புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூலைமாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்- இராச. கிருட்டினன், திருவரங்கம், திருச்சி

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு  ஜூலைமாதம் 2016  நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி   பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்- 

                             இராச. கிருட்டினன், திருவரங்கம், திருச்சி

தலைப்பு :பூ வாசம்:(எண்சீர் விருத்தம் )
அதிகாலைச் சந்தைக்குச் சென்று நானும்
அரைமூட்டை மல்லிகையை வாங்கி வந்தேன்.
மதியத்து வேளைக்குள் சரமாய்க் கட்டி
மாலையிலே சாலைதனில் விற்கச் சென்றேன்.
முதியவரும் முதன்முதலில் பணமும் தந்து
முருகனுக்குச் சாற்றிடவே வாங்கிச் சென்றார்.
அதிவிரைவில் வந்தொருவர் மலரை வாங்கி
அல்லாவை வணங்கிடவே சென்றார் ஆங்கே.

அன்புடனே மற்றொருவர் மாதாக் கோவில்
அன்னைக்குச் சாற்றிடவே பெற்றுச் சென்றார்.
பின்னாலே ஐயரம்மா காசு தந்தார்.
பிறசாதிக் காரர்கள் வாங்க வந்தார்.
கன்னங்கருத் தொருவர் சென்ற பின்னால்
களிப்போடு வெள்ளையரும் வாங்கிச் சென்றார்.
அன்னநடைப் பெண்ணொருத்தி சூட்டிச் சென்றாள்,
ஆனையுடல் கொண்டவரும் கொண்டார் பூவே!

எத்தனையோ பேர்தினமும் வந்து போவார்,
என்மலரை விரும்பித்தான் வாங்கிச் செல்வார்.
எத்தனையோ தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளும்,
எத்தனையோ வழிபாட்டுக் குதவி யாகும்.
சித்தத்தைக் கவர்ந்திழுக்கும் பூவின் வாசம்
சிறிதேனும் வேற்றுமைகள் பார்ப்ப தில்லை.
பித்துதலைக் கேறியவர் பேதம் பார்ப்பார்,
பெரியமனம் கொண்டவர்கள் கொள்வார் நட்பே!

வாசமெலாம் இதழ்சேர்ந்த மலரிற் றானே,
வாடியிதழ் உதிர்ந்திட்டால் வாசம் இல்லை.
வீசுகின்ற வளிவான்தீ நீரும் மண்ணும்
வேற்றுமைகள் பார்க்காது பொதுவில் நிற்கும்.
நீசமன வேற்றுமையால் கொலைகள் கொள்ளை
நீசெய்தால் நீஒருநாள் வீழ்வாய் திண்ணம்.
நேசமுடன் நபி,யேசு, காந்தி காட்டும்
நேர்வழியில் சென்றாலே உய்வோம் நாமே!

-- இராச. கிருட்டினன், திருவரங்கம், திருச்சி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.