புதியவை

ரதி மோகன் - பனிவிழும் மலர் வனம்


அத்தியாயம்-25
நேரம் மதியத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அனசனோடு இணைத்திருந்த கரங்களை விலத்திய மதுமதி "" அனஸ் நான் போக வேணுமே இப்ப ..மாமி தேடுவா" என வார்த்தைகள் அவள் வாயில் இருந்து வந்ததே தவிர அவனை விட்டு போக மனம் ஒரு துளியளவும் இடம் கொடுக்கவில்லை.. அவனின் ஆழமான அன்பு மழையில் அவள் நனைந்திருந்தாள்.. மது உண்ட வண்டாக பாதி விழிகள் மூடி அவனின் அருகாமையில் உலகை மறந்திருந்தாள்.அவள் உடலுக்குள்ளே ஏதோ ஒரு மாயமான மாற்றம் நடந்து கொண்டிருந்தது.. உடலிலுள்ள ஹார்மோன்களும் துரிதகதியில்இயங்க தொடங்கியது.. காதலினால் ஈர்க்கப்பட்ட ஆண்மகனின் ஸ்பரிசத்திற்கு இந்தளவு காந்த சக்தியா? கேள்வியோடு மெல்ல தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். சிலகணங்களின் அமைதியில் இருவர் மனங்களும் ஏதோ ஒன்றை மௌன மொழியிலே தமக்குள் பேசிக்கொண்டன. அங்கிருந்து மதுமதி கிளம்பியபோது அனசனின் முகம் வாடிய சிவந்த ரோஜாமலராக காட்சியளித்தது.
" மை டார்லிங் நாளை இதே இடத்தில் சந்திக்கலாம் என்ன " என நளினமான டெனிஷ் தமிழில் கிசுகிசுத்தான்..அனசனால் ஓரளவு தமிழில் பேச முடிந்தது கண்டு மதுமதி உள்ளூர உவகை கொண்டாள்.
அவளுடைய கார் வேகமாக அவளுடைய மாமா வீட்டை வந்தடைந்தபோது அங்கு இவளுக்காக காத்திருந்த எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.. " நேரம் இரண்டு மணியாச்சு .. பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போச்சு..இவ்வளவு நேரமும்?.." என்ற மாமியின் கேள்விக்கு சட்டென்று " இல்லை மாமி ஒரு பிரண்ட் தீடீரென்று வந்த படியால் நேரம் போட்டுது" என ஒரு பொய்யை லாவகமாக சொன்னாள் . கொழுக்கட்டை அவித்து முடித்து மாப்பிள்ளை வீட்டை போக தயாராக அவர்கள் எல்லோரும் இருந்தார்கள்.
"மது என்ன இந்த ஜீன்சும் பிளவுஸ் உடனா வரப்போறாய்? சுடிதார் போட்டிருக்கலாமல்லோ... என மாமி சற்று இழுத்தார்.. அதற்குஇடைமறித்த சங்கர்" அம்மா எந்த உடுப்பு போட்டாலும் அவளுக்கு வடிவு இல்லைதானே.. இதிலை ஒரு சுடிதார் தேவை...நேரம் போகுது.. வெளிக்கிடுங்கோ" என மெல்ல அவளை நோக்கி கண்ணை சிமிட்டியபடி சிரித்தான் .. " போடா லூசு ஏதோ வடிவு என்ற எண்ணம். .. அவிச்ச இறால் மாதிரி கலரு.. அதிலை உனக்கு ஒரு திமிரு.. போடா" என திட்டியபடி காரில் வந்து டிரைவர் சீற்றில் அமர்ந்தாள். அதை இடைமறித்து கார் திறப்பை பறித்தெடுத்த சங்கர் டிரைவர் சீற்றில் அமர்ந்தபடி வெற்றியோடு சிரித்தான். மதுமதியின் முகம் கோபத்தால் சிவந்தது . அவள் காரில் பின்இருக்கையில் மாமியுடன் வந்தமர்ந்தாள்.. இடைக்கிடை கண்ணாடியில் அவள் முகத்தையும் கோபத்தையும். இரசித்தபடி சங்கர் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் .இவர்களின் சண்டையைப் பார்த்து மாமி அலுத்துக்கொண்டார். அதனிடையில் சிடியில் " மன்னிக்கமாட்டாயா மனமிரங்கி ...என்ற பாடலை சுழலவிட்டான். அந்த நேரத்தில்தான் மாமி அவளின் கையை அவதானித்தார். சங்கர் திறப்பை அவளிடம் இருந்து பறித்தபோது கையில் ஏற்பட்ட சிறுகீறலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. " என்ன மது.. ஐயோ கையிலை இரத்தமே .. " என மாமி சொல்ல சட்டென்று காரின் பிரேக்கை சங்கர் அழுத்த கார் ஒரு உலுக்கி உலுக்கியது... வீதியோரமாக காரை நிற்பாட்டிய சங்கர் முதலுதவி பெட்டியை எடுத்து அவளின் காயத்திற்கு மருந்து போட்டான். "" சொறிடா மது நான் சும்மா பகிடிக்கே உன்னோடை சண்டை பிடிக்கவே திறப்பை பறித்தேன்...உன்னிலை எந்த கோபமும் இல்லை மது நம்பு" என பலதடவை மன்னிப்புக்கேட்டான். " சரிடா லூசு மன்னித்தேன் உன்னை ... சும்மா நடிக்காதை" என்றாள்.. அதற்கு சங்கர் " உனக்கு திமிர் ஜாஸ்திதான்... பொறுத்தருள் தாயே" என இரு கரம் கூப்பினான்.
