புதியவை

வானத்தின் கோலம்.இணுவையூர் வ-க-பரமநாதன்.

                                      வானத்தின் கோலம்.இணுவையூர் வ-க-பரமநாதன்.


பா வகை.....காவடிச் சிந்து
**************************
வானத்தில் நீந்திடும் வெள்ளி – கண்கள்
வான்பார்த்துக் கூத்தாடும் அள்ளி – அவை
...........மனதாடிட விளையாடிட
...........வடிவாகிடக் கனவாமென
...........வாழும் – எனை – ஆளும்
கானத்தில் தோய்வது போலே – கண்ணில்
கார்முகில் போய்வரும் மேலே – இதில்
..........களிப்பேயுற விழிப்பேயறக்
..........களைப்பேயிலை யெனவேயொரு
..........காட்சி – அது – நீட்சி.


வண்ணங்கள் ஆயிரம் கண்டேன் – அதை
வாரியே நெஞ்சினுள் கொண்டேன் – நாளும்
..........வரையோவிய மெனவேதனை
..........வடித்தேமன திலுலாவென
..........வருமாம் – இன்பம் - தருமாம்
எண்ணங்கள் எங்கெங்கோ ஒடும் – பல
இன்புறு பாட்டுக்கள் பாடும் – அதன்
..........எழிலோயெனைத் தடுமாறிட
..........இடுமேபுவி தனிலேதினம்
..........இங்கு – நெஞ்சே – பொங்கு.கார்முகில் வானத்தில் நீந்தும் – அதைக்
கட்டாக நெஞ்சள்ளி மாந்தும் – பெரும்
..........கடலோபெரு மலையோவளர்
..........கரியோசெழி தருவோவுரு
..........காட்டும் – ஆவல் – கூட்டும்
போர்முகம் போற்சில தோற்றம் – அதன்
..........போக்கினில் காண்பேனே சீற்றம் – மறு
..........புறமோபடை யதுவாமெனப்
..........புகவேயழி படவேதனிப்
..........போராம் – வானத் – தேராம்.இணுவையூர் வ-க-பரமநாதன்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.