புதியவை

இத்தாலியும் இன்பத்தமிழும்எம்.ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா ]

இத்தாலியும் இன்பத்தமிழும் !
               
           எம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ]..
  

 " யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும்  காணோம் " எனப் பாரதியால் வியந்து பார்க்கப் பட்டது

 தமிழ்மொழியாகும்.     பாரதி இக்காலக்கவிஞ்ஞன்.அவன் பல மொழிகளை அறிந்தவன்.அந்த மொழி அறிவின் துணையோடுதான் இவ்வாறு கூறும் துணிவு  அவனுக்கு வந்திருக்கிறது.அவனது கூற்றை மறுத்துக் கூற எவரும் முன்வரவில்லை.எனவே  தமிழ் மொழி மற்றைய மொழிகளை விட இனிமையானது என்பதை எண்ணி நாம் பூரிப்படைதல் வேண்டுமல்லவா? இப்படியான எமது இன்பத் தமிழை - பல மேலை நாட்டறிஞ்ஞர் விருப்புடன்    கற்றார்கள் என்பதை அறிகின்றோம்.எமது மொழியின் பால் ஆராக் காதல் கொண்டு கற்றதோடு  நின்றுவிடாமல் - கற்றுத்தேர்ந்த கன்னித்தமிழுக்கு நன்றிக்கடனாகப் பலவற்றைச் செய்து தமது  காணிக்கை ஆக்கினார்கள்.அவர்களது இந்தத் தமிழ்த் தொண்டானது யாவராலும் ஏற்றிப் போற்றப் படுகின்றது.இந்த ரீதியில் மேலை நாடான இத்தாலியும் எமது தமிழ் வளச்சிப்பாதையில் தன்னை  இணைத்து கொண்டதை நாம் காணமுடிகிறது.                                                                
   கிறீஸ்த்தவ மதப்பணியினை முன்னிட்டு 1710ல் தமிழ் நாட்டுக்கு வந்தவர்தான் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள்.இவர் முப்பது வயதில் தமிழ் நாட்டுக்கு வந்து-ஏறக்குறைய முப்பத்து  ஏழு வருடங்கள் மதப்பணியில் ஈடுபட்டார்.இவர் தமிழை விருப்புடன் கற்றார்.இதனால் இவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை ஏற்பட்டது.இத்தாலி,கிரேக்கம்,பிரேயம், ஆகிய மொழிகளிலும் இவர் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். இவரது பன்மொழி ஆற்றல்- தமிழ் மொழியில் இவரால் பல படைப்புக்களைப் படைப்பதற்கு உறுதுணையா  -க இருந்தது எனலாம்.தமிழ் மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகைகளில் இவரது தொண்டுகள் அமைந்து காணப்படுகின்றன.    

 1) தமிழ் எழுத்துத் திருத்தம்                                                            
 2) செய்யுள் நூல்கள் ஆக்கம்                                                         
 3) உரைநடை நூல்கள் ஆக்கம்                                                   
 4) மொழிபெயர்ப்புப் பணி                                                         
 5) இலக்கண நூல்கள் ஆக்கம்                                                   
 6) அகராதி நூல்கள் ஆக்கம்                                                    
   
