புதியவை

தமிழ் வழிக் கல்வி- ராபியா குமாரன்- புளியங்குடி.

தமிழ் வழிக் கல்வி 

ராபியா குமாரன்- புளியங்குடி.   

 கணேசன். வாடகை ஆட்டோ ஓட்டுநர்.  மீட்டருக்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்காத நாணயமான ஆட்டோக்காரர். சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து, தினசரி வருமானத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் எத்தனையோ குடும்பங்களில் கணேசனின் குடும்பமும் ஒன்று. அக்குடும்பங்களில் நாளைய உணவு என்ன? என்பதை இன்றைய வருமானமே தீர்மானிக்கும். 

    இந்த நிலைமை கணேசனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் தான். வாழ்வின் யதார்த்தத்தையும், சிக்கனத்தின் சிறப்பையும் அறிந்திருந்த கணேசனின் மனைவி லட்சுமியின் மனதிலும், கணேசனின் மனதில் இருந்ததைப்  போன்றே வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நிரம்பியிருந்தது. கணவன், மனைவிக்கிடையேயான நல்ல புரிதலும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும், லட்சுமியின் ஊக்கமும் கணேஷனை இன்று ஒரு டெம்போ டிராவலருக்கு உரிமையாளராக்கியிருக்கிறது. தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நடுத்தர வர்க்க நிலையினை அடைந்திருந்தான் கணேசன்.  

பழைய மகாபலிபுர ரோட்டில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், ஒப்பந்தத்தின் அடிப்படையில்  தனது டெம்போ டிராவலரில் ஊழியர்களை வேலைக்கு அழைத்து வரும் பணியை செய்து கொண்டிருந்தான்.  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, மிடுக்கான உடையணிந்து ஸ்டைலாக பவனி வரும் இளம் மென்பொறியாளர்களைக் காணும் போதெல்லாம் தன் மகன் அருணைப் பற்றிய எண்ணமே கணேசனின் மனதில் ஓடும். 

எப்பாடு பட்டாவது தனது மகன் அருணை இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல சேர்த்து, படிக்க வச்சு பெரிய ஆளாக்க வேண்டும்,  தான் பட்ட கஷ்டத்தை தன் மகன் படக் கூடாது. ஆரம்பப் பள்ளியில் கூட அடி எடுத்து வைத்திடாத தனது வம்சத்தில் தனது மகன் காலேஜ் வரை சென்று படிக்க வேண்டும். அதுவும் இங்கிலீஷ் காலேஜ்லதான் படிக்க வேண்டும் என்று தனது சகாக்களிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். கணேசன் இப்படி கூறுவதைக் கேட்டால், விவரம் அறிந்த சிலர் லேசாக உள்ளுக்குள் சிரித்துக் கொள்வதுண்டு.

இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல படிக்க வைக்கணும்னா பணத்தை தண்ணியா செலவழிக்கணும், உன்னால அவ்வளவு பணம் செலவழிக்க முடியாது என்று நண்பர்கள் கூறினால், 'எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்ல.. எம் புள்ளய நான் இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துலதான் படிக்க வைப்பேன், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கவலையில்ல..' என்று கூறுவான்.

லட்சுமியும், கணேசனும் ஐந்தாம் வகுப்பு வரை கூட படித்ததில்லை.  ஆனால் கல்வியின் மகத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர். சிறு வயதில் வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்த கணேசன், தனது தந்தையால் தனக்கு தர முடியாத கல்வியை தான் தன் மகனுக்கு தந்துவிட வேண்டும் என்ற இலட்சியத்திலேயே வாழ்ந்தான். தங்களின் மகன் டை கட்டி, சூ போட்டு, பெல்ட் அணிந்து ஸ்கூல் வேனில் இங்கிலீஷ் பள்ளிக் கூடத்திற்கு போகும் காட்சியைப் பார்க்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தனர் இருவரும்.

    சென்னையில் மிகச் சிறந்த கான்வெண்ட் ஸ்கூல் எது? என்று விசாரித்து, அப்பள்ளியில் கட்டணம் எவ்வளவு என்று விசாரித்த போது கணேசனுக்கு தலையே சுற்றியது. ஆயினும் தன் மகன் இங்கிலீஷ்ல பேசுறத கேட்க வேண்டும் என்ற ஆவலில் எப்படியும் ஃபீஸ் கட்டிவிடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.

    இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் வந்து படுத்திருந்தான் கணேசன். சிறிது நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்த லட்சுமி, 'என்னங்க உங்க முகம் ரொம்ப பிரகாஷமா இருக்கு..? என்ன விஷயம்...?' என்று கேட்டாள்.

    'நாளைக்கு நம்ம புள்ளைக்கு இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல அட்மிஷன் போடப் போறோமே... அந்த சந்தோஷம்தான்..' 

    'ஆமாங்க.. எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. கண்டிப்பா நம்ம புள்ள நல்லா படிச்சு பெரியா ஆளா வருவான்' 

    'இனி எம்புள்ள என்னைய டாடினு தான் கூப்புடுவான்'

    'என்னையும்தான் மம்மினு கூப்புடுவான்' என்று கணேசனும், லட்சுமியும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டே உறங்கி விட்டனர்.

    மறுநாள் காலை கணேஷனுக்கு சீக்கிரமே விழிப்பு தட்டியது. படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தனது ஆசை மகன் அருணை சிறிது நேரம் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

        'கண்ணா எழுந்திரிடா.. பள்ளிக் கூடத்துக்கு போயி அட்மிஷன் போடணும், என் மகனை கலெக்டராக்கணும், டாக்டராக்கணும்...' என்று கொஞ்சிக் கொண்டே, அருணை அழைத்துச் சென்று தானே குளிப்பாட்டி புது டிரஸ் போட்டுவிட்டுக் கொண்டிருந்தான்.

        சமையலறையிலிருந்து கையில் காலை உணவோடு வந்த லட்சுமிக்கு தனது மகனை புது டிரஸ்ஸில் பார்த்ததும் அவளது மனது இருபது வருடம் கடந்து சென்றது. அருணை டாக்டராகவும், கலெக்டராகவும், விமானியாகவும் அவள் கண் முன் நிறுத்தியது.  

        மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த லட்சுமியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் துளிர்க்க ஆரம்பித்தன. காலம் காலமாக வாழ்க்கையில் வறுமையாலும், கல்வியறிவின்மையாலும் பட்ட கஷ்டங்கள் தன்னோடு முடியப் போவதாக எண்ணி பெருமிதம் கொண்டாள். 
 
    'சரி நேரமாச்சு லட்சுமி... நீ போய் அந்த பணத்த எடுத்துட்டு வா... சீக்கிரம் போனாத்தான் சீட் கிடைக்கும்... நம்ம புள்ள படிக்க போறது பெரிய ஸ்கூலாக்கும்... லேட்டா போனா நல்லா இருக்காது, சீட் காலியாகிவிடும்.. முதல் ஆளாப் போயி அட்மிஷன் போட்டு வந்தாதான் எனக்கு நிம்மதி...'  என்று கூறிக் கொண்டே கணேசன் புறப்பட ஆயத்தமானான்.

தான் எடுத்து வந்து கொடுத்த பணத்தை வாங்கி சரிபார்த்து பையில் வைத்துக் கொண்டு, மகனை தூக்கிக் கொண்டு நடந்த கணேஷனை வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினாள் லட்சுமி.

முக்கால் மணி நேரம் பயணித்து பள்ளியை அடைந்த கணேசனுக்கு பள்ளியின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களைக் கண்ட போது அவனையும் அறியாது அவனுள் ஏதேர ஒரு மகிழ்ச்சி.  அது இத்தனை வசதி மிகுந்தவர்களின் பிள்ளைகளோடு தன் மகனும் படிக்கப் போவதை எண்ணி வந்த மகிழ்ச்சியா? அல்லது இவ்வளவு பெரிய வசதியானவர்கள் படிக்க வைக்கின்ற பள்ளியில் தானும் தன் மகனைப் படிக்க வைக்கப் போகிறோம் என்பதை எண்ணி வந்த மகிழ்ச்சியா? என்று கணேசனுக்கே தெரியவில்லை.

பள்ளியின் மெயின் கேட்டை கடந்து கூட்டமாக உள்ளே சென்றவர்களில் கணேசனை மட்டும் வாட்ச்மேன் அழைத்து என்ன வேண்டும்;...? என்ன விஷயமாக வந்தீர்கள்...? என்று வினவிய போதுதான் தான் அணிந்திருந்த உடை மற்றும் நடை போன்ற சில  வித்தியாசங்கள் தனக்கும், மற்றவர்களுக்குமிடையே  இருப்பதை உணர்ந்தான் கணேசன்.