மதுமதியின் கைப்பையில் இருந்த அவளின் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. " யார் இந்த நேரத்தில் ..."என தொலைபேசியை வெளியில் எடுத்த மாமி அதற்கு பதில் அளிக்காமலே துண்டித்தார். மீண்டும் மீண்டும் தொலைபேசி கிணுகிணுப்பை சகிக்க முடியாத சங்கர் " அம்மா யார் என கேட்காமல் ஏன் அதை துண்டிக்கிறீங்கள்? " என்றபடி அதை எடுத்தான் . " நான் சங்கர் பேசுறன் நீங்க?" என றதும்.. அனசன் தன்னை அறிமுகப்படுத்தி மதுவுடன் பேசணும் என சொன்னதும் அவளுக்கு சிறு காயம் அதனாலை இங்கு Sønderborg போகும் வழியில் இடையில் இறங்கி நிற்கிறோம் என பதிலளித்ததும், அனசன் பதறிப்போனான். உடனே தான் வாறதாக சொல்ல அதற்கு சிரித்தபடி நானே டாக்டர் பயப்படவேண்டாம் என தொலைபேசியை மதுவிடம் கொடுத்தான் . " எனக்கொன்றும் இல்லை வை போனை..மாமியவை எல்லோரும் பக்கத்திலை நிற்கினம்"மெல்ல கிசுகிசுக்க எதிர்முனையில் தொலைபேசி வைக்கப்பட்டது. மாமியின் முணுமுணுப்பு " இவன் வெள்ளைக்காரனும் அவனோடை கொண்டாட்டமும் ... சொன்னாலும் திருந்த மாட்டாள் ... " தெளிவாக மதிமதிக்கு கேட்டது.

(தொடரும் )
"பனிவிழும் மலர் வனம்."❤️❤️❤️ரதி மோகன் ❤️

அத்தியாயம்- 24

மதுமதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இரவு பூராவும் அழுதாள். கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுதாள்..அவள் கட்டிலில் புரண்டு புரண்டு கண்களை மூடியபோதும் உறக்கம் கண்களை தழுவ மறுத்தது. நிலவொளி கசிந்து உள்ளிருந்த இருளை துடைத்துக் கொண்டிருந்தது. தலைவிரிகோலமாய் கட்டிலில் ஒரு மூலையில் தலையை தொங்கவிட்டப்படி அசோகவனத்தில் சீதை இருந்த நிலையாக, புகை படிந்த ஓவியமாக அவளிருந்த நிலையைபார்த்தால் எந்தவொரு கவிஞனும் அழகான கவிதை புனைந்திருப்பான். கண்கள் சிவந்து வீங்கி இருந்தன." நான் அனசனோடு வாழ முடியாதா? என்மேல் உயிராக இருப்பவனை விட்டு எப்படி நான் விலக? அம்மாவா? அனசனா? எனக்கு இருவரும் வேணும்"" மனதிற்குள் பேசிக்கொண்டாள் . வானம் மெல்ல மெல்ல வெளுக்கத்தொடங்கியது.. வெளியில் மாமா மாமி பேசும் குரலும் தெளிவாக கேட்டது. அவர்கள் அவளைபார்க்கமுன் விரைந்தோடி குளியலறை கதவைதாளிட்டாள். இளம்வெப்பம் கலந்த நீரில் நீராடிவிட்டு வெளியில் மதுமதி வந்தபோது அவளின் முகம் நிலாவாய் பிரகாசித்தது. அனைத்து கவலைகளையும் மனதிற்குள் புதைத்தபடி புன்னகைத்தாள். " ஏன் மது நேரத்தோடை எழும்பியாச்சு.. மாமாக்கு இப்பதான் கோப்பி கொடுத்தேன்.. நீயும் கப்பிலை வார்த்து குடி மது... இது ஊர்க்கோப்பி நல்ல வேர்க்கொம்பு போட்டு செய்தது" என மாமி கூறியதும் ஆவலோடு ஒரு குவளையில் கோப்பியை வார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தவள் "" இல்லை மாமி வேலை போற நேரத்திற்கு எழும்பிட்டேன்.. அதுதான் கையோடை ஒரு முழுக்கு போட்டேன் ... என்றாள் ." ஓமோம் நல்லது..,பின்னேரம் மாப்பிளை வீட்டை கொழுக்கட்டை அவித்து கொண்டு போகணும் மது... ஏதாவது அலுவல் இருக்கோ நீயும் வருவியோ?" என மாமி கேட்டதிற்கு.." பிரச்சனைஇல்லை மாமி... ஒருக்கா நான் வீட்டைப்போட்டுத்தான் வருவன் " என பதிலளித்தபடி கோப்பியை சுவைத்துக்கொண்டிருந்தாள்.