    தமிழ் எழுத்துக்களைப் பண்டைக்காலத்தில் எழுதும் பொழுது அவற்றில் ஓசை குறைவாக வரும் இடங்களுக்கு அந்த எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. " க " என்னும் எழுத்துக்கு மாத்திரை ஒன்று.அதே எழுத்தின்மேல்      புள்ளியை வைத்துவிட்டால் அந்த எழுத்து " க் " என மாறிவிடும்.அதே வேளை உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்ல- ஒரு மாத்திரையாக இருந்தது - புள்ளி வைத்த காரணத்தால் அரை மாத்திரை ஆனதோடு- ஒலியளவிலும் குறுகி ஒலிக்கும் நிலைக்கும் வந்துவிட்டதைக் காணமுடிகிறதல்லவா?
    இந்தவகையில்" எ", " ஒ" என்னும் இரண்டும் - புள்ளி பெற்றால் அவை குறிலாகவும்    புள்ளி பெறாத நிலையில் அவை நெடிலாகவுமே உச்சரிக்கும் வழக்கம் காணப்பட்டது. நாளடைவில் அவற்றுக்குப் புள்ளியிட்டு எழுதும் வழக்கம் மறந்துபோன நிலையில்   இவற்றினது குறில் - நெடில் வித்தியாசங்களை அடையாளம் காண்பது சிக்கலாகி விட்டது.இந்தச் சிக்கலுக்குத் தக்க பரிகாரம் காட்டினார் இத்தாலியப் பாதிரியார்              " பெஸ்க்கி " அவர்கள்.இவரால் அறிமுகப் படுத்தப்பட்டதே இன்று நாம் கைக்கொள்ளும்  "ஏ " நாவும் " ஓ ' வன்னாவும் ஆகும்.அவரால்த்தான் " எ" கீழ் பகுதியில் ஒரு கோடும் - " ஒ 'வில் ஒரு சுழியும் வந்தது என்பதை எம்மில் பலர் அறியாமலும் இருக்கலாம்தானே! அதுமட்டுமல்ல- கெ, கொ, என்ற எழுத்துக்களில்காணப்படுகின்ற ஒற்றைக்கொம்புகளை    மேலே சுழித்து இரட்டைக்கொம்புகளாக்கி- கே,கோ, என்ற உச்சரிப்பு வரத்தக்கதாக -- இன்றுவரை அந்த அமைப்பிலேயே நாங்கள் பின்பற்றக் கூடியதாக எழுத்துமுறையில் சீர்திருத்தம் செய்தவரும் இத்தாலிப் பாதிரியார் பெஸ்க்கியேதான் என்பதையும் மனதில் கொள்ளுதல் வேண்டும்.இவரால் கொண்டுவரப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழும் ஏற்றுக்கொண்டது.தமிழரும் ஏற்றுக்கொண்டனர்.நல்லதை ஏற்பது தமிழின் பண்பாடு அல்லவா!
    தமிழ் எழுத்தில் திருத்தம் செய்த இப்பெரியார்- தமிழ் இலக்கிய வரலாற்றில் - அதாவது காப்பிய இலக்கியத்திலும் தனது ஆற்றலைக் காட்ட விளைந்தார்.இதன் பயனாக 3615விருத்தப்பாக்களைக் கொண்ட " தேம்பாவணி " என்னும் காப்பியம் எழுந்தது.இது மூன்று காண்டங்களையும் முப்பத்தாறு படலங்களையும் கொண்டதாக      அமைக்கப்பட்டது.திருக்குறளின் தெள்ளிய நயம், சிந்தாமணியின் செழுஞ்சுவை, கம்பரா மாயாணத்தின் கவியின்பம், யாவும் இந்தத் " தேம்பாவணியில் " தேங்கிக் கிடக்கக் கூடியதாய் இந்த இத்தாலியப் பாதிரியார் படைத்தளித்தார்.இந்தச் செழுமிய நூல் - தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது.அவ்வேளை - இவரது தமிழ் ஆற்றலை மெச்சிய புலவர்கள் இவருக்கு " வீரமாமுனிவர் " என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள் என்று அறியமுடிகிறது.அது தொடக்கம் இவரை யாவரும் " வீரமாமுனிவர் " என்று அழைத்து வரலாயினர் எனபது குறிப்பிடத்தக்கதாகும்.
     இதைவிட - 101 பாக்களால் ஆன " திருக்காவலூர் கலம்பகம் ""கித்தேரிஅம்மானை"     "அடைக்கல நாயகி வெண்கலிப்பா' போன்றவற்றையும் ஆக்கி அளித்தார்.தேவாரப்             பதிகம் இத்தாலியம் பெருமகனைக் கொள்ளை கொண்டது.அதன் காரணத்தால்             " கரணாம்பரப் பதிகம் " உருவானது.மேலும் இவரால் பல பாடல்கள் இலக்கிய நயம் கனியப் பாடப்பட்டன." தமிழ்ச் செய்யுள் தொகை " - என்ற தொகுப்பின் மூலமாக - தமிழில் உள்ள பல நயமான நீதி நூல்களைத் தெரிந்து தொகுத்துக் காட்டினார்.இது ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது என்பது அறிஞ்ஞரின் கருத்தாகும்.
