புதியவை

எழுத்துப் போலிகள் -பாவலர் கருமலைத்தமிழாழன்

                                எழுத்துப் போலிகள் -பாவலர் கருமலைத்தமிழாழன்

வறுமையிலே வாடுகின்ற எழுத்தா ளர்தம்
வளமான எழுத்துகளை விலைக்கு வாங்கி
சிறுமையாகச் சிலரிங்கே அவரெ ழுத்தாய்
சிறப்புதனைப் பெறுகின்றார் நூலாய் ஆக்கி !

எறும்புகூட கண்ணில்லாப் போதும் ஊர்ந்தே
எங்கெங்கும் சென்றுணவைத் தேடும் போதில்
இருகண்கள் உள்ளவர்கள் குருடர் போன்றே
இயங்காமல் பிறர்காலில் நடக்கின் றார்கள் !

புலியாகப் பூனையதும் பாய்த லுண்டோ
புழுக்கையினைப் புதையலாக மதிப்போ ருண்டோ
எலிவலையை வீடென்றே வாழ்வோ ருண்டோ
எட்டியதும் அதிமதுரம் என்போ ருண்டோ !

அலிதன்னை ஆண்பெண்ணாய் ஏற்போ ருண்டோ
அழகுசெய்தால் கறுமுகம்தான் வெளுப்பா யாமோ
பலித்திடுமோ பொய்யர்தம் கனவும் நனவாய்
படைப்பாளர் ஆவாரோ போலி யர்தாம் !

பசிதன்னை விலைபேசி வாங்கும் எண்ணம்
பரத்தையிடம் பெறுகின்ற இன்பம் போலாம்
புசியென்று வயிற்றுக்குக் கொடுத்த போதும்
புரிகின்ற பேரங்கள் புனித மாமோ !

நசிந்திருக்கும் எழுத்தாளர் நலிவைப் போக்க
நம்மன்னர் முன்பளித்த கொடையைப் போன்று
கசிந்திரக்கம் காட்டாமல் எழுத்தைப் போற்றிக்
கரம்தாழ்த்தி அவரெடுக்கக் கொடுத்தே காப்போம் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.