இவர்களின் குரலை கேட்டு தன் அறையில் இருந்து எட்டிப்பார்த்தபடி சங்கர்" உங்களுக்கெல்லாம் நித்திரை வாறது இல்லையோ... மாமிக்கு ஏற்ற மருமோள்... எனக்கு ஒரு பெட் கோப்பி கொடுக்கலாந்தானே" என்றான். கோப்பி எடுக்கபோன மாமியை தடுத்த மது" முதல் நீ போய் பல் துளக்கிட்டு வா.. கோப்பி தரப்படும் " என்றாள். இதை பார்த்து சிரித்தபடி மதுவின் மாமியார் " சரி சரி படுக்கையிலை வைத்து கோப்பி குடுச்சு அவருக்கு பழகிபோச்சு பாவம் " என்றபடி மகனுக்கு கோப்பி எடுத்துச் சென்றார் . " மாமி நீங்கதான் அவனை இப்படி பழுதாக்கிறியள்.வாறவளுக்குத்தான் கஸ்ரம்.. அவள் உங்களைத்தான் திட்டுவாள்.., " என்றபடி அவனை பார்த்து நெளித்தபடி மாமியிடம் விடைபெற்று
தன் காரில் ஏறினாள் ..
அனசனின் ரெலிபோன் பத்து தடவைக்குமேல் வந்து இருந்தது. நேற்று முழுவதும் இங்கு இவளுடன் தானே கல்யாணவீட்டில் ஒன்றாக இருந்தான்., ஒரே ஒரு இரவு வெறும் 12 மணித்தியாலங்களே இருவரும் காணாத மணித்துளிகள் ..இதற்கிடையில் அவளை பார க கத்துடிக்கும் அனசனின். உண்மையான காதல் ஆழமானது. "வெள்ளைக்காரத்தமிழனே உனை காக்க வைக்கணுமடா.. இரு இன்று முழுவதும் உன்னோடு பேசப்போறதில்லை"" மனதிற்குள் பேசியபடி சிரித்துக்கொண்டாள் .
" எப்படியாவது அம்மாவுடன் பேசி தன் காதலை அம்மாவுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் மதுமதி தொலைபேசி எடுத்தபோது அக்காள்தான் பேசினாள். அவளின் காதலுக்கு அம்மாவிடம் சம்மதம் வாங்கி தருவதாக அக்காள் உறுதிமொழி வழங்கினாள். இதைக்கேட்டதும் மதுமதியின் உள்ளம் சந்தோசத்தில் துள்ளியது.
அவர்கள் குடும்பத்தில் அக்காளின் பேச்சுக்கு எப்போதும் மரியாதை இருந்தது. எப்போதும் சாந்தமான முகமும் ,கனிவான பேச்சும் , அவளின் அமைதியும் பழகுவோரை தன்பால் இழுக்கும் அபூர்வசக்தி அவளிடம் இருந்தது. இப்படிப்பட்ட அக்காளின் மேல் அளவுகடந்த அன்பு மதிமதிக்கு இருப்பதில்ஆச்சரியப்படுவதற்கில்லை.
அந்த நேரம் வந்த அனசனின் குறுஞ்செய்தியில் " மது நீ என்னோடு பேசாவிட்டால் இனி வாழ்க்கையில் எனை சந்திக்க முடியாமலும் போகலாம் " என எழுதி இருந்தான்..அப்போது மனம் கொண்ட வலியை சொல்ல வார்த்தைகள் மதுவிடம் இருக்கவில்லை. உடனே அவனுக்கு தொலைபேசி எடுத்து தன் கோபத்தை எல்லாம் வார்த்தைகளில் கொட்டித்தீர்த்தாள்.. இப்படி ஒருபோதும் பேசாதே என அவள் கடிந்தும் கொண்டாள். உடனேயே அவன் அழைத்த ரெஸ்ரோரன்றிற்கு சென்று ஒன்றாக உணவறிந்தினர். ஒன்றாக சேர்ந்து ஒரே ஐஸ்கிறீமை சாப்பிட்டு காதலின் ஆழத்தை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தினர்.