     செய்யுள் இயற்றிச் செந்தமிழுக்கு அணிசெய்த இவ்வறிஞ்ஞர் உரைநடை இலக்கிய      த்தையும் விட்டு வைக்கவில்லை.முதன் முதலாகப் பாமரரும் விளங்கக்கூடியதாக இலகுவான வசனநடையில் " அங்கத " இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும்." பரமார்த்த குருகதை " என்ற இந்த நூலைப் பண்டிதர்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள் என்றால் .... இவரின் ஆற்றலை வியக்காமல் இருக்கமுடியுமா? தாம் சார்ந்த கிறீஸ்த்தவம்சம்பந்தமாகப் பல உரைநடை நூல்களையும், துண்டுப்பிரசுர ங்களையும் - பரமார்த்த்குரு கதையைத் தொடர்ந்து வெளியிட்டார்.இந்த வகையில்             வேதியர் ஒழுக்கம்,வேதவிளக்கம், பேத மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு, என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
      ஆக்க இலக்கியம் படைத்தை இப்பெருமகன் - மொழிபெயர்ப்புத் துறையிலும் முன்னின்று உழைத்தார்.அந்தத் துறையில் அவரின் மொழி பெயர்ப்புக்கு இலக்காக அமைந்தது வள்ளுவரின் வான்மறையாகும்.மேலை நாட்டவர் பலரும் வள்ளுவத்தின் பால் பெருவிருப்புக் கொண்டிருந்தனர் என்பது பொதுவான உண்மையாகும்.குறளில் அமைந்திருந்த- அறத்துப்பால்,பொருட்பால், ஆகியவற்றை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.இம் முயற்சியானது - குறளின் அருமையையும், பெருமையையும், மேனாட்டாரும் அறிந்து கொள்ள உதவியது எனலாம்.
       வீரமாமுனிவரின் பண்பட்ட உள்ளம் - தமிழ் அன்னைக்கு மேலும் ஏதாவது பயன் உள்ள பணியைச் செய்ய வேண்டுமென விளைந்தது.இதன் பயனாக - தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் " தொன்னூல் விளக்கம் " என்னும் இலக்கண நூல் உருப்பெற்றது.இதனைத்தமிழறிஞ்ஞர்"குட்டித்தொல்காப்பியம்"  என ஏற்றுக் கொண்டாடினர்.தமிழிலே உரையாடுவதும், எழுதுவதும்,ஒரேமாதிரி இல்லாமல் இருப்பதை வீரமாமுனிவர் நன்கு கவனித்திருக்கின்றார்.இதனால் - இலக்கியத் தமிழுக்கும்.. பேச்சுத்தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து அவற்றுக்கு எனத் தனித்தனியே - செந்தமிழிலக்கணமும், கொடுந்தமிழிலிலக்கணமும் எழுதினார்.
        இலக்கணத்தில் ஆர்வம் கொண்டு உழைத்த இவர் - மொழித் தொடர்புக்கான ஊடகம் என்ற முறையில் - அகராதி ஆக்கத்திலும் தனது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டினார்.இந்தவகையில் தமிழில் இவரால் படைக்கப்பட்டதே " சதுர் அகராதி" ஆகும். பின்னாளில் எழுந்த அகராதிகளுக்கெல்லாம் வழிகாட்டியாகவும்- முதல்நூலாகவும் அமைந்தது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதைவிட " தமிழ் இலத்தீன் அகராதி"  தமிழ்போர்த்துக்கீசிய " அகராதி ஆகியனவும் இவரது படைப்பாக வெளிவந்தன.      4400 சொற்களைக்கொண்டதாக ' தமிழ் போர்த்துக்கீசீய ' அகராதி விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் லத்தீன் - அகராதியில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் எழுதப்பட்டது. இம்முயற்சி - முதல் நடந்த முயற்சி ஆதலால் பலராலும் பாராட்டுக்கு உரியதாகி நிற்கின்றது எனலாம்.
       எங்கிருந்தோ வந்த ஒருவர் - எமது அன்னை மொழியாம் தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து - அதனைப் பற்றோடும் பாசத்தோடும் படித்திருக்கிறார். படித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது ஆராக காதலால் நாட்டு வேற்றுமையை, கலாசார வேற்றுமையை, மறந்தார்.தான் ஒரு இத்தாலியனாக இருந்தும் - பெயராலும்,பண்பாட்டாலும், தன்னை இன்பத்தமிழனாகவே ஆக்கிக் கொண்டார்.இதனால் இத்தாலியும் இன்பத்தமிழும் இணைந்தன.பெஸ்க்கி என்ற பாதிரியார் - தைரியநாதராகி - வீரமாமுனிவராகி - வளர்ந்த வரலாறு தமிழோடு கலந்த வாழ்வாகும். இப் பெரு மகனால் மேலை நாடான இத்தாலியும் கீழைநாடான தமிழ் நாடும் இணைந்து கொண்டதை மறக்க முடியுமா அல்லது மறைக்கத்தான் முடியுமா

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.