அட்மிஷன் ஃபார்ம் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த கணேசனுக்கு, முன்னால் நின்றிருந்தவர்களிடம் பேச்சு கொடுக்கத் தோன்றியது. ஆனாலும் ஏதோ ஒரு தயக்கத்தினால் அவனது வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தது.

ஃபார்ம் தருபவரிடம் பணத்தை நீட்டிய போது அவர் பார்த்த ஏளனப் பார்வை கணேசனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.  பணத்தை வாங்கிக் கொண்டு ஃபார்மை கொடுத்தவர் கையெடுத்திடச் சொன்ன போது 'கணேசன்' என்று தடித்த எழுத்துக்களில் தமிழில் கோணலாக கையெழுத்துப் போடும் போது பின்னால் நின்றவர் நக்கலாய் சிரித்த சிரிப்பொலி கணேசனுக்கு கேட்காமல் இல்லை. யாரிடம் கொடுத்து ஃபார்மை நிரப்பச் சொல்லலாம் என்று தயங்கியவாறே நின்றான் கணேசன். 

ஒரு வசதியான தாயும், தந்தையும் தன் மகளுடைய ஃபார்மை நிரப்பிக் கொண்டிருந்ததைக் கண்டதும் மிகுந்த தயக்கத்துடன் அவர்களை நெருங்கி, 'அம்மா... கொஞ்சம் இந்த ஃபார்மை நிரப்பித் தர்றீங்களா... எனக்கு எழுதப், படிக்கத் தெரியாது...' என்றான்.

கனிவோடு ஃபார்மை வாங்கிய அந்த பெண்மணி நிதானமாக அனைத்து விவரங்களையும் கேட்டு நிரப்பிக் கொடுத்தார்.

'ரொம்ப நன்றிம்மா..' என்று கணேசன் அப்பெண்மணியிடம் கூறும்போது நல்லவங்களும் நாட்டுல இருக்கத்தான் செய்றாங்க... என்று நினைத்துக் கொண்டான்.

அட்மிஷனுக்காக பள்ளி முதல்வர் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தான் கணேசன். அறையின் உள்ளே சென்ற அனைவரும் சீட் கிடைத்த சந்தோஷத்தில் வெளியே வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் தானும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்;க ஆவலோடு  காத்திருந்தான்.

'அருண் யாருங்க...'என்று சப்தம் வந்ததைக் கேட்ட கணேசன், 'நாந்தாங்க..எம்மகன்தாங்க அருண்' என்று வேகமாய் ஓடினான்.

'ம்..ம்... உள்ள போங்க..' என்றார் அந்த காக்கிச் சட்டைக்காரர்.

முதல்வரின் அறையில்  கோட், சூட் அணந்திருந்த பள்ளி முதல்வரைப் பார்த்ததும,; 'வணக்கம் சார்..' என்ற கணேசனை நிமிர்ந்து பார்த்த முதல்வரின் பார்வைக்கும், அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுத்தவர் பார்த்த ஏளனப் பார்வைக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

'உங்க நேம் என்ன' என்றார் பள்ளி முதல்வர்.

'கணேசன் சார்'

'ஆ.. மிஸ்டர் கணேசன்.. என்ன படுச்சுருக்கீங்க...'

'நா மூணாவதுதான் சார் படுச்சுருக்கேன்..'

'உங்க வைஃபாவது படுச்சுருக்காங்களா...'

'இல்ல சார்.. அவளும் ரெண்டாவதோ, மூணாவதோதான் படுச்சுருக்கா'

'இங்க பாருங்க மிஸ்டர். கணேசன்.. இது சிட்டியிலேயே நம்பர் ஒன் ஸ்கூல்.. ஒவ்வொரு வருஷமும் எல்லோரும் ஆச்சர்யப்பட்ற அளவுக்கு ரிசல்ட் கொடுக்குறோம். ஸ்டூடன்ஸ் நல்ல படிச்சு நிறைய மார்க் வாங்கணும்னா அவங்க பேரன்ட்ஸ் படிச்சிருந்தால்தான் ஹோம் ஒர்க்லாம் சொல்லித் தர முடியும்... பசங்களும் நல்ல படிப்பாங்க... எங்க ஸ்கூல் ரூல்ஸ் படி அம்மா, அப்பா யாரவது ஒருத்தர் படிச்சிருந்தால்தான் சீட் கொடுப்போம்..நீங்களும் படிக்கலை, உங்க மனைவியும் படிக்கலை. சோ.. சாரி மிஸ்டர். கணேசன் உங்க பையனுக்கு சீட் தர முடியாது' என்றார் பள்ளி முதல்வர்.

