புதியவை

விதைத்ததைநாம் காத்துநிற்போம் -எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா

                               எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா
                                                     விதைத்ததைநாம் காத்துநிற்போம் ! 
ஆங்கிலத்தில் கற்றாலும் 
ஆன்மீகம் அகம்நிறைத்தார் 
அறிவுடனே ஆன்மீகம் 
அவருரைத்து நின்றாரே
தன்குருவை சோதித்து 
தன்னுணர்வை அவர்வளர்த்தார்
தன்குருவின் ஆசியினால் 
தரணியெங்கும் ஒளியானார் !

ஈரமதைக் கொண்டிருந்தும் 
வீரமுடன் செயற்பட்டார்
ஊரெல்லாம் அவர்வார்த்தை 
உத்வேகம் ஊட்டியதே
பாரினிலே புரட்சியுடன் 
பலகருத்தை அவர்பகர்ந்தார்
பார்வையெலாம் பலநோக்கில்
பாய்ந்துமே சென்றதுவே !

சமயத்தின் தத்துவத்தை
தாமுணர்ந்தே போதித்தார்
சரியான பாதைசெல்ல
தன்கருத்தை அவர்தந்தார்
மனிதமன நிலையாய்ந்து
மருந்தாகப் பலசொன்னார்
நிலையான கருத்தெனவே
நிறுத்திவிட்டு அவர்சென்றார் !

விளக்கமில்லா நின்றவர்க்கு
விவேகமாய் விரித்துரைத்தார்
வேதனையில் இருப்பாரை 
வெளியேற்றல் கடமையென்றார்
போதனையைச் சொன்னாலும்
பொறுப்புடனே அவர்செய்தார்
சாதனையின் சிகரமென
சகலருமே போற்றுகின்றார் !

காவிகட்டி வந்தபலர்
கண்மூடிப் பலசொன்னார்
மூடிநிற்கும் பலவற்றை
மூடியே வைத்துநின்றார்
வாடிநிற்கும் மக்கள்தமை 
மனங்களிலே கொள்ளாமல்
மூடிநிற்கும் தத்வத்தை
முணுமுணுத்தே நின்றார்கள்  !

காவிகட்டி நின்றாலும்
கண்மூடிக் கொள்கைகளை
களைந்திடுங்கள் எனச்சொன்னார்
களத்தில்நின்று விவேகாநந்தர்
கண்மூடி நில்லாமல்
கண்திறக்க வைத்தவர்தான்
காலமெல்லாம் நாம்நினைக்கும்
கனிவுநிறை விவேகாநந்தர்

வாய்மையினை யாவருமே
வாழ்வியலாய் ஆக்கிடுங்கள் 
வைரமுடை உடலுடனே
வரநீங்கள் முயன்றிடுங்கள்
பொறாமைதனைப் புறந்தள்ளி
புதுத்தெம்பு பெற்றிடுங்கள்
 புதுவாழ்வு உங்களுக்குப்
பொலிவாக அமையுமென்றார் !
              

தேசமதை நேசித்த
திறலான துறவியவர்
பாதகங்கள் தனையெதிர்த்த
பாரதத்தின் துறவியவர்
வீரமுள்ள உணர்வுதனை
ஊட்டிநின்ற துறவியவர்
விவேகநிறை விவேகாநந்தர்
விதைத்ததைநாம் காத்துநிற்போம் !   

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.