இவ்வுலகில் அவனையும் அவளையும்தவிர எவருமே இருப்பதாக அவர்களின் உணர்வுகளுக்கு தெரியவில்லை. சொர்க்கமே தரையிறங்கி வந்ததான சந்தோசத்தில் இணைந்த இரு உள்ளங்களும் எங்கோ சிறகடித்து பறந்தன. காதல் இது ஒரு சுகமான அனுபவமே. அதிலே விழுந்தவர்கள் மீண்டும் எழுந்து வருவது என்பதும் முடியாத காரியமே... இத்தகைய காதலை அழ வைத்து பார்ப்பது படைத்தவன் திருவிளையாடலோ இல்லை காதலின் சாபமோ.. இதுதான் இவர்களின் கடைசி சந்திப்பு என்று இருவருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை😢😢

( தொடரும்)

❤️பனிவிழும் மலர் வனம்❤️ரதி மோகன் ❤️

அத்தியாயம்-23
மேளக்கச்சேரியை ரசித்து தலையாட்டியபடி ஒரு பகுதியினர், நிகழ்வுகளை உன்னிப்பாக பார்த்து தமது கைத்தொலைபேசிக்குள் படங்களாக்குவதில் ஆர்வத்தோடு டெனிஷ்இன நண்பர்கள். பலவர்ண சேலைகளுடன் அழகான பெண்கள் ..வானவில் தரை இறங்கிவந்ததோ என பிரமிக்கும் அழகில் நின்றனர். புலம்பெயர்ந்த போதும் மறக்காமல் தமிழ் தேசிய உடையான வேட்டி ,சால்வையை விருப்போடு அணிந்த ஆடவர்கள் என மண்டபம் நிறைந்த கூட்டம். இந்திரலோகமே தரையிறங்கி வந்ததோ என பிரமிக்கும் அழகில் கல்யாண மண்டபம் திகழ்ந்தது. சங்கீதா கல்யாணபுடவையில் வெகு அழகாகத்தெரிந்தாள். வானத்து தேவதையாய் அவள் ஜொலிக்க நட்சத்திரங்களாய் தோழிகள் சூழ்ந்து அவள் நிற்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் அங்கு இருக்கவில்லை.
இப்போது கெட்டிமேளம் முழங்கியது. அனைவரின் கண்களும் மேடையை நோக்க எழுந்து நின்ற மக்கள் பூக்கள் கொண்டு வாழ்த்த அவள் கழுத்தில் தாலி ஏறியது. சங்கீதா திருமதி சங்கீதா மதன் ஆகினாள். தாலியில் குங்குமத்தில் பொட்டிட்ட மதனும் சங்கீதாவும் மாலை மாற்ற நாதஸ்வரத்தில் ஒலித்த " மரகதவல்லிக்கு மணக்கோலம் மங்கலசெல்விக்கு ....என்ற பாடல் காதுகளுக்கு தேன் வார்த்துச்சென்றது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.
அறுசுவை கறிகளுடன் உணவு பரிமாறுவதற்காக சிவப்பும் வெள்ளையும் கலந்த உடையில் ஒரு தொகுதி இளம் ஆண்களும், பெண்களும் அணிவகுத்து செல்லும் காட்சி அழகாய் கண்களுக்கு இதம் சேர்த்தது.
கண்களில் நீர் வழிய கார உணவை அருந்திகொண்டிருந்த அனசன் மதுமதியை பார்த்தான். அவளுக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. டெனிஷ் நண்பர்களுக்கு பிரத்தியேகமான தயாரிக்கப்பட்ட உணவைவிடுத்து கார உணவை அருந்தியது அவளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு பயிற்சியே என மதுமதி காதுகளில் முணுமுணுத்தான். அனசனின் குடும்பத்தோடு சேர்ந்து மதுமதியும் பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாள்.புதுமணத்தம்பதியருடன் வந்திருந்த அனைவரும் குடும்பம் குடும்பமாக படங்கள்எடுத்தபின் ஒருதொகையுனர் வீடு நோக்கி பயணமானர்கள். ஒரு கல்யாணம் செய்து முடித்த களைப்பு மாமா மாமி முகத்தில் மிகத் தெளிவாக தெரிந்தது.
மண்டபத்தைவிட்டு எல்லோரும் வெளியேறியபோது சாயந்தரம் ஆகி இருந்தது. புதுமணத்தம்பதியினர் கார் மாப்பிள்ளை வீடுநோக்கி நகர்ந்தது.
