புதியவை

தேன் மலர்கள் - நூல் ஆய்வு கலாபூஷணம் ஏ.யூ.எம்.ஏ.கரீம்


நூல்:-தேன் மலர்கள்.

நூல் ஆசிரியர்:-கலைமகள் ஹிதாயா றிஸ்வி.

நூல் ஆய்வு:-கலாபூஷணம் ஏ.யூ.எம்.ஏ.கரீம்.


மீன்பாடும் தேன் நாடு கிழக்கிலங்கை 
கலைகளின் பிறப்பிடம் ,கவிகளின் இருப்பிடம்,
கலைமகளும், அலைமகளும் காவியம் துய்த்திடும்
கவின் சோலை. அவ்வண்ணச் சோலையில் பூத்து 
மனம் பரப்பும் மலர்கள் ஏராளம்! ஹிதாயா றிஸ்வியின் 
"தேன் மலர்கள்"இன்று ஒரு கன்னி வெளியீடு!

உள்ளத்துறைத்து,நெஞ்சில் ஊற்றெடுக்கும் 
கவிதை,தெள்ளத் தெளிந்த தமிழில் வெள்ளமென
வெளிவரும்,மீனாட்சி  சுந்தரனார் கூற்றுப்போல்,
வெறும் மாதுளம் பழக் கவிதைகளாக இல்லாமல்,
மாதுளையை உடைத்து ஒவ்வொரு தோலாக 
நீக்க மணிகள் வெளிவருதல் போல கவிதைகளில்
பொருளாழம் தெரிதல் வேண்டும்.

"சான்றோர் கவியெனக் கிடந்த 
கோதாவரியினை வீரர் கண்டார்" என்கிறான்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்,மேற்பார்வையில் 
ஆழம் தெரியாமலும்,உண்மையில் மிக்க
ஆழமானதுமான நதியை,சான்றோர் கவிக்கு
உவமை கூறினார்.

கணக்கில் குறித்த இலக்கம் பிசகாமல் 
இணைக்கப்படுதல்,அதைப்போல,இசைத்

துத்
தெளிவாக மினுக்கி, வகிர்த்து ,உணர்ச்சிப்
பெருக்கில் நனைந்து பி...ழி...ந்து கவியாகும்.

"பெருகிய உணர்வின் இறுகிய சிறைப்பிடிப்பே கவிதை
'உள்ளத்துள்ளது கவிதை,நெஞ்சில்
ஊற்றெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில்
நன்றாய்ச் செப்பிடல் கவிதை'"சுவை புதிது"
பொருள் புதிது,வளம் புதிது,சொற்புதிது,"சோதிமிக்க
நவகவிதை"எனப்பலவாறு கூறப்படும்.


மரபு வழி இலக்கியம் படைத்தல் என்றும்,
மரபும்,இலக்கணமும் கவிஞனைக் கட்டுப் படுத்தா
தென்றும் கருத்துக்கள் உள்ளன. எனினும் ஒரு
மொழிக்குள்ள கவிமரபே அதன் தனித்துவம்.அதனை
விடின் கவிதையின் கவர்ச்சிகுன்றும்.

கவிதைக்குத் தனிவடிவம் உண்டு.அதன்
உருவம் ஓசையில் (Rythm)அமையும்
ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி ஓசை
அமைதி உண்டு.பாட்டுப் பாடத் தெரிந்தோர்
யாவரும் கவிஞர்கள் இல்லை.ஆனால் கவிஞர்கள்
பாட்டுப் பாடத் தெரிந்தவரே.

கவிதை அதன் பொருட் சிறப்பால்
உயர்வு பெறும். அதனைச் சொல்லும் பாணியும்
அழகாயிருத்தல் வேண்டும். பழம் பாடல்களும்
ஓசைகளை அறிவுறுத்தும். ஒரு மாத்திரை தப்பின்
ஓசை கெடும்.

கவிதையில் யாப்பிலக்கணங்கள், எதுகை,
மோனை,அழகு அமைந்துள்ள சிறப்பை உணர்ந்து
இன்புறலாம்,ராகலட்சணம் தெரிந்தவர்
சங்கீதத்தை அனுபவிப்பது போல்,சிறந்த கருத்தும்
வடிவமும் பெற்ற பின்னரே அனுபவிக்க முடியும் .

அவ்வடிவம்"கலை"எனப்படும். கவிதையும்
ஒரு கலை.தன்னைப் படைத்தவன்(கவிஞன்)
தன்னுள் போதித்த உணர்ச்சிகளை மற்றவருக்கு
வழங்குதலே அதன் தொழில்.

சொற்கள் எங்கு தமக்கே உரிய பொருட்
செறிவு,எண்ணத்தைத் தோற்றுவிக்கும் சக்தி கொண்
டுள்ளனவோ, அங்கே கவிதைகளைக் காணலாம்
என்பர்.

இவ்வாறான அழகுத்  தோற்றங்களை இப்
பெண்ணின் கன்னி முயற்சியில் செறிவாகக் காணலாம்.
விரிவஞ்சி உதாரணத்திற்குச் சிலவற்றைக் காணலாம்.

குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்...
உதிரம் தன்னை தேயிலைக்கே-நல்ல
உரமாய் இட்டு வளர்ந்தனராம்
 மதுரமான தேனீரும் -அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்துவாம்
.

 நல்லோர்க்கே சொர்க்கம்..
பெண்ணே வாழ்வின் கண்ணாகும்-அவள்
பெருமையின் அளவோ விண்ணாகும்.
இன்னல் தன்னை அவர்க் கூட்டல்-உயர்
இஸ்லாத்திற்கு முரணாகும்
.
 நாங்கள்  
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும்?உயிரைத்தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு!

நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்தது நாம் உலவல் எல்லாம்
இனியுந்தான் மாறிடவே வழிகள் காண்போம்
.

                 


கல்வித் தாய் அருள வேண்டும்..
ஏற்றமுடனும் நான் செயும் பணியை சிலவோர்
இயலாமையால் இகழும் நிலையைக் கண்டேன்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்
தூய பணி புரிந்திடவும் சுடரைத்தாவேன்.
.


 ஒரு ஒற்றைக் குயிலின் ஓலம்.
சோலையிலே ஒரு ஒற்றைக் குயில்
சோகக் குரலில் கூவுதடி
மாலையிலும் அதிகாலையிலும் அது
வாடி மனம் வெந்து கூவுதடி.

விளையாட்டுக் கலை வளர்ப்போம்,அன்னை,
கேவலம் வேண்டாம்,தாய்த் தமிழே  வாழி
...இப்படி
பல கவிதைகள் சிறப்புற்று  விளங்கி இழையோடுகின்றன.

"திறமையான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்"என்று
பாரதி கூறியதற்கமைய, மற்றவரும் போற்றும்
வண்ணம்"கலைமகள் ஹிதாயா றிஸ்வி"இன்னும்
பல கவிதை வடிவங்களைப் படைக்க வேண்டும்.
இப்பெண்ணின் முயற்ச்சிக்கு தமிழ் கூறும்
நல்லுலகம் நல்லாதரவு தர
வேண்டி வாழ்த்துகின்றேன்.


மேலும் பல செல்வங்களுடன்
கவிதைச் செல்வங்களையும்,அதிகம்,அதிகம்
பெற்று தமிழன்னைக்கு ஈதல் வேண்டும்.
நீண்ட வாழ்வும்,நிறை சுகமும்
"கலைமகள்  ஹிதாயா றிஸ்வி"பெற்றின்புற
அருட் பெருங் கடலான அல்லாஹ்வைப்
பிராத்திக்கின்றேன்.நூல் ஆய்வு:-கலாபூஷணம் ஏ.யூ.எம்.ஏ.கரீம்.
இன்று உயிரோடு இல்லை இவர் நினைவு தினம் இன்று

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.