'சார்.. சார்... அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்.. என் பையன் நல்ல படிப்பான் சார்... நான் எங்கையாவது டியூஷன் ஏற்பாடு பண்ணி நல்ல படிக்க வைக்கிறேன் சார்... என் மகனை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வைக்கிறதுதான் சார் என் லட்சியம்.. தயவுசெஞ்சு சீட் கொடுங்க சார்...' என்று கெஞ்சினான் கணேசன்.

'லட்சியம் இருந்து என்ன செய்றது? நீங்க படிக்கலையே.. நீங்க என்னதான் கெஞ்சினாலும், பேசினாலும் உங்க பையனுக்கு சீட் தரமுடியாது கணேசன்.. என் டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு..' என்று சொல்லி வாசலை நோக்கி கையை நீட்டினார் பள்ளி முதல்வர்.

தனது மகனைப் பற்றி தான் கட்டியிருந்த மனக்கோட்டை சுக்கு நூறாக உடைந்தது போலிருந்தது கணேசனுக்கு. கண்களில் கண்ணீர் கசிய தனது மகனை கையில் பிடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினான். எத்தனையோ கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் வந்த கணேசனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
'அட்மிஷன் போட்டாச்சு.. நம்ம புள்ளைய இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல சேர்த்தாச்சு...' என்ற சந்தோஷ செய்தியை கொண்டு வருவார் தனது கணவர் என்று ஆவலோடு வீட்டு வாசற்படியிலேயே அமர்ந்திருந்தாள் கணேசனின் மனைவி லட்சுமி. வாடிய முகத்துடனும், கலங்கிய கண்களுடனும் வந்த கணேசனைப் பார்த்ததும் லட்சுமிக்கு இருப்புக் கொள்ளவில்லை.

'என்னங்க என்னாச்சு.. எதுக்கு சோகமா இருக்கீங்க.. கண்ணெல்லாம் கலங்கீருக்கு... நம்ம பையனுக்கு அட்மிஷன் போட்டாச்சா...' என்று பதற்றத்தினூடே  அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டாள் லட்சுமி.

'இல்ல லட்சுமி... அட்மிஷன் கிடைக்கல'

'எதுக்குங்க  கிடைக்கல...'

'அம்மா.. அப்பா யாராவது ஒருத்தர் படிச்சுருந்தாதான் அட்மிஷன் தருவாங்களாம்... நாம ரெண்டு பேருமே படிக்காததுனால அட்மிஷன் தர மாட்டேன்றாங்க...'

'என்னங்க சொல்றீங்க... நீங்க கொஞ்சம் பேசி பார்க்கலாம்ல.. நாம படிக்காததுல என்னங்க இருக்கு' 

'இல்ல லட்சுமி.. நான் எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன்... அவங்க எதையுமே கேட்கவில்லை... சீட் தர முடியாதுனு சொல்லீட்டாங்க...' என்ற கணேசனுக்கு நெஞ்சு விம்மியது.

லட்சுமிக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது. படிக்காமல் தான் பட்ட கஷ்டம் தன்னோடு போயிடும். தன் மகன் படிச்சு பெரிய ஆளாகி நல்ல படியா வாழ்வான். இங்கிலீஷ்ல பேசி தங்களுக்கு பெருமையைத் தேடித் தருவான் என்ற தனது ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விட்டதாக எண்ணி வருந்திய லட்சுமி, கண்ணில் கண்ணீரோடு வாயிலிருந்து வார்த்தைகளையும் உதிர்த்தாள். 

படிச்சவங்க புள்ளைங்கதான் படிக்க முடியுமா? படிக்காதவங்க புள்ளைங்களும் படிக்காமலே இருந்து கஷ்டப்படத்தான் வேணுமா? நாம என்ன வேணும்ணா படிக்காம இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லாம கஷ்டப்பட்ட பெத்தவங்களுக்கு நம்மள படிக்க வைக்கிறதுக்கு எங்கங்க வசதி இருந்துச்சு... அவங்களுக்கு வறுமையோட பேராடவே தெம்பு இல்லாத போது நமக்கு எங்க இருந்துங்க படிப்பை கொடுக்க முடியும்?