மதுமதியும் மாமா வீட்டிலேயே தங்கினாள். களைப்பினிலே எல்லோரும் படுக்கத்தயாரானார்கள். அந்தவேளைதான் மதுமதியின் அம்மாவிடம் இருந்து தொலைபேசி வந்தது. கல்யாணத்தைப்பற்றி விசாரித்துவிட்டு மதுமதிக்கு கல்யாணம் ஒன்று பேசி சரிவந்துவிட்டதாகவும் பெடியன் சுவிஸில் இருப்பதாகவும் கூறினார். இதைக்கேட்டதும் மதிமதியின் உள்ளம் சுக்குநூறாகியது. கல்யாணம் நடந்த வீட்டில் அழக்கூடாது என்ற வைராக்கியத்தில் வந்த அழுகையை அடக்கினாள். " அம்மா நான் நாளை பேசுறேனே.. இப்ப எல்லோரும் களைப்பில் இருக்கிறோம்.. " " பிள்ளை போனை வைச்சுடாதை.. பெடியனுக்கு உன்னைத்தெரியுமாம்.. பிள்ளையார் கோயிலை உன்னை கண்டவனாம்.., நல்ல சமய ஆச்சாரமான குடும்பம்.. கோயிலோடை திரியுற பிள்ளை .., எதைப்பற்றியும் யோசிக்காமல் நான் சம்மதம் சொல்லிட்டேன் ... இந்த வெள்ளைக்காரனோடை சுத்துற வேலை வைச்சதொலைச்சிடுவன்.. நம்ம சாதி சனத்திலை முழிக்க ஏலாது.. புரிஞ்சுக்கோ.. நீ ஒத்துக்கொள்ளலை என்னை நீ உயிரோடை பார்க்க மாட்டாய்.. நினைவிலை வைச்சுக்கோ""
ரெலிபோன் துண்டிக்கப்பட்டது.
மதுமதியின் தலையில் ஆயிரம்பேர் சம்மட்டி கொண்டு அடித்தாற்போல இருந்தது. 

(தொடரும்)
அத்தியாயம்-22

❤️"பனிவிழும் மலர் வனம்"❤️  ரதி மோகன் ❤️ 
மதுமதியின் கார் வந்த வேகத்தில் வீட்டை அடைய வெறும் பத்து நிமிடங்களே போயிருந்தது. வீட்டுவாசலில் மதனிகா தன் இரு பிள்ளைகளுடனும் நின்றிருந்தாள். " என்ன மதனி தீடீரென்று? சொல்லாமல்...?" என்றவுடன் . " சொல்லாமலா? ஏன் நீ இந்த போனை வைத்திருக்கிறாய்.. எத்தனை எஸ்.எம்.எஸ் போட்டேன். பார்க்கிறதில்லையா? வாற கோபத்திற்கு உன்னை..." என அவள் முடிக்கும் முன்னே.. "" சரி சரி கோப்ப்படாதே.. கொஞ்சம் வேலை பிஸிடி வா உள்ளே பேசிக்கலாம்" என அவள் கையை பிடித்து இழுத்தபடி வீட்டிற்குள் புகுந்தாள். வீடு அலங்கோலமாக இருந்தது. காலையில் பாவித்த பொருட்கள் போட்ட போட்ட இடத்தில் கிடந்தன. இதைப்பார்த்த மதனிகா அவளை திட்டியபடி " என்ன நீ மட்டும்தானே இருக்காய் இதுகளை ஒதுக்கிவைச்சுட்டு போனால் வீடு வரும்போது அழகாய் இருக்குமே" என கூறியபடி மேசையிலுள்ள பொருட்களை அகற்றினாள். " தாங்ஸ்டி மதனி " என்றபடி " எப்படி உன்ரை அத்தார்? நல்லவரோ? பார்த்தால் சைலன்ற் ஆன ஆள் போல கிடக்கு" என்றாள் மதுமதி. " ஹ ஹ ஓமடி சைலன்ற் தான் .. ஆனா எடுத்தற்கெல்லாம் எரிஞ்சு விழுகிறார்..நானொருத்தி இருக்கிறேன் என்ற நினைப்பும் இல்லை.. பிள்ளைகள் என்ன படிக்கிறதென்றும் தெரியாது.. ஏதோ நானென்றபடியால் இழுத்துக்கொண்டுபோறன்..