புதியவை

நான் கவிஞன் - ஏ எம் அஸ்ஹர்என் வீட்டில் யாரும் கவிதை எழுதுவதில்லை
அவர்கள் கவிதையின் வாசகர்களுமில்லை

என் உறவுக்காரர்கள் கவிதை வாசிப்பதில்லை
எங்கிருந்து எனக்கு கவிதை வந்தது....

என் அப்பா
என் அம்மா
என் அண்ணா
என் அக்கா
என் தங்கை
இவர்கள் யாரும் கவிதைகளின் வாரிசுகளில்லை
ஆதலால் என் கவிதைகள் பற்றி பேசுவதேயில்லை
...
பத்திரிகையில் வந்த
என் முதல் கவிதையை மகிழ்ச்சியோடு வாசித்துக்காட்டினேன்
நான் வழி தவறிப்போவதாக நினைத்தார்கள்
என் கவிதையை பார்த்ததை விட
என்னை பரிதாபகமாக பார்த்தார்கள்
என் அக்கன ஆனந்தம் காற்றில் உலர்ந்து போனது
நான் கவலைப்படவில்லை
ஏனெனில் அவர்களின் மூத்தவர்கள் கவிதை எழுதியதில்லை
...
வானொலியில் ஒலிபரப்பான
என் கவிதையை கேட்டுக்கொண்டிருந்த அவர்கள்
என் அறையிலிருந்த வானொலிப் பெட்டியை எடுத்துப் போனார்கள்
இவன் படிப்பின்றி கவிதை எழுதி
பாதையோரத்தில் பரிதவித்து
எதிர்காலத்தை தொலைக்கப்போகின்றான்
என அங்கலாய்த்தார்கள்
அதற்கும் நான் அழவில்லை
ஏனெனில்,அவர்களின் பெற்றோர்கள் கவிதை எழுதியதில்லை
அந்தக் குளத்தில் பிறந்த கவிதைக் குழந்தை நான்
என் பாதை வேறு அவர்களின் பாதை வேறு...
என் அறைகள் முழுவதும் கவிதைகளிருக்கின்றன
அது ஓர் காதல் ஸ்பரிஷம் செய்கிறது
அது ஓர் யுத்தம் செய்கிறது

அது ஓர் போராட்டம் செய்கிறது
அது ஓர் புரட்சி செய்கிறது
ஆனால், அந்தக் கவிதைகள்
என் வீட்டில் மௌனமாகவே உறங்கிக்கிடக்கிறது...
என்னசெய்ய
யாருமே கவிதை எழுதாத என் குடும்பத்தில்
நான் கவிதையை படித்துக்காட்டுவதில்லை
அவர்கள் படிக்கச்சொல்லி கேட்பதுமில்லை
அது அவர்கள் புரட்டாத ஒரு பகுதி
அவர்கள் கவிதையின் வாரிசுகளில்லை
நான் என் கவிதையை அவர்கள் ரசிக்கவேண்டுமென்று விரும்புவது நியாயமில்லை
நான் மாத்திரமே
என் குடும்பத்தில் கவிதையை கடந்து போகிறேன்...
யாருமே கவிதை எழுதாத
என் குடும்பத்தில்
என்னிலிருந்து கவிதை தொடங்கியது
அது அவர்களுக்கு சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடும்
கவிதை தொடங்கிவிட்டால் நிறுத்துவது கடினம்...
சில நேரம் தலைமுறை கடந்து
என் கவிதை பீறிடும்
அப்போது அவர்கள்
என் மீதான எண்ணங்களை கழுவிக் கொண்டு
நிலாவில் குளிப்பார்கள்
எங்கள் குடும்பத்தில் பிறந்த
அதிர்ஷ்டமான பிள்ளை இவன் என மகிழ்வார்கள்...
யாருமே கவிதை எழுதாத
எளிமையான வீட்டில் பிறந்த
என் மடியில் கனத்துக் கிடக்கிறது பணமல்ல
ஏராளமான கவிதைகள்...

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.