புதியவை

உலக சமாதானமும் இளைஞனும் .கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

இன்று சர்வதேச சமாதான தினமாம்


உலக சமாதானமும் இளைஞனும் 
........................................கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

விமான மொடு "ராக்கெட்" ஏறி
விண்ணகம் அளந்த போதும் 
இமாலய முகத்தைத் தொட்டு
எளிதெனக் கண்ட போதும்
சமாதனம் என்ற காற்று
தரணியில் வீசும் வண்ணம்
அமைதியைப் பேணும் பண்பு
அகன்றிடில் இன்பமேது?

சாதியத் தகர்த்து மண்ணில்
சமத்துவம் தன்னைப் பேணி
நீதியை வளர்ந் துயர்த்தி
நிலத்திடை அமைதி கண்டு
சாதனை இதுவே என்று
சகலரும் ஓன்று பட்டு
வேதனை அறுந்து சாய
வினை செயல் ! இளைஞர்பங்கே!

வேர் அற மரங்கள் சாயும்
வீழ்ந்திடும் இலைகள் காயும்
நீர் இல்லாப் பயிர்கள் யாவும்
நிச்சயம் வாடிச் சாகும்
பார்தனில் வாழும் மக்கள்
பண்புடன் சேர்ந்து வாழும்
சீர்மை தான் மறந்து போகில்
செகந்தனில் அமைதி சாகும் !

பூமியை சுவர்க்க மாக்கி
பொலிவினை முகங்கள் தேக்கி
தமது ரத்து வெள்ளம்
திரட்சியாய் எங்குமோட
நா மெலாம் ஓன்று பட்டு
நற்சமா தானந் தன்னை
வாருடன் வளர்ப்ப தொன்றே
வழி யெனக் கண்டு சேர்வோம் !

இன மத வேறு பாடு
இழி வெனக் கண்டு ணர்ந்து
மனந் தனில் மனிதர் யாவும்
ஓர் குலம் என்ற எண்ணம்
கனிந்திடில் மோதல் யாவும்
கரைந்துமே அமைதி பூக்கும்
சினமது தீர்ந்து போனால்
செக மெலாம் செழிப்புத் தானே....?

அவர் மொழி அவரவர்க்கு
அன்னையின் வடிவமாகும்
எவர் மனத் துள்ளு மிந்த
எண்ணமே உறைய வேண்டும்
சுவர்தனைப் போட்டு வீணே
துயரினை வளர்த்தல் கூடா !
சுவர்க்கமே உண்டு பண்ண
துணிந்தெழு ! இனைஞ நீயும் !

சுதந்திரம் மானிடர்க்கு
சொந்தமாம் என்ற வுண்மை
நிரந்தரம் வாழு மாகில்
நிலத்திடை அமைதி பூக்கும்
இதமுடன் உலகு வாழும்
இளைஞகாள் ஓன்று கூடி
நிதமிதை வளர்த்து மண்ணில்
நிம்மதி காக்க வாரீர் !

(எனக்குப் பிடித்த என் கவிதை இலங்கை ஜனாதிபதி விருதினை பெற்றுத்தந்தது )

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.