இந்த பிள்ளைகளுக்காகத்தான்... அங்கை அம்மா நினைச்சுக்கொண்டு இருக்கிறா நான் சந்தோசமாக இருக்கிறன் என.. அவரோடை பேசியே பல மாசமாச்சு... காலையிலை நான் வேலை போனால் பின்னேரம் வர அவரு தன் வேலைக்கு போயிடுவார்.. அவர் வர நான் தூங்கிடுவன்.. இதுதான் நம் வாழ்வு... காசு காசு இதை வைச்சு என்னடி பண்ண முடியும்? ஏதோ இரண்டு பிள்ளைகளை பெத்ததுதான் மிச்சம்.. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை" " என அலுத்தபடி மதனிகா சோபாவில் சாய்ந்தாள். " சரி யோசிக்காதை மதனி எல்லாம் ஒருநாள் சரியாகும் கவலையைவிடு.. இரண்டுபேரும் வேலைக்குப் போனால் பிரச்சனைதான்.." என்று அவளை தேற்றியபோதும் மனதிற்குள் அன்பிற்காக ஏங்கும் மதனிகாவை பார்க்க பாவமாக இருந்தது. வேலைக்கு போகாத பெண்கள் வீட்டில் தம் பிள்ளைகளை கவனிக்கவும் அன்பாக கணவனுடன் குடும்பம் நடாத்தவும் நேரம் இருந்தது.இருவரும் வேறுபட்ட நேரத்தில் வேலைபார்க்கும் குடும்பங்களில் அவர்களின் குடும்பவாழ்வு ஏதோ சிதறுண்டு இழுபறிக்குள்ளே போய்க்கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்து சாப்பிட்டாயா என கேள்விகேட்பதற்கு கூட நேரம் கிடைக்காமல் சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள். சிலர் இரண்டு வேலை செய்கிறார்கள் . வீடு, பணம். கார் என அந்தஸ்தை மேன்மைப் படுத்தி வாழ்வதற்காக நிகழ்காலக்கனவுகளை புதைகுழிக்குள்ளே புதைத்துவிட்டு தம்வழி நடக்கிறார்கள். எந்த ஒரு பெண்ணும் தான் மாலையிட்ட கணவனோடு கைகோர்த்து சிரித்து ,ஓருடல் ஈருயிராக வாழத்தானே விரும்புவாள். இவ்வாறாக வாழ்க்கை அமையாவிடத்து சிலர் சகிப்புத்தன்மையோடு தொடருவார்கள் சிலர் விவாகரத்தை நாடுவார்கள். மதனிகாவின் நிலை அவளுக்கு கவலையைக்கொடுத்தாலும் வெளிநாட்டுவாழ்க்கையில் இத்தகையவாழ்வு பல குடும்பங்களில் சகஜமானதொன்றே.
இருதோழிகளும் மனம் விட்டு பேசியபடி சுடச்சுட கோப்பி அருந்தினார்கள்." என்ன மது இது ஊர்க்கோப்பியாக இருக்கே எப்படி? " என மதனிகா வினாவ. ஹ ஹ என சிரித்தபடியே மதுமதி " என்றும் நம் வீட்டில் அம்மாவின் கைமணத்தில் உருவான தயாரிப்புக்களே.." என்றாள். "ஆம் மது நானும் அங்கிருந்துதான் மிளகாய்த்தூளில் இருந்து வடகம் வரை இடைக்கிடை எடுப்பிக்கிறனான்.."என்ற மதனிகா போகத்தயாரானாள். ஆவணி மாதமானபோதிலும் மழை காரணமாக இருளத்தொடங்கியது. மதனிகாவையும் பிள்ளைகளையும் வழியனுப்பிவைத்துவிட்டு தன் அலுவலில் ஈடுபடத்தொடங்கினாள்.
