புதியவை

மாநிலத்தில் ஊனமுற்றோர் !எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா

   மாநிலத்தில் ஊனமுற்றோர் 
எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா
          
  
        பார்வையற்றோர் குறையெதையும் பார்க்காது இருந்திடுவர்
       செவிப்புலனை இழந்தவரோ குறைகேட்கா இருந்திடுவார்
       கையற்றோர் தீயவற்றை தொட்டுவிடா திருந்திடுவார்
       இத்தனைகள் குறையிருந்தும் இவர்நிறைவா யிருப்பார்கள் !

       அழகான கண்ணிருக்கும் அகன்றபெரும் செவியிருக்கும்
       திடமான கையிருக்கும் திரண்டபெரும் உடலிருக்கும்
       வரமாக இவையிருந்தும் வண்ணமுற இருக்காது
       வசைபாடிக் குறைசொல்லி வாழ்நாளைக் கழித்திடுவார் !

       ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு எம்படைப்பே
       பகுத்தறியும் பேரறிவை படைக்கையிலே புகுத்திவிட்டான்
       குறையற்ற உடல்கிடைத்தும் குறைசொல்லி இருந்துவிடின்
       எமைப்படைத்த இறைவனுக்கே ஏற்குமா எண்ணிடுங்கள் !

       குறைகள்பல கொண்டிருப்போர் குறைபற்றி நினைக்கவில்லை
       குறையற்ற உடலுடையோர் குறைகளிலே உறைந்துவிட்டார் 
       கறையற்ற வாழ்வினைநாம் காணவேண்டு மெனநினைத்தால்
       நிறைவாக நினைப்பதற்கு எமைமாற்றல் வேண்டாமோ !

       வெள்ளத்தின் நிலையுயர மெள்ளமெள்ளப்  பூவுயரும்
       உள்ளமது உயர்வுபெறின் கள்ளமுடை நிலையகலும் 
       நல்லதென பார்க்கின்ற நற்பார்வை வளர்ந்துவிட்டால் 
       கள்ளமது கழன்றகன்று கண்ணியமே வந்துநிற்கும் !

       ஊனமுற்றோர் என்றுசொல்லி ஒதுக்கிவிட முயலுகின்றோம்
       உடலினால் ஊனமுற்றோர் ஊனமுற்றோர் ஆகார்கள் 
       ஆணவத்தின் வசமாகி அறம்தவறி நடப்பவரே 
       மாநிலத்தில் ஊனமுற்றோர் ஆகிடுவார் வாழ்வினிலே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.