புதியவை

வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா

வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !
    
            [ எம் . ஜெயராமசர்மா --- மெல்பேண் --- அவுஸ்திரேலியா ]

    மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது
    மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும்
    மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால்
    மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது ! 
 
    யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும்
    ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோ அழித்துவிடும் 
    நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது
    நம்பினார் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது !
 
 
    பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும்
    பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தை பகரவில்லை
    பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று
    பக்குவமாய் சொல்லுவதை பலருமே கேட்பதில்லை !
 
    
    எந்த மதமானாலும் சொந்தம் கொண்டாடிடுங்கள்
    பந்தமுடன் மதம்சொல்லும் வழியினிலும் சென்றிடுங்கள்
    வெந்தழலில் வீழ்த்துகின்ற வேதனைகள் தவிர்த்துவிடின்
    எந்தமதம் ஆனாலும் எல்லோரும் போற்றிடுவார் !
 
 
    நதிகள் பலவிருந்தாலும் கலக்குமிடம் கடலன்றோ 
    நம்மதங்கள் பலவிருந்தும் உணர்த்துமிடம் இறையன்றோ
    நாமதனை உணராமல் நாளுமே மதம்கொண்டால்
     நம்மனத்தில் மதமின்னும் நாளுமே வளருமன்றோ !
 
 
      விலங்கினுக்கும் மதமில்லை பறவைக்கும் மமில்லை
      விளக்கதனில் விழுகின்ற விட்டிலுக்கும் மதமில்லை
      விவேகநிறை மனிதனுக்கோ மதம்நிறைய இருந்தாலும்
      விவேகமதைக் கைவிட்டு வேற்றுமையே காணுகிறான் !
 
 
    மதங்கள் பலவிருந்தாலும் மனம்சிறக்க வேண்டாமா
    மதவெறியை ஊட்டுவதால் மானிடமே மாண்டிடுமே 
    மதமென்னும் கருவதனை புனிதமாய் கொண்டுவிடின்
    மதம்பிடிப்பார் நிலைமாறி வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !
 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.