புதியவை

நாம்நினைப்போம் ! ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )

     நாம்நினைப்போம் !

      
          ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )  உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும்

கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம் வாழ்கிறது 

 வள்ளுவரின் கவிதையின்று வைகத்தில் நிலைப்பதற்கு 

 கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே !

  எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை
  
  என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார் 
  
  நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின்
  
  நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார் !

  சங்ககால கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின்
   
  இங்கிதமாய் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம்
  
  எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய்
  
  இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம் ! 


   சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும் அரவணைத்து
  
   சுந்தரந்தமிழ் கொண்டு செப்பிநின்ற கவிதையது 
  
   இப்பொழுது அவையாவும் எல்லோரும் படிக்காமல்

   எம்மேக்கும் பீயேக்கும் எடுக்கின்றார் படிப்பதற்கே !

 
    பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பாடமாய்

    பண்டிதர்க்கும் புலவர்க்கும் பரீட்சிக்கும் புத்தகமாய்

    பண்டைத் தமிழிலக்கியங்கள் இருக்கின்ற பாங்கினையே

    பார்க்கின்றோம் எனநினைக்கில் பரிதாபம் எழுகிறது !

 
    சங்கத் தமிழ்படித்தால் சரியான கவிதைவரும்
 
    பொங்கிவரும் தமிழுணர்வை புதுவழியில் செலுத்திடலாம்
 
    கவிதையெனும் பெயர்சூடி வருகின்ற கவிதையெலாம்

    காலமென்னும் வரலாற்றில் காணாமல் போய்விடுமே !

  
     சாகாத இலக்கியங்கள் நாம்படைக்கத் தேவையில்லை
  
     மனம்நோவாத இலக்கியக்கியங்கள் படைத்துவிட நினைத்திடுவோம்

     வாழ்நாளை வளமாக்கும் வகையிலே படைத்துவிடின்

     வரவேற்று அனைவருமே வாரியே அணைத்திடுவார் !

  
     புழுதியிலே புரழுகின்ற இலக்கியங்கள் புறந்தள்ளி
  
     பழுதில்லா வகையான இலக்கியங்கள் படைத்தளிப்போம்
  
      நிலவுலகில் யாவருமே நினைந்துநிற்கும் வகையினிலே

      நலமுடைய இலக்கியங்கள் படைதளிக்க நாம்நினைப்போம் !


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.