கள் இல்லை...தமிழ்கடைகளும், உணவகங்களும் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவே.ஆனால் மாமிக்கோ இந்தியா ஒருகிழமை போய் வந்தால் நல்லது என நினைத்தபோதும் சங்கீதாவின் விருப்புக்கு மறுப்புத்தெரிவிக்க முடியாமல் சுவிஸ் சூரிச்சுக்கு செல்வதாக முடிவாகியது. பலகாரங்களை பொறுத்தவரை சில நண்பர்களின் குடும்பங்கள் தாம் செய்து தருவதாக ஒப்புக்கொண்டார்கள். மீதி பலகாரங்களுக்கும் ஓடர் கொடுத்தாகிவிட்டது. சமையலுக்கு நண்பர்கள் ஒத்துழைப்போடு ஒருவரை நியமித்தனர். சாப்பாடு பரிமாறுவதற்கு இளம் பிள்ளைகள் சிலரை தெரிவுசெய்து ஆண்கள் ஒரே நிற சேட்டுடனும் பெண்கள் ஒரே நிற சாறியுடனும் என தீர்மானமாகிற்று. 
இந்த கல்யாண ஏற்பாடு ஒரு புறம் ...மதிவின் வேலை மறுபுறம்.அனசனிடம் வந்த தொலைபேசிஅழைப்பிற்கோ குறுஞ்செய்திக்கோ பல நாட்களாக மதுமதியால் பதில் அளிக்க முடியவில்லை.. இறுதியாக வந்த செய்தி "எனை மறந்துவிட்டாய் புரிந்தேன் "என எழுதி இருந்தான்.. குறைந்து போன குறுஞ்செய்திகள் போல அவர்கள் உறவும் குறைந்தே போனது போலும். அவளின் உள்ளத்திலே ஒரு குற்ற உணர்வோடு அனசனுக்கு தொலைபேசி எடுத்தாள். 
(தொடரும்)


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.