 நாமதான் படிக்கல நம்ம புள்ளையாது நல்ல நிலைமைக்கு வந்து கஷ்டப்படாம வாழ்வானு கனவு கண்ட நமக்கு நம்ம புள்ளைய ஆசை பட்ட மாதிரி படிக்க வைக்கக் கூட முடியலையேங்க... என்று உருகிய லட்சுமி, 'வீட்ல பாடம் சொல்லிக் கொடுத்தால்தான் புள்ளைங்க படிப்பாங்கனா பள்ளிக் கூடத்துல டீச்சருங்கெலாம் எதுக்கு இருக்காங்க? அவங்க ஒழுங்கா சொல்லிக் கொடுத்தா பசங்க ஒழுங்கா படிக்க மாட்டாங்களாக்கும்' என்று கோபமாகவும் பேசினாள். 

முதல்நாள் சந்தோஷமாய் உறங்கிய கணேசனும், லட்சுமியும் இந்த இரவில் துக்கத்தாலும், சோகத்தாலும் வெம்பினர்.

காலையில் எழுந்து எதுவும் சாப்பிடாமல் வெறித்த முகத்துடன் நீண்ட நேரம் திண்ணையில் அமர்ந்திருந்த கணேசனின் மொபைல் போன் சிணுங்கியது. போனை ஆன் செய்து, 'ஹலோ..' என்றான் கணேசன்.
எதிர் முனையில், 'கணேசன், இன்னைக்கி பேய்மெண்ட் டேட் ஞாபகம் இருக்குல, மறக்காம பத்து மணிக்குள்ள வந்து உங்க வண்டிக்கான வாடகை பணத்தை வாங்கிட்டு போங்க..' என்றார் கணேசன் பணிபுரியும் ஐ.டி. கம்பெனியின் ஹெச். ஆர். மேனேஜர்.

மகனின் அட்மிஷனுக்காக நிறைய கடன் வாங்கி அதில் சிறதளவை செலவும் செய்திருந்தான் கணேசன். பணம் வந்ததும் அதனை திருப்பித் தர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததால் பணத்தை பெற்றுக் கொள்ள கம்பெனிக்குச் சென்றான்.

கணேசனைக் கண்டதும், ஹெச். ஆர். மேனேஜர், 'வாங்க கணேசன், என்ன ஒரு மாதிரி இருக்குறீங்க.. என்னாச்சு.. வாட் ப்ராப்ளம்' என்றார்.

'ஒண்ணும் இல்லை சார்..' 

'நோ.. நீங்க ஏதோ மறைக்கிறீங்க.. நீங்க நார்மலா இல்ல..என்ன ப்ராப்ளம் சொல்லுங்க கணேசன்.' 

 'சொல்றேன் சார்.. என் மகனை இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல படிக்க வைக்கணும், அவன் இங்கிலீஷ்ல பேசுறத காது குளிர கேட்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். உங்களையெல்லாம் பாக்குறப்ப என் புள்ளையும் உங்கள மாதிரி பெரிய பெரிய கம்பெனில வேலை பார்க்கணும், பெரிய பதவிகளுக்கு போகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாரா இருந்தேன் சார். நேத்து ஒரு பெரிய இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல போயி என் பையனுக்கு அட்மிஷன் போடப் போனேன். ஆனா நானும், என் மனைவியும் படிக்காததுனால எம் பையனுக்கு சீட் தர முடியாதுனு சொல்லிட்டாங்க சார்.. என் பையன்தான் சார்  எனக்கு உலகம். அவனுக்காகதான் நானும், என் மனைவியும் வாழ்றோம். அவன் இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல படிச்சு பெரிய ஆளா வராம எங்களை மாதிரி கஷ்டப்படுற மாதிரி ஆயிடுச்சுனா எங்களால தாங்க முடியாது சார்... எம் பையனோட எதிர்காலத்த நெனச்சா எனக்கு கஷ்டமா இருக்கு..' என்று ஓ..வென அழ ஆரம்பித்தான் கணேசன்.

'வாட் இஸ் திஸ் கணேசன்... அழாதீங்க.. கொஞ்சம் பொறுமையா இருங்க..' என்று ஹெச். ஆர். மேனேஜர் சமாதானப்படுத்திய கொஞ்ச நேரத்தில் அமைதியானான் கணேசன்.