விரைவாக உருண்டோடியது காலம். சங்கீதாவின் திருமணநாளும் வந்தது. ஏகப்பட்டசனக்கூட்டம் டெனிஷ்கார நண்பர்கள் ஒருதொகையினர் வந்திருந்தனர். வர்ண ஆடைகளும் எமது தேசிய உடையான வேட்டியோடு வெள்ளைக்காரரும் வந்திருப்பதை பார்க்க அழகாய் இருந்தது. மதுமதியின் கண்களை நம்பவே முடியவில்லை. அனசன்கூட வேட்டியில். அங்கு வந்த ஆண்களில் அவன் மட்டுமே மதுமதியின் கண்களுக்கு அழகனாய் தெரிந்தான். மெல்ல மெல்ல அவனருகே வந்த மதுமதி அவர்களை வரவேற்றபடி அனசன் காதுகளில் "ஒரு பூணூல் போட்டால் நீ ஐயர் பையனேதான் செம அழகன்டா நீ " என தெளிவான தமிழில் அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். புரிந்ததும் புரியாத பாதியுமாக சிரித்தபடி அனசன் நின்றிருந்தான். அவர்களை கடந்து சென்ற சங்கர் " ஏய் மது இங்கை என்ன பண்றாய் இங்கே கொஞ்சம் வாயேன்.. அம்மா உன்னைத்தேடுறா..." என அவள் கையை பிடித்திழுத்தபடி சென்றான். " சங்கர் கையை விடு எவ்வளவு சனம் பார்க்குதுகள் நா என்ன சின்னப்பிள்ளையா.." என "பேசாமல் வா எனக்கு அந்த தட்டத்தில் வெற்றிலை பாக்கை ஒருக்கா அடுக்க உதவி செய்" என தன்னோடு அழைத்துச்சென்றான். மனதிற்குள் அவனை மதுமதி திட்டியபடி" வந்து வாச்சான் பொறாமை பிடிச்சவன் .. யாரோடையும் கதைச்சா பிடிக்காதே " என அவனை நொந்தபடி தன் வேலையில் ஈடுபட்டாள். மேளக்கச்சேரியை ரசித்தபடி. அவளருகே வந்த சங்கர் " மது இந்த சிவப்பு சாறியில் நீ தேவதை மாதிரி இருக்காய்... கண்படபோகுது..," என சொல்ல " ஓ போதும் பெரிய கண்டுபிடிப்பு போடா" என நெளித்தபடி சங்கீதாவோடு மணவறையில் போய் நின்றாள்
.
(தொடரும் )

அத்தியாயம்- 21

❤️" பனிவிழும் மலர் வனம்"❤️    ரதி மோகன் ❤️
அனசன் தன் தொலைபேசியை எடுக்கவில்லை. சுள்ளென்று அவளுக்கு கோபம் வந்தது. " என்ன இவன் வேண்டுமென்றே எடுக்காமல் இருக்கிறானோ.." மனதிற்குள் நினைத்தபடி தொலைபேசியை துண்டித்தாள். அனசனும் அவளும் ஒரே வேலைத்தளத்தில் வேலை செய்வதால் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. மதுமதி கோடைவிடுப்பில் நின்றதால் சில கிழமைகள் அவனை சந்திக்கமுடியாமல் போனதும், கல்யாண முன்னேற்பாட்டில் அவனை தவிர்த்ததும் துர்அதிஷ்டமே. எதற்கும் நாளை அவனை சந்தித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் தன் அலுவல்களை செய்யத்தொடங்கினாள். ஆனாலும் அவள் மனம் ஒருநிலைப்பாட்டிற்குள்வர மறுத்தது. யன்னலினூடு வெளியே சந்தோசமாக கொஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த பறவைகளின் மேல் அவளின் பார்வை குத்திட்டு நின்றது. அவற்றைப்பார்த்து அன்பை, ஒற்றுமையை
இந்தமனிதவர்க்கம் கற்க வேண்டும். இந்த பறவைகள்போல வாழவேண்டும்.. அவள் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
விஸ்வரூபம் எடுத்தாடின. ஆசைக்கு அணைபோடத்தான் முடியுமா? மனக்குதிரை வேகமாக ஓடியது.
மனதிற்குள் சிரித்தபடி இரவு உணவு செய்வதற்குத் தயாரானாள். இலண்டன் ஐபிசி தமிழ் வானொலியில் அந்திவரும்நேரம் நிகழ்ச்சியில் மனதைமயக்கும் இடைக்காலபாடல்கள் போய்க்கொண்டிருந்தது. பாடல்களுடன் மதுமதியின் மனம் சங்கமித்துப்போக நேரமோ துரிதமாக போய்க்கொண்டிருந்தது.. அந்தி போய் இரவும் வந்து அடுத்த நாளின் உதயமும் புத்தம்புது காலையாக புலர்ந்தது. மதுமதி தன் வேலைக்கு போகும் அவசரம் ஒருபுறம் அனசனுக்கு என்ன ஆயிற்றோ என்ற சிந்தனை மறபுறமாக மனம் குழம்பிப்போய் இருந்தாள்.
மதுமதி வேகமாக தன் காரை செலுத்தினாள். கார்விடும் இடத்தில் தன்காரை விட்டவுடன் வேகமாக வைத்தியசாலைக்குள் நுழைந்தவள் வழமையாக தன் கம்யூட்டரை திறந்தபடி எல்லோரையும் சுகம் விசாரித்துவிட்டு எக்ஸ்ரே எடுக்கும்பகுதிக்கு அனசனுடன் பேசுவதற்கு தொலைபேசி எடுத்தபோது அவன் ஒருகிழமையாக வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
அன்று முழுவதும் அவளால் தன்வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை. தன் கடிகாரத்தில் நேரத்தை அடிக்கடி பார்த்தவண்ணம் இருந்தாள். அவளின் மனவோட்டம்போல் வேலைநேரமும் போய்க்கொண்டிருந்தது. வேலைமுடிந்த கையோடு அனசனின் வீட்டை நோக்கி காரை செலுத்தினாள் .
அங்கு வீட்டு முன்புறத்தில் தன்நாயுடன் அவன் விளையாடிக்கொண்டிருந்தான். அவளைக்கண்டவுடன் அவனுக்கு மகிழ்ச்சிதாளமுடியவில்லை.. அவன் ஓடிவந்து அவளை கட்டி அணைத்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லைதான் "பிளீஸ் விடு . இதெல்லாம் கூடாது "என அவள் சொன்னாளே தவிர அவனிடமிருந்து விடுபட அவளுக்கு மனம் விருப்பப்படவில்லை. ஓர் ஆணின் முதல் ஸ்பரிசம் ஏதோ ஒரு உணர்வையும் புது அனுபவமாக உடலின் ஒவ்வொருகலங்களிலும் ரோஜாக்கள மலர்ந்ததுபோல் அவனின் அணைப்பு அவளுக்கு இதமாக இருந்தது. அவனின் பரந்தமார்பில் முகம் புதைத்தபடி தோட்டத்தில் போடப்பட்ட இருக்கையில் இருவரும் அமர்ந்துஇருந்தனர். காணாத, குரல் கேட்காத பொழுதுகளின் தாபத்தை அவர்கள் விழிகள் பேசியேத் தீர்த்தன. அவளின் தலைமயிரை அன்போடு அவனின் கைகள் கோதின....தம்மை மறந்தநிலையில் இரு ஆத்மாக்களுக்குள் ஓர் இராகம் உதயமானது.
"இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நகராதா" என ற பாடலை அவளின் வாய் மெல்ல முணுமுணுத்தது. அதேவேளை சட்டென்று அவள் பெண்மை விழித்துக்கொண்டது. அவள் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் தமிழ்ப்பெண். ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட்டவள்.கல்யாணத்திற்கு முன் ஒரு ஆணின் கைவிரல்கூட படக்கூடாது என சொல்லி பிள்ளைகளை வளர்ப்பது தமிழ்குடும்பங்களிடை அன்று தொட்டு இற்றைவரை நிலவுகிறது. காதலின் அதி உச்ச உணர்வில் காமத்தின் வெளிப்பாடு தோற்றம் காணுவதை தடுக்க முடியாது. அனசனை பொறுத்தவரை முத்தம் கொடுப்பதும், அணைப்பதும் சர்வசாதாரணம். அவனை தள்ளியபடி அவனிடமிருந்து விலகினாள். அனசன் " டியர் sorry " என்றான் . "ஓகே " என்றபடி "எதற்க்காக நீ வேலை போகலை என அவனை வினாவினாள். அப்போதுதான் அவளுக்கு தெரியவந்தது. அவன் நிமோனியா (சளிச்சுரம்)வருத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்தான் என்று. சிறிது நேர உரையாடலின்பின் அவனால் வழங்கப்பட்ட கோப்பியை அருந்திவிட்டு பிரிய மனமின்றி அங்கிருந்துவிடைபெற்றாள். அந்த சமயத்தில்தான் இதுவரை மனதோடு பொத்தி வைத்திருந்த அந்த மூன்று வார்த்தைகளை அவனைப்பார்த்து முதல் தடவையாக "ஐ லவ் யூ. ஐ லவ் யூ டியர்" என பெரிதாக கத்தி சொன்னாள்.
மனதிற்குள் பூட்டிவைத்த காதலை துணிந்து சொல்லிவிட்டாள். அனசனால் தன்காதுகளை நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியில் அவன் வானத்திலே பறந்தான். துள்ளினான்..
கார் யன்னலினாடாக தலையை நீட்டி அனசன் அவள் கன்னத்தில் அந்த முதல் முத்தத்தை பதித்தான். மதுமதியின் கன்னம் வெட்கத்தால் செந்தாமரையானது. அதே உற்சாகத்தோடு காரை எடுத்தபோது ஒரு கறுப்பு பூனை காருக்குக் குறுக்காக ஓடியது. அவளின் மனது திக் என்றது. அவளை சிறுது நேரம் நிற்கும்படி கூறியவன் ஒரு குவளையில் தண்ணீர் குடிக்கும்படி கொடுத்தான். பூனை குறுக்காக போனால் ஏதோஒரு அசம்பாவிதம் நிகழும் என்ற மூடநம்பிக்கை டெனிஸ்காரரிடையேயும் உண்டு. சிறிது நேரத்தின் பின் மதுமதி அவனிடமிருந்து விடைபெற்றாள். அவனின் நினைவில் அவளின் கார் ஏரோபிளேனாக பறந்தது
.

( தொடருமNo comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.