புதியவை

உருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன??சிறீ சிறீஸ்கந்தராஜா

உருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன??சிறீ சிறீஸ்கந்தராஜா

தொடர் – 3
*****************
“இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள்,
“மொழிக் கண்ணகிகள்” இங்கே கால்வைப்பது
மிகவும் ஆபத்தானதாகும்.
படிமம் என்பது இங்கு உத்தி அல்ல.
காட்சி அனுபவம். அனுபவ சத்தியம்.
படிமம் என்பது சம்பிரதாயமாக
ஓவிய, சிற்ப வழி அனுபவம் ஆகும்.
1961ம் வருட “எழுத்து” 36வது இதழில்
வெளிவந்த கவிதை “விடிவு”
பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி.
இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில்
ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து
மற்றொன்றாகத் தோன்றி மறைகிறது.
இதுவே தமிழில் வெளிவந்த முதன் முதல்
படிமக் கவிதையாகும்.
சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும்
ஓவியம்தான் படிமம் என்பது.
வெறும் வருணனை கூடப் படிமம்தான்.
ஆனாலும் உவமை, உருவகம், தொன்மம்
அடங்கிய சொற்களால் உருவாக்கப்படும்
சொல் ஓவியம் சிறந்த படிமமாகும்.
பல சொற்கள் மரபில் இருந்து எடுக்கப்பட்டு
மறு அர்த்தம் அளிக்கப்பட்டன.
பலசொற்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.
தொன்மம் என்றால் Myth என்ற சொல்லுக்கான
கலைச்சொல் ஆகும்.
விழுமியம் என்றால் values.
படிமம் என்றால் image .
மொழி நேரடியாகச் சுட்டுவதன் மூலம்
பொருள் அளிக்கின்றது.
பலசமயம் அந்த முறை போதாமலாகும்போது
இன்னும் குறியீட்டுத்தன்மை தேவையாகின்றது.
தமிழில் இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக
அணிகள் என்கின்றோம்.
அனைத்தையும் ஒன்றாகச் சுட்டும் ஒரு கருத்துருதான்
படிமம் என்பதாகும்.
உவமை உருவகம் எல்லாமே ஒட்டுமொத்தமாக
கவித்துவப் படிமங்களே.
ஒன்றைச்சொல்லி அது உணர்த்தும் பொருளைக் கேட்பவன் கற்பனைக்கே விட்டுவிடுவதே படிமம் என்றும் சொல்லாம்.
கவிதையியலில் படிமம் என்பது கறாரான
பொருள் கொண்டது.
உணர்த்தப்படும் பொருளை முழுக்க முழுக்க வாசகனின் கற்பனைக்கே விட்டுச் செல்லும் பண்பு கொண்டது.
கவிதை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி.
ஒவ்வொரு விதமாக வளர்சசிப் பெற்றோ அன்றி
மாற்றம் அடைந்தோ வந்துள்ளது.
மரபு என்னும் பெயரில் கட்டுப்பட்டிருந்தது.
இலக்கணத்துக் குட்பட்டிருந்தது.
பாரதியின் வருகைக்குப் பிறகே
கவிதையில் மாற்றம் ஏற்பட்டது.
மரபிலிருந்து விடுதலைப் பெற்றது.
புதுக்கவிதையின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது.
படிமம், குறியீடு என ஓர் அலங்காரத்தை ஏற்படுத்திக் கொண்டு அவைகளுக்குள் சிக்கிக்கொண்டது.
சிறப்பும் பெற்றது.
குறியீட்டின் ஒரு வடிவமே படிமம் என்றாலும்
படிமத்துக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு.
படிமம் கவிதையை ஒரு படி உயர்ததியது
என்று திடமாகக் கூறலாம்.
படிமம் என்பது புதுக்கவிதைக்கு உரியது எனினும்
மரபிலுள்ள உருவகமே புதுக்கவிதையில்
பெயர் மாறித் தொடர்கிறது.
“உவமை உருவகங்களின் பரிணாம வளர்ச்சியே படிமம்”
என கைலாசபதி கூறியுள்ளமை கவனிப்பிற்குரியது.
மெய், உரு என்பவை படிமப் பன்புகள் என
தொல்காப்பியமும் கூறுகின்றது.
எஸ்ரா பவுண்டு, அமி லோவல், லாரன்ஸ், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்ற மேலைநாட்டுக் கவிஞர்கள்
படிம உத்தியைக் கையாண்டு படிமக் கவிதைகளை
எழுதி வளர்த்து வந்தனர்.
படிமத்துக்கு பல விளக்கங்கள் உண்டு.
“சொற்களால் வரையப்படும் ஓவியம்”
என சி,டே, லூயில் கூறுவார்.
கவிதையைச் செம்மைப்படுத்துவதும் செறிவுபடுத்துவதும் சிறப்புப் படுத்துவதும் படிமமேயாகும்.
கவிதையைக் காட்சியாகத் தோன்றச்செய்வது
படிமம் எனப்படும்.
மனத்திற்கும் அறிவிற்கும் கவிப் பொருளை உணர்த்துவதும் படிமமே.
படிமம் புதுக்கவிதைக்கு வெறும் அலங்காரமல்ல.
அதன் ஜீவநாடி சத்து ஏற்றும் சாதனம்
என்று விளக்கியுள்ளார் சி,சு, செல்லப்பா.
மொழியைக் கவிதையாக்கும் ஓர் அருமையான
கருவியே படிமம் என்றும் குறிப்பிடலாம்.
மிக முக்கியமாக படைப்பாளனின் அனுபவத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றதே படிமம்.
குறிப்பாக “தீப்பந்து போன்ற சூரியன்” என்னும் உவமத்தை “தீப்பந்துச் சூரியன்” என்று சுருக்கி எழுதினால் அது படிமம் ஆகின்றது.
படிமத்திற்கு சுருக்கமே தேவை.
“போன்ற” சொற்கள் தேவையற்றது.
ககனப் பறவை
நீட்டும் அலகு,
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை,
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை,
கடவுள் ஊன்றும்
செங்கோல்.
என “மின்னல்” என்ற தலைப்பில் மின்னலைப் பிரமிள் வருணித்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
தலைப்பை வைத்தே ஒவ்வொரு வரியையும்
படிமமாக்கிக் காட்டியுள்ளார்.
விடுகதைத் தன்மையும் ஒவ்வொரு படிமத்திலும்
காண முடிகின்றது.
படிமம் எனப் பொதுவாக சொல்லப்பட்டாலும்
அதிலும் பல வகை உள்ளன.
அவை அழகியல்,
கொள்கை முழக்கம்,
அங்கதம்,
நிகழ்ச்சி,
முரண் பொருள்,
புதுமையியல்,
தொன்மவியல்,
மிகை நவிற்சி,
தத்துவம்,
இளிவரல்
என வகைப்படுத்துகிறார் கவிஞர் மித்ரா.
சமயம், தொன்மம், மூலம், அடிக்கருத்து, இயற்கை,
தன்னியல்பு என்கிறார் கவிஞர் சிற்பி.
ஆயினும் மனப்படிமம், அணிப்படிமம், குறியீட்டுப்படிமம்
என மூன்று பிரிவுகளிலே அனைத்தும் அடங்கியுள்ளன.
மனப்படிமத்தை ஜம்புலன்களால் எழும் காட்சி என்றும், அணிப்படிமத்தை இலக்கிய மொழிநடை வாயிலாகத் தோன்றுவது என்றும்,
குறியீட்டுப் படிமத்தை புரியாத உண்மைகளைப் புரியச் செய்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கவிதை மரபைத் தோற்றுவித்தவர் பாரதி எனினும் ந.பிச்சமூர்த்தியே புதுக்கவிதையை முழுமையாக எழுதியவர்.
படிமத்திலும் சில எழுதியுள்ளார்
“இழைப்புளி சீவிய
மரச்சுருள் ஒன்று
கால் மீது காற்றில்
உருண்டு சிரிக்கிறது”
இக்கவிதை ஒலி நயப்படிமத்துக்குச் சான்றாகின்றது.
உருண்டது என்பது காட்சி.
சிரித்தது என்பது ஒலி நயம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.