புதியவை

மலராக்க முனைந்திடுவோம் - எ ம் . ஜெயராமசர்மா    முள்ளிருக்கும் செடியினிலே
    முகிழ்த்துவரும் ரோஜாவோ
    முள்பற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் பூத்துநிற்கும்
    சொல்கொண்டு குத்துவதை
    மெள்ளவே ஒதுக்கிவிடின்
    சுமையெம்மை தாக்காது
    சுகம்பற்றி நினைத்திடலாம் !

    காந்திமகான் மார்பினிலே
    காலாலே உதைத்தவர்க்கு
    காலணியைத் தான்செய்து
    காந்திமகான் பரிசளித்தார்
    வாங்கிநின்ற வெள்ளையரோ
    மனதார உருகிநின்று
    காந்தியது பொறுமைகண்டு
    கண்திறந்து நின்றனரே !

    தொழுநோய்க்கு  தொண்டுசெய்ய
    துணுவுகொண்ட    தூயவராம்
    பழுதில்லா துறவறத்தை
    பாரினிலே பெற்றவராம்
    அன்னையாம் திரேசாவை
    அவமதித்த ஆட்களையே
    அரவணைத்த காரணத்தால்
    அவருயர்ந்தார் அவனிதனில் !

    சிலுவைதனில் அறைந்தார்கள்
    சித்ரவதை செய்தார்கள்
    பலவகையில் வசைவுகளை
    பகர்ந்துமே நின்றார்கள்
    அவையெல்லாம் தாங்கியவர்
    ஆண்டவரே மன்னியென
    அன்புடனே வேண்டியதால்
    அவர்வணங்கும் பேறுபெற்றார் !

    கல்லிலே கட்டிக்
    கடலிலே போட்டார்கள்
    கொல்லுதற்கு நஞ்சுதனை
    அஞ்சாமல் கொடுத்தார்கள்
    எல்லையில்லா கொடுமைசெய்தும்
    எதையுமவர் தாங்கிநின்று
    நல்லபடி சொல்லிநின்றார்
    நமச்சிவாய எனும்நாமம் !

   அவமானம் அசிங்கம்
   அத்தனையும் தாங்கியவர்
   அகிலமதில் இமயமாய்
   ஆகியே இருக்கின்றார்
   பொறுத்தவரே நிறைவடைவார்
   பொங்கினார் பொசுங்கிடுவார்
   வெறுத்தொதுக்கு வெறுப்பேற்றின்
   விரையமே வந்துநிற்கும் !

    வாழ்க்கையிலே முட்களாய்
    பலவந்து குத்திடினும்
    வாழவேண்டும் எனநினைத்தால்
    முட்கள்கூட  மலராகும்
    மலர்ந்துவிடச் செய்வதற்கு
    வழிவகுக்கும் மனம்வேண்டும்
    வழியில்வரும் முட்களையும்
    மலராக்க முனைந்திடுவோம் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.