ஹெச். ஆர். மேனேஜர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

'கணேசன், உங்கள நெனச்சா எனக்க ரொம்ப பெருமையா இருக்கு. தான் பட்ட கஷ்டத்த தன் மகன் படக்கூடாதுனு உங்க மகனை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நல்லா படிக்க வச்சு பெரிய ஆளாக்க நினைக்கிற உங்க நல்ல எண்ணத்தை நான் மனதார பாராட்டுறேன். ஆனா, இங்கிலீஷ் மீடியத்துல படிச்சாதான் நல்ல நிலைமக்கு வர முடியும், இங்கிலீஷ்ல பேச முடியும்னு உங்களுக்கு யாரு சொன்னது' என்று கேட்டார் ஹெச். ஆர். மேனேஜர்.

'என்ன சார்.. இப்பிடி கேட்குறீங்க.. பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் அவங்க பிள்ளைங்கள இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல தான சார் படிக்க வைக்கிறாங்க.. தமிழ்ல படிச்சா தமிழ்ல மட்டும்தான் பேச முடியும். இங்கிலீஷ்ல படிச்சாதான சார் இங்கிலீஷ்ல பேச முடியும்..?' என்று அப்பாவியாய் கேட்டான் கணேசன்.

    இலேசாக சிரித்த ஹெச். ஆர். மேனேஜர், 'நீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு கணேசன். என்ன மாதிரி பெரிய பெரிய பதவிக்கு உங்க பையன் வரணும், இங்கிலீஷ்ல பேசணும்னு சொன்னீங்க.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் நீங்க நினைக்கிற மாதிரி இங்கிலீஷ் மீடியத்துல படிக்கல. எங்க கிராமத்துல இருந்த சாதாரண ஸ்கூல தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். இந்த காலத்துல இங்கிலீஷ் மீடியத்துல படிச்சால்தான் நல்லா வர முடியும்னு ஒரு பிரம்மையை உருவாக்கி வச்சுருக்காங்க.. நீங்க நினைக்கிற மாதிரி இங்கிலீஷ் மீடியத்துல படிச்சால்தான் இங்கிலீஷ்ல பேச முடியும்னுலாம் ஏதும் இல்லை.  நல்ல சிந்தனையும், அறிவும் உள்ள பசங்க எங்க படிச்சாலும் பெரிய ஆளா வருவாங்க... நிறைய சாதனையாளர்களும், அறிஞர்களும் தமிழ் மீடியத்துல படிச்சவங்கதான்... எதையும் தாய் மொழில படிச்சால்தான் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.சிந்தனை வளம் பெருகும்.. தமிழ் மீடியத்துல படிக்கிறது கௌரவ குறைச்சலும் இல்ல.. இங்கிலீஷ் மீடியத்துல படிச்சவங்கதான் நல்ல வருவாங்கன்ற உங்க எண்ணத்த தூக்கிப் போடுங்க... உங்க பையனுக்கு நல்ல புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்து சின்ன வயசுல இருந்தே புத்தகம் படிக்கிற பழக்கத்தைக் கொண்டு வாங்க... நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்க.. வாழ்க்கையோட யதார்த்தத்தையும், நீங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க என்பதையும் உங்க பையனுக்க புரிய வைங்க.. இதையெல்லாம் செஞ்சாலே போதும். உங்க பையன் உங்க ஆசைப்படி நல்லா படிச்சு பெரிய ஆளா வருவான்.  ஆங்கில மோகத்தை தூக்கிப்போட்டுட்டு நல்ல தமிழ் மீடியத்துலையே சேர்த்து அவன் ஆசைப்பட்ட படிப்பையே படிக்க வைங்க' என்றதும் கணேசனுக்கு அந்தப் பேச்சில் இருந்த யதார்த்தமும், உண்மையும் புரிய ஆரம்பித்தது. 

ஆங்கில வழிக் கல்வியின் மீதிருந்த மோகத்தில் இருந்து மீண்ட கணேசன் ஹெச். ஆர். மேனேஜரிடம், 'சார் சென்னையில் நல்ல தமிழ் மீடிய ஸ்கூல் எது சார்..?' என்று கேட்டான்.

மகிழ்ச்சியோடு கணேசனை தட்டிக் கொடுத்த ஹெச். ஆர். மேனேஜர் சென்னையில் சிறந்த தமிழ் வழிக் கல்வியை போதிக்கும் அந்தப் பள்ளியின் பெயரைச் சொன்னார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.