புதியவை

பயன்மிகுந்து நிற்குதன்றோ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

பயன்மிகுந்து நிற்குதன்றோ !
                                     *************************
 
            [ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]
    

        வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்
                 தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது
         அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால் 
                 நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம் 
          கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்
                 நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது 
           உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்
                 இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !


          பலநூல்கள் வந்தாலும் பாரில்நிலை நிற்கின்ற 
               பக்குவத்தைப் பெறுவதற்கு பக்குவமும் வேண்டுமன்றோ
          குறள்வந்த காலம்முதல் தலைநிமிர்ந்து நிற்குதென்றால்
                அதுகூறும் அத்தனையும் அனைவருக்கும் பொருந்துவதே 
          நிலையான அத்தனையும் குலையாமல் கூறுவதால் 
                 தலையாய நூலாகக் குறளொன்றே திகழ்கிறது
          தொலைநோக்குப் பார்வையுடன் சொல்லிநிற்கும் கருத்தாலே
                   நிலையாக நிற்கும்குறள் நெஞ்ஞமெலாம் நிறைந்திருக்கு !


          ஈரடியால் பலகருத்தை இலகுவாய் சொன்னகுறள் 
                  எல்லோரின் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் இருக்குதன்றோ 
         பாரிலுள்ள பலபுலவர் பலகருத்தைப் பகர்ந்திடினும்
                  சீரான நூலாகத் திருக்குறளே திகழுதன்றோ 
         கார்கொண்ட மேகமெனக் கருத்துமழை பொழியும்குறள்
                 யார்மனதும் நோகாமல் நற்கருத்தைப் பாய்ச்சுதன்றோ 
          வேருக்கு   நீராக  வீரியமாய் நிற்கும்குறள் 
                   பாருக்கு வந்ததனால் பயன்மிகுந்து  நிற்குதன்றோ !

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.