பசித்திருந்தார் தனித்திருந்தார்
விழித்திருந்து செயற்பட்டார்
பழிபாவம் தனைவெறுத்து
பக்குவமாய் வாழ்ந்திருந்தார் !
தனக்கெனவே பலகொள்கை
இறுக்கமாய் கடைப்பிடித்தார்
தளர்ந்துவிடும் வகையிலவர்
தனைமாற்ற விரும்பவில்லை !
பொறுப்புகளை பொறுமையுடன்
பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
வெறுத்தாலும் பலவற்றை
விருப்பமுடன் அவர்செய்தார் !
மற்றவரை மனம்நோக
வைக்காமல் இருந்துவிட
மனதளவில் வேதனையை
வைத்துவிட்டார் மாமனிதர் !
தன்வீட்டை நினையாமல்
தாய்நாட்டை நினைத்துநின்றார்
தாய்சொல்லைத் தட்டாத
தனயனாம் காந்திமகான் !
தாய்சொல்லே வேதமாய்
தான்மனதில் கொண்டதனால்
தாய்நாட்டின் விடுதலைக்காய்
தனையிழக்கத் துணிந்துநின்றார் !
உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார் !
நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
சாதிபேதம் தனையுடைத்து சமத்துவத்தைப் போற்றினார்
பாதியாடை தானுடுத்தி பார்வியக்க செய்திட்டார்
பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம் !
பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
காற்றிலே பறக்கவிட்டு கவலையின்றி திரிகின்றார் !
நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
கள்ளமில்லா சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார் !
காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
காந்திதனை காசில்வைத்து கலப்படங்கள் செய்வாரை
காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும் !
மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
மதுக்கடையை ஒழுத்துவிட மனதிலெண்ணம் வருமாயின்
புதிதான பாரதத்தை பூமியிலே கண்டிடலாம்
அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும் !
கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்து
பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும் !
காந்தி ஜயந்திதனை கருத்துடனே மனத்திருத்தி
காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தை
காந்தி மகான் வாழ்த்திநிற்க கைகோர்த்துக் காத்துநிற்போம் !
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.