புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 ஜூலை மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாவது இடமாக தெரிவு செய்யப்பட்டு கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர். கு.நா. கவின்முருகு

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு   2016 ஜூலை மாதம்  நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாவது   இடமாக  தெரிவு செய்யப்பட்டு கவியருவி  பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  
                                                      .கவிஞர். கு.நா. கவின்முருகு
                                            தலைப்பு :: அவளென் காதல் - விருத்தப் பா

நீர்த்தவளோ! நிறைந்தவளோ! நெஞ்ச மெல்லாம்
... நீங்காத நாயகியாய் என்னை யாள்வாய்
தீர்த்துவிடா காதலாலும்! மஞ்ச மாளும்
... தீஞ்சுவையாம் தேந்தமிழைப் போலே வந்து
நேர்த்திபட இசைத்தவளும்! வாஞ்சை யோடு
... நீவந்தாய் எனையள்ளி சுகிக்க நீயும்
பார்த்திடுவேன் நித்திலமே! வாழ்க்கை யென்னும்
... பைம்பொழிலில் நீந்திடவே அரணா வாயே.


வந்திடுவாய் என்றபோது மனமோ துள்ளும்
... மாலைமஞ்சள் திங்களுடன் ஒன்று சேரும்
தந்திடுவாய் ஒருபார்வை சொர்க்கம் நீயே;
... தையளவள் நீயுவக்கும் நீடு இன்பம்
பொந்திடுவேன் காதலெனும் கானம் பாடி;
... பூமரத்தின் வாசமெல்லாம் வீசும் காற்றில்
வந்துவிடு என்மனத்து வாசல் வேண்டி
... மஞ்சமிடும் என்கூட்டில் மகிழ்ந்த காதல்.

விழித்தொடுக்கும் அம்புகளே போர்வாள் என்றால்
... வீழ்ந்திடுவேன் உன்மடியில் தோற்ற பின்னே
மொழித்தொடுத்து இனிதாக்கி செப்பி யாங்கு
... மோகத்தை விளத்திட்ட விந்தை யாது
பழித்தாலும் என்செய்வேன் பருவச் சீற்றம்
... பந்தியிட்டு முன்வருதே காதல் சொல்ல
அழித்தாலும் அழியாது எழுதி வைத்த
... அன்பிற்கி னியகாதல் என்று மென்னுள்
.
வாடையிலே வீசுதுங்க குளிந்த காத்து
... வசமாக வந்துசேர்ந்தா மாமன் பொண்ணு
சாடையிலே பேசுறாளே சமஞ்ச பொண்ணு
... சமுத்திரத்த குடிச்சவளா பார்த்தா நின்னு
கோடையிலே குளிரடிக்கும் பக்கம் நின்னா
... கொசுவத்த இடுப்போடு சொருகி வச்சா
ஓடையிலே தப்பிவந்த மீனப் போல
... ஓசையற்று துள்ளுரேனே என்ன செய்ய?

யாருக்குச் சொல்வாயோ கனிந்த அன்பை
... யார்யாரும் சுடுவாரே தீஞ்சொல் கொண்டு
போருக்கு எழுவாரே கொன்று வீழ்த்த
... பூவுக்கும் வேரருக்க அஞ்சி டாரே
தேருக்கு வடங்கட்டி இழுக்க யாரோ
... தேவதைக்கு அத்தைமகன் நானே தானே
ஊருக்கு சொல்லிவிட நேரம் வந்தா
... ஓலைவச்சி சொல்லிடுவேன் பரிசம் போட.

பொற்கால மென்பேனே அவளும் நானும்;
... பொன்கூட்டில் வாழ்தலுமே கனவாய்த் தோன்றும்
நற்காலம் இன்றெனக்கு நல்க நங்கை
... நாணிவர நானணைக்க சாய்ந்த தோளில்
தற்காலம் பொந்தூவும் வாழ்த்திப் பாடி
... தக்கதொரு கன்னியவள் கையி ருத்தி
கற்காலம் வெளியெங்கும் திரிந்து ஓடி
... கால்பதித்து வித்திடுவோம் காதல் வாழ.

பூஞ்சோலை பூச்சொறிய கானம் பாடும்
... பூவினங்கள் மலர்தோரும் மையல் கொள்ளும்
மஞ்சோலை கனிந்துநின்று செழுமை சேர்க்கும்
... மானினங்கள் இளைப்பாரி மஞ்சம் கொள்ளும்
தீஞ்சோலை தேமதுரத் தமிழின் ஓசை
... தெகிட்டாத குரலோசை குயிலாள் கொண்டாள்
நெஞ்சோசை பாடிடுமே அவளைக் கண்டு
... நேர்நிறுத்தி பாடேனோ காதல் சொல்லி
.
அலையோடு அகம்மகிழும் கரையில் நண்டு
... அடிபார்த்து நாணினிற்கும் சிவந்தே கண்கள்!
வலையிட்டு கட்டிவைத்த மீன்கள் வாழ்வும்
... வளைக்கரங்கள் ஊட்டிவிட காதல் போதை!
தலைக்கேறும் மதுவினாலே மயக்கம் என்றும்
... மலைக்கின்றேன் நீதந்த உயிரின் இன்பம்
கலைகொண்டு மகிழ்ந்தாடி இன்பம் சேர்க்கும்
... கன்னிமகள் வாய்மொழியும் காதல் நோயால்
.
வண்டமிழால் பாவியற்றும் புலவர் நெஞ்சை
... வருடுகின்ற கற்பனைகள் பெருக்கும் ஊற்றாய்
தண்டலரும் குவளையுந்தன் மார்பின் தோற்றம்
... தாரகையே நற்பவள சிரிப்பில் அல்லி
கண்டகோலம் கண்ணிறைந்தே கனவாய் காட்சி
... கைகொண்டு பாமாலை யாக்க தந்தாய்
கொண்டபல கோலங்கள் எல்லாம் என்றன்
... கொடியிடையாள் காதலாலே பூத்த நெஞ்சு.
.
பிறையென்ற பெயறேந்தி ஒளிர்ந்து வந்தாய்
... பேரழகாய் மதிமுகத்தாள் நீயும் வந்தாய்
மறையோதும் மனிதர்க்குள் புகுந்த ஞானம்
... மையிருளாய் போனதுதான் ஏது மீதம்
இறையென்னும் வல்லமைபோல் கவிதை வாழும்
... இந்தமிழை புக்கொக்க செய்த பாடல்
துறைதோறும் திணைதோறும் வாழ்த்த நிற்கும்
... துணையணைவாய் மேலோங்க யாப்பால் செய்து
குறைவிலாத மாமணிபோல் உயர்ந்து மின்னும்
... கோடிமின்னல் காதலாலே உயிரும் வாழும்.

- கவிஞர். கு.நா. கவின